

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து, மும்பை, புணேயில் சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி அகாடமியைத் தொடங்கி உள்ளார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்து கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு மக்கள் சேவையில் ஈடுபட்டார். இந்நிலையில், தன்னுடைய பால்ய நண்பர் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து சிறுவர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி அகாடமியைத் தொடங்க உள்ளார்.
இதற்காக லண்டனில் உள்ள மிடில்செஸ் கவுண்டி அணியுடன் இணைந்து பயிற்சி அகாடமியை சச்சின் நடத்த உள்ளார். இதற்கு டெண்டுல்கர் மிடில் செக்ஸ் கிரிக்கெட் அகாடமி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நவம்பர் 1 முதல் 4-ம்தேதி வரை டி.ஒய் பாட்டீல் அரங்கில் முதல்கட்டப் பயிற்சி நடக்கிறது. இரண்டாவதாக எம்ஐஜி கிளப்பில் நவம்பர் 6 முதல் 9-ம் தேதி வரையிலும் நடக்கிறது. 7 வயது முதல் 17 வயது, 13 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்பட்டுத் தேர்வு செய்யப்படுகிறார்கள். புனே நகரில் உள்ள பிஷப் பள்ளிக்கூடத்தில் நவம்பர் 12 முதல் 15-ம் தேதி வரையிலும், 17 முதல் 20-ம் தேதி வரையிலும் பயிற்சி அகாடமி நடக்கிறது.