

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பல லெஜண்ட்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களைப்போலவே நட்சத்திர அந்தஸ்துக்கு உயரும் வீரர்களுக்காக அந்நாட்டு ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
இன்னொரு மெக்ரா, இன்னொரு பாண்டிங், இன்னொரு கில்கிறிஸ்ட், இன்னொரு ஷேன் வார்ன், இன்னொரு மார்க் வாஹ், இன்னொரு ஸ்டீவ் வாஹ் என்று அந்நாட்டு ரசிகர்களின் ஏக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் அடுத்த வளரும் நட்சத்திரம் என்று பெயர் பெற்றவர் விக்டோரியா பேட்ஸ்மென் வில் பியூகோவ்ஸ்கி . ஆஸி. உள்நாட்டு கிரிக்கெட்டில் பிரமாதமான, வலுவான அணியான மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகக் கடந்த வாரம் பியூகோவ்ஸ்கி 243 ரன்களை விளாசினார். இவருக்கு வயது 20 மட்டுமே. இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 7 முதல்தர போட்டிகளில் இவரது சராசரி 52.00
இந்நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களாக ‘மனநல’ பிரச்சினைகள் இருந்து வருவதால் காலவரையற்று கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியுள்ளார் என்று கிரிக்கெட் விக்டோரியா அறிக்கை ஒன்றில் தெரிவிக்க, இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
அதிவேக பெர்த் பிட்சில் நாள் முழுதும் ஆடிய வில் பியூகோவ்ஸ்கி 313 பந்துகளில் 243 ரன்கள் எடுத்தார். ரிக்கி பாண்டிங்குக்குப் பிறகு ஷெபீல்டி ஷீல்ட் கவுண்டி போட்டியில் இரட்டைச் சதம் எடுத்த இளம் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக் காரர் ஆனார் பியூகோவ்ஸ்கி.
இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ‘அடுத்த பெரிய வீரர்’, ‘வளரும் நட்சத்திரம்’ விரைவில் ஆஸி.அணிக்குள் நுழைந்து விடுவார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் விதந்தோதி எழுதின. கடந்த ஷெபீல்ட் ஷீல்டின் குவீன்ஸ்லாந்துக்கு எதிராக 188 ரன்கள் எடுத்த போதே இவரது ஆட்டத்திறன் மீது பெரிய நம்பிக்கையை பண்டிதர்கள் வெளிப்படுத்தினர்.
அநேகமாக இந்தியாவுக்கு எதிரான தொடருக்கே வில் பியூகோவ்ஸ்கி அணியில் தேர்வாகலாம் என்ற நிலையில் விக்டோரியா கிரிக்கெட் சங்கம், “வில் பியூகோவ்ஸ்கி ஒரு அதியற்புத வீரர், இவருக்கு தற்போதைக்கு மன ரீதியான சிக்கல்கள் இருப்பதால் சிகிச்சை தேவைப்படுகிறது, ஆகவே அவர் காலவரையறையற்ற ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் திரும்புவார், அவருக்கு என்ன உதவி வேண்டுமோ அதனை கிரிக்கெட் விக்டோரியா மேற்கொள்ளும்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அந்த 243 ரன்களுக்குப் பிறகே அவர் மனத்தளவில் களைப்படைந்து விட்டார் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.
ஆகவே அவருக்குத் தேவை சிறிது இடைவெளி, என்று கிரிக்கெட் விக்டோரியா பியூகோவ்ஸ்கியை போற்றிப் பாதுகாக்க முடிவெடுத்துள்ளது.
slut shaming என்பது எனக்குப் புதிதல்ல: #MeToo லீனா மணிமேகலை Exclusive