Published : 15 Aug 2014 10:00 AM
Last Updated : 15 Aug 2014 10:00 AM

தொடரை சமன் செய்யுமா இந்தியா? - 5-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து இந்தப் போட்டியை டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றிவிடலாம். ஆனால் இந்திய அணியோ தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பை ஏற்கேனவே இழந்துவிட்டது. அதேநேரத்தில் தொடரை சமனில் முடிக்கவேண்டுமெனில் 5-வது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும்.

இஷாந்த் களம் இறங்குகிறார்

கடந்த இரு போட்டிகளில் தோல்வி கண்டுள்ள இந்திய அணி கடும் நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்குகிறது. காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இந்தப் போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் வருகை மட்டுமே இந்திய அணிக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம். இஷாந்த் சர்மா களமிறங்கினால் பங்கஜ் சிங் நீக்கப்படுவார் என தெரிகிறது.

இதேபோல் தொடர்ந்து தடுமாறி வரும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரான ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்படலாம். ஜடேஜா பந்துவீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும், அவருடைய பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தடுமாறும் புஜாரா, கோலி

கடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணியின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. தொடக்க வீரர்கள் கௌதம் கம்பீர், முரளி விஜய் ஆகியோர் சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுப்பது முக்கியமானது. மீண்டும் அணிக்குத் திரும்ப போராடிக் கொண்டிருக்கும் மூத்த வீரரான கம்பீருக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். ஒருவேளை அவர் இந்தப் போட்டியில் ஜொலிக்காமல்போனால் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமாகும் நிலை ஏற்படலாம்.

மிடில் ஆர்டரில் புஜாரா, விராட் கோலி இருவரும் தொடர்ந்து சொதப்பி வருவது கவலையளிக்கிறது. கடந்த 4 போட்டிகளிலும் சேர்த்து புஜாரா 207 ரன்களும், விராட் கோலி 108 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர். எனவே இவர்கள் பார்முக்கு திரும்பினாலொழிய இந்தியா ரன் குவிப்பது கடினம். அஜிங்க்ய ரஹானே, கேப்டன் தோனி ஆகியோர் மட்டுமே இந்திய அணியின் பேட்டிங்கிற்கு ஓரளவு பலம் சேர்த்து வருகின்றனர்.

5 பவுலர்கள்

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், வருண் ஆரோன், அஸ்வின் ஆகியோர் உறுதியாக இடம்பெறுவார்கள். இஷாந்த் சர்மாவின் வருகை இந்திய பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர், ஆரோன் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருவதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியும் என நம்பலாம். 5-வது பவுலராக ஜடேஜா அல்லது ஸ்டூவர்ட் பின்னிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

பலம் வாய்ந்த இங்கிலாந்து

கடந்த இரு போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையோடு இந்தப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும். அந்த அணியின் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே மிக வலுவாக உள்ளன. தொடக்க ஆட்டக்காரர் சாம் ராப்சன் மட்டுமே தொடர்ந்து தடுமாறி வருகிறார். மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் அவர் நீக்கப்படலாம் என தெரிகிறது. வருண் ஆரோன் பந்துவீச்சில் மூக்குடைபட்ட வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் இந்தப் போட்டியில் களமிறங்குவார் என தெரிகிறது.

இங்கிலாந்து அணி கேப்டன் குக், இயான் பெல், கேரி பேலன்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர் என பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கேரி பேலன்ஸ் இந்தத் தொடரில் 2 சதம், ஒரு அரைசதத்துடன் 439 ரன்கள் குவித்துள்ளார்.

மிரட்டும் மொயீன் அலி

பந்துவீச்சில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி ஆகியோர் இங்கிலாந்தின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். கடந்த இரு போட்டிகளில் இந்தியாவின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இருந்த மொயீன் அலி, இந்தப் போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடிகொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டர்சன் இதுவரை 21 விக்கெட்டுகளும், மொயீன் அலி 19 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

அடுத்த மைல்கல்லில் தோனி

இந்தப் போட்டியோடு சேர்த்து வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் 28-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுகிறார் தோனி. இதன்மூலம் வெளிநாட்டு மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் (28) இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்கிறார் தோனி.

அந்நிய மண்ணில் கங்குலி தலைமையிலான இந்திய அணி 11 வெற்றிகளையும் 10 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. எஞ்சிய 7 போட்டிகள் டிராவில் முடிந்தன. தோனி தலைமையிலான இந்திய அணி இதுவரை 27 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும், 8 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. எஞ்சிய 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவன், முரளி விஜய், கௌதம் கம்பீர், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, ஸ்டூவர்ட் பின்னி, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஈஸ்வர் பாண்டே, பங்கஜ் சிங், வருண் ஆரோன், நமன் ஓஜா.

இங்கிலாந்து: அலாஸ்டர் குக் (கேப்டன்), மொயீன் அலி, ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் ஜோர்டான், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் ராப்சன், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் ஃபின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x