Published : 27 Oct 2018 12:58 PM
Last Updated : 27 Oct 2018 12:58 PM

‘3வது நடுவர் தவறான பட்டனை அழுத்திவிட்டார்’: டி20 தோல்விக்குப் பிறகு ஆஸி. வீரர்கள் கடும் ஆத்திரம்; சர்பராஸ் பதிலடி

துபாயில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்தது, ஆனால் இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 136/8 என்று 11 ரன்களில் தோல்வி அடைந்தது. கிளென் மேக்ஸ்வெல் 52 ரன்களையும், கூல்டர் நைல் 27 ரன்களையும் மிட்செல் மார்ஷ் 21 ரன்களையும் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான், ஷாஹின் ஷா அப்ரீடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இமாத் வாசிம், மொகமது ஹபீஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக 4-1-8-1 என்று அசத்திய இமாத் வாசிம் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில் கடும் சர்ச்சை ஒன்று எழுந்தது. ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டி ஆர்க்கி ஷார்ட் ரன்னர் முனையில் ரன் அவுட் ஆன சம்பவமே அது.

 

ஆஸி. இன்னிங்சின் 3வது ஓவர் கடைசி பந்து, இமாத் வாசிம் வீச ஏரோன் பிஞ்ச் அடித்த ஷாட் இமாத் வாசிம் கையில் பட்டு ஸ்டம்பில் பட்டது. பாகிஸ்தான் முறையீடு செய்ய 3வது நடுவர் போதிய ஆதாரம் இன்றியே ஷார்ட் ரன் அவுட் என்று தீர்ப்பளித்தார். அதாவது ஷார்ட்டின் மட்டை தரையில் இருந்ததா மேலே இருந்ததா என்பது ரீப்ளேயில் சரியாக, உறுதியாகத் தெரியவில்லை இதனையடுத்து பிஞ்ச் நடுவர்களுடன் பேசினார், ஷார்ட்டினால் நம்பமுடியவில்லை.

ஷார்ட்டின் மட்டை கிரீஸுக்கு மேல் இருந்தது ஆனால் தரையில் இல்லை, ரன் அவுட் என்று தீர்ப்பானது என்று கிரிக் இன்போ வர்ணனை கூறுகிறது. ஆனால் ஷார்ட்டின் பேட் கிரீசுக்குள் இருந்ததாகவே ஆஸ்திரேலியர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து ஆஸி.வீரர் கூறியதாவது:

கிளென் மேக்ஸ்வெல்: ஷார்ட்டின் மட்டை நிச்சயமாக பந்து ஸ்டம்பை அடிக்கும்போது தரையூனப்பட்டு விட்டது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், 3வது நடுவர் தவறாக அவுட் பொத்தானை அழுத்திவிட்டார் போலும். முதலில் நாங்கள் தவறாக நினைத்தோம், அதன் பிறகு ரீப்ளேக்களைப் பார்த்த போது ஷார்ட் ரீச் ஆனது தெளிவாகத் தெரிந்தது.

ஓய்வறையில் எங்களுக்கு அது நாட் அவுட் என்பதில் எந்தவித ஐயமும் ஏற்படவில்லை. மேலும் அவர் பேட்டைக் கையில் வைத்திருந்த விதத்தைப் பார்த்தால் அந்த நிலையில் கிரீசுக்கு மேல் காற்றில் தொங்கவிட வாய்ப்பேயில்லை. என்றார் மேக்ஸ்வெல்.

இதற்கிடையே, சர்பராஸ் அகமது கூறும்போது, “தெளிவான ரன் அவுட் மீது எதற்கு இத்தனை கூப்பாடு, கூச்சல்” என்று கேட்டுள்ளார். “அவர் மட்டை தரையில் இல்லை” என்கிறார் சர்பராஸ் திட்டவட்டமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x