Published : 14 Oct 2018 03:49 PM
Last Updated : 14 Oct 2018 03:49 PM

100 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனை: வரலாறு படைத்தார் ஜேஸன் ஹோல்டர்

ஹைதராபாத்தில் நடந்து வரும் இந்தியஅணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் கேப்டனும், வேகப்பந்துவீச்சாளருமான ஹோல்டர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 100 ஆண்டுகளில் எந்த வீரரும் செய்யாத சாதனையைப் படைத்தார்.

கடந்த 100 ஆண்டுகளில் எந்த வேகப்பந்துவீச்சாளரும் ஒரு காலண்டர் ஆண்டில் குறைந்த போட்டியில் 30 விக்கெட்டுகளுக்கு அதிகமாகவும், பந்துவீச்சு சராசரி குறைவாகவும் யாரும் வைத்திருக்கவில்லை. அதை ஹோல்டர் வைத்துள்ளார்.

ஜேஸன் ஹோல்டர் இந்த 2017-18 காலண்டர் ஆண்டில் 6 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரின் பந்துவீச்சு சராசரி 11.87 ஆகும் இந்தப் பந்துவீச்சு சராசரியைக் கடந்த 50 ஆண்டுகளில் எந்த வேகப்பந்துவீச்சாளரும், சுழற்பந்துவீச்சாளரும் வைத்திருக்கவில்லை. கடைசியாகப் பந்துவீச்சு சராசரி 15க்கும் குறைவாகவும், 30-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும் 2003-ம் ஆண்டு பாகிஸ்தானின் சோயிப் அக்தர் வீழ்த்தியிருந்தார். ஆனால், அவரின் 12.36 சராசரியையும் ஹோல்டர் முறியடித்துவிட்டார்.

மேலும், கடந்த 1994-ம் ஆண்டு மொஹாலியில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் வீரர் கென்னி பெஞ்சமின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதன்பின் கடந்த 24 ஆண்டுகளாக எந்த மேற்கிந்தியத்தீவுகள் பந்துவீச்சாளரும் இந்திய மண்ணில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. ஏறக்குறைய 24 ஆண்டுகளுக்குப் பின் ஹோல்டர் ஹைதராபாத் டெஸ்ட்போட்டியில் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

2018-ம் ஆண்டில் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் களமிறங்கிய மே.இ.தீவுகள் வீரர் ஹோல்டர் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றுவது இது 4-வது முறையாகும். அதிலும் தொடர்ந்து 3-வது முறையாக 5- விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2000-ம் ஆண்டு வால்ஷ்க்கு பின் ஒரே காலண்டர் ஆண்டில் 4 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது வீரர் ஹோல்டர் என்பது குறிப்பிடத்தக்குது. அதுமட்டுமல்லாமல், கடந்த 10 ஆண்டுகளில் ஒரே காலண்டர் ஆண்டில் 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது கேப்டன் எனும் பெருமையையும் ஹோல்டர் பெற்றுள்ளார்.

 

இந்தியாவில் வந்து விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 5-வது கேப்டன், பந்துவீச்சாளர் ஹோல்டர் ஆவார். இதற்கு முன் கடைசியாக 2010-ம் ஆண்டு பயணத்தில் நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதற்கு முன், ரிச்சி பெனாட் இருமுறையும், பஸல் மமூத், கர்ட்னி வால்ஷ் ஒருமுறையும் செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நடந்துவரும் 2-வது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்கில் இந்திய அணி பெற்ற 56 ரன்கள் முன்னிலையே கடந்த 6 போட்டிகளில் மிகவும் குறைவாகும். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணியின் சராசரி முன்னிலை ரன்கள் 292 ஆகும். கடந்த 6 டெஸ்ட்களில் 219, 313, 323, 304, 128, மற்றும் 468 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x