Published : 29 Oct 2018 22:24 pm

Updated : 29 Oct 2018 22:37 pm

 

Published : 29 Oct 2018 10:24 PM
Last Updated : 29 Oct 2018 10:37 PM

ரோஹித் சர்மா, ராயுடு அற்புத சதங்கள், கலீல், குல்தீப் பிரமாதம்; அபார ரன் அவுட்கள்: மே.இ.தீவுகளுக்கு பதிலடி; இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி

மும்பையில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புனே தோல்விக்கு பதிலடி கொடுத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இன்னும் ஒரு போட்டியே இருப்பதால் இந்திய அணி தொடரை இழக்க வாய்ப்பில்லை, மேற்கிந்திய அணி வென்றால் தொடர் ஒரு அரிய ட்ராவாகும். ஆனால் இன்று வாங்கிய மிகப்பெரிய உதை அவர்களை அடுத்த போட்டிக்குள் எழும்பச் செய்யுமா என்பது கேள்வியே.


டாஸ்வென்று பேட் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா (162), ராயுடு (100) ஆகியோரது 211 ரன்கள் கூட்டணியினால் 377 ரன்களைக் குவித்தது, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி தத்துப்பித்து ரன் அவுட்களினாலும் கலீல் அகமட், குல்தீப் யாதவ் வீச்சினாலும் 77/7 என்று சரிந்து கடைசியில் போராளி கேப்டன் ஜேசன் ஹோல்டரின் 54 நாட் அவுட்டுடன் 36.2 ஓவர்களில் 153 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 224 ரன்களில் பெரிய தோல்வி கண்டது. இந்தியா தரப்பில் கலீல் அகமட் 13/3 என்றும் குல்தீப் யாதவ் 42/3 என்று அசத்தினர். இது இந்தியாவின் 3வது மிகப்பெரிய வெற்றி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் 2வது மிகப்பெரிய தோல்வி.

ஒரு மாற்றத்துக்காக விராட் கோலி 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். கோலி ஆட்டமிழந்தால் நமக்கு கதவுகள் திறக்கும் என்று நினைத்தனர், ஆனால் ரோஹித் சர்மா நங்கூரம் பாய்ச்ச, ராயுடு நடு ஓவர்களில் மே.இ.பவுலர்களை கடுமையாகச் சோதித்தார், கிரீசை பயன்படுத்தி ஆடினார், மேலேறி வந்து ஆடினார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி வந்த வண்ணம் இருந்தன. ரோஹித் சர்மா 60 பந்துகளில் அரைசதம் எடுக்க ராயுடு 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கடந்தார். ஆனால் இதற்கு முன்னதாகவே 99 பந்துகளில் 3வது விக்கெட்டுக்காகக் கூட்டணி அமைத்த ராயுடு 100 ரன்களைச் சேர்த்திருந்தனர். இந்திய அணி மொத்தம் 40 பவுண்டரிகள் 10 சிக்சர்கள் என 220 ரன்களை பவுண்டரிகளிலேயே குவித்ததால்தான் ஸ்கோர் 377 ரன்களை எட்டியது.

 

ரோஹித் சர்மா 98 பந்துகளில் சதம் கண்டவர் 131 பந்துகளில் 150 ஐ எட்டினார். சரி 4வது இரட்டைச் சதம் தான் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 137 பந்துகளில் 20 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 162 ரன்கள் எடுத்து ஷார்ட் தேர்ட்மேனில் நர்ஸ் பந்தை ஹேம்ராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். அம்பாத்தி ராயுடு 80 பந்துகளில் 8பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து ஆலன் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். தோனி ஒரு அருமையான யார்க்கர் ஸ்கொயர் ட்ரைவ், ஆப் திசை மற்றும் லெக் திசையில் ஒரு லோ புல்டாஸை பவுண்டரி என்று 15 பந்துகளில் 23 எடுத்து 10,000 ரன்னுக்கு ஒரு ரன் இருக்கும் போது துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஜாதவ் கடைசியில் நன்றாக பினிஷ் செய்ய ஜடேஜா 7, ஜாதவ் 16 என்று இந்திய அணி 377 ரன்கள் குவித்தது.

மேற்கிந்திய அணியில் கிமோ பால் அதிகபட்சமாக 88 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும், கிமார் ரோச் 74 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். போவெல் 4 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்தார் அவரை ஏன் தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை. ஹோல்டர் 9 ஓவர்களில் 62 ரன்கள் விக்கெட் இல்லை.

பித்துப் பிடித்த ரன் அவுட்கள், நல்ல பீல்டிங், கலீல் அகமட் ஸ்விங்; சரிந்த மே.இ.தீவுகள்:

ஹேம்ராஜ் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்திருந்த போது ராயுடுவின் அற்புத கேட்சுக்கு குமாரிடம் வெளியேறினார். ஷேய் ஹோப் மீது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப் நிச்சயம் இருக்கவே செய்யும் அவர் ஒரு சதம் 95 என்று அசத்திய வீரர், ஆனால் இன்று ரன் எடுக்காமல் பேக்புட்டில் ஆடிவிட்டு ஒரு ரன்னுக்காக முயற்சிக்கையில் மிட் ஆனிலிருந்து குல்தீப் த்ரோவுக்கு ரன் அவுட் அனார்.

அடுத்ததாக சாமுவேல்ஸ் டிபன்ஸ் ஆட பந்து கோலியிடம் சென்றது, கெய்ரன் போவெல் எதிர்முனையிலிருந்து ரன்னுக்காக கிளம்பினார். கவரிலிருந்து ரிவர்ஸ் த்ரோ அடித்தார் கோலி ரன் அவுட் ஆனது. கலீல் அகமட் பந்துகளை நன்றாக ஸ்விங் செய்தது இந்தப் பிட்சிலும் வெள்ளைக் கூகபரா பந்திலும் ஆச்சரியமே, அவர் அபாய வீரர் ஹெட்மையர், ரோவன் போவெல் ஆகியோரை வீழ்த்தியதோடு சாமுவேல்ஸை ஒர்க் அவுட் செய்து வீழ்த்தினார் பந்தை உள்ளே கொண்டு வந்து கொண்டிருந்தவர் ஒரு பந்தை வெளியே எடுக்க சாமுவேல்ஸ் எட்ஜ் செய்ய ரோஹித் சர்மா கேட்ச் எடுத்தார்.

ஆலன்,நர்ஸ், கிமார் ரோச் ஆகியோரை குல்தீப் ஒன்றுமில்லாமல் செய்ய கிமோ பால் மட்டும் 1 பவுண்டரி 2 சிக்சர் என 19 ரன்களுக்கு ஆக்ரோஷம் காட்டினார், ஆனால் அவர் ஜடேஜாவின் பந்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்குக்கு இரையானார். போராளி ஜேசன் ஹோல்டர் மட்டும் ஒரு முனையில் அற்புதமாக ஆடி 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 36.2 ஓவர்களில் மே.இ.தீவுகள் 153 ஆல் அவுட். ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா.


தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x