Last Updated : 27 Oct, 2018 08:47 AM

 

Published : 27 Oct 2018 08:47 AM
Last Updated : 27 Oct 2018 08:47 AM

தோனி நீக்கம்: மே.இ.தீவுகள், ஆஸி. டி20 தொடருக்கு இல்லை: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு, புதிய மாற்றங்களுடன் அணி அறிவிப்பு

புனே

மேற்கிந்தியத்தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இருந்து எம்.எஸ்.தோனி நீக்கப்பட்டுள்ளார். தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

தோனியை அணியில் இருந்து நீக்கி தேர்வுக்குழு எடுத்த முடிவு மிகவும் துணிச்சலானது. அதேசமயம் காலம் கருதி எடுத்த அவசியமான முடிவும் கூட. தோனி என்ற ஒற்றை மனிதருக்காக ஏராளமான இளம் வீரர்கள் விக்கெட் கீப்பிங், பேட்டிங் வாய்ப்பு அணியில் கிடைக்காமல் இருந்தநிலையில், அவர்களின் திறமையை நிரூபிக்கவும், அணிக்கு புதுரத்தம் பாய்ச்சவும் இந்த முடிவு உதவும் என நம்பலாம். உலகக் கோப்பை போட்டி நெருங்கும் நிலையில், இந்திய அணி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

டி20-க்கான இந்திய அணியில் இருந்து எம்எஸ் தோனியை மெல்ல ஓரம்கட்டும் பணி தொடங்கிவிட்டது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார். ஆஸ்திரேலிய டெஸ்ட், மற்றும் டி20 தொடருக்கு மீண்டும் கோலி வந்துவிடுவார்.

டி20 தொடர் தொடங்கியதில் இருந்த பெரும்பாலான போட்டிகளில் கூல் கேப்டன் தோனி இடம் பெற்று வந்தநிலையில், முதல்முறையாக டி20 அணியில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். ஏறக்குறைய தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை மெல்ல முடிவுக்கு வருகிறது.

அடுத்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுவதற்கு நீண்ட காலம் ஆகும். நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி பிப்ரவரி மாதம் இருப்பதால், ஏறக்குறைய அடுத்து 4 மாதங்களுக்கு தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓரம் கட்டப்படுகிறார்.

அதேசமயம் டி20 போட்டிக்கு தோனி தேர்வு செய்யப்படவில்லை என்பதால், டி20 போட்டியில் தோனியின் கிரிக்கெட்வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்று அர்த்தமல்ல. மாற்று கீப்பர்களை தேட வேண்டிய நேரம் வந்துள்ளது என்பதால், தினேஷ் கார்த்திக், ரிஷாப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டி20 போட்டி தொடங்கியதில் இருந்து இந்திய அணி ஏறக்குறைய 104 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 93 போட்டிகளில் தோனி இடம் பெற்றிருந்தார். ஆனால், முதல்முறையாக அணியில் இருந்து தோனி நீக்கப்படுகிறார்.

தோனி இதுவரை டி20 போட்டியில் 1,487 ரன்களும், 127ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார். 54 கேட்சுகளும், 33 ஸ்டெம்பிங்களும் தோனி செய்துள்ளார். ஐபிஎல் போட்டியின் 11 சீசன்களிலும் விளையாடியுள்ள தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், புனே சூப்பர் ஜெயின்ட் அணியிலும் இடம் பெற்றார். இருமுறை சிஎஸ்கே கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டம் பெற்றுக்கொடுத்துள்ளார். இந்திய அணிக்கு டி20 உலகக்கோப்பையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டி, ஆஸ்திரேலியாவில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், டி20 தொடர் ஆகியவற்றுக்கான வீரர்களை தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்.கே பிரசாத் தலைமையிலான குழு நேற்று தேர்வு செய்தது.

இதில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடர், ஆஸிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். விராட் கோலிக்கு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரன டி20 தொடருக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியத் தொடரி்்ல் இடம் பெறுவார்.

தோனி நீக்கப்பட்டுள்ளதையடுத்து, அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை இன்னும் முழுமையாக குணமடையாதநிலையில், அவர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான டி20, ஆஸ்திரேலிய தொடர் ஆகியவற்றுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடர் நவம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது.

இதில் மும்பை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் மேற்கிந்தியத்தீவுகள், ஆஸ்திரேலியத் தொடரில் டி20 போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்திய ஏ அணியில் சிறப்பாக பந்துவீசிய “லெக் ஸ்பின்னர்” ஷபாஸ் நதீம் ேமற்கிந்தியத்தீவுகள் டி20 தொடருக்கு மட்டும் வாய்ப்புப் பெற்றுள்ளார்.

மேலும், குல்தீப் யாதவ், யஜுவேந்திர சாஹல், குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் மே.இ.தீவுகள், ஆஸி டி20 தொடரில் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஆகியோருடன் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் கலீல் அகமது, உமேஷ் ஆகியோர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

அதேசமயம், தீபக் சாஹர், சித்தார்த் கவுல் ஆகியோர் ஓரம்கட்டப்பட்டனர். மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது போட்டியில் தேர்வு செய்யப்படாத கேதார் ஜாதவ் உடல்தகுதி பெற்றதையடுத்து, 4,5-வது ஒருநாள் போட்டிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மே.இ.தீவுகள், ஆஸி டி20 தொடருக்கு இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், கலீல் அகமது, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, ஷான்பாஸ் நதீம் மே.இ.தீவுகள் மட்டும்சேர்ப்பு) ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், தீபக் சாஹர், எம்.எஸ்.தோனி, சித்தார்த் கவுல், ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி(மே.இ.தீவுகள் மட்டும் இல்லை) ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்(மே.இ.தீவுகள் டி20 போட்டி)

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல்,தினேஷ் கார்த்திக் மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், நதீம்

இந்திய அணி விவரம்(ஆஸி.டி20 தொடர்)

விராட் கோலி(கேப்டன்) ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல்,தினேஷ் கார்த்திக் மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), குர்னல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x