Published : 14 Oct 2018 12:49 AM
Last Updated : 14 Oct 2018 12:49 AM

ஆசிய பாரா விளையாட்டு போட்டி: 72 பதக்கங்களுடன் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தது இந்தியா

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி நாளான நேற்று இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் 72 பதக்கங்களுடன் இந்தியா தொடரை நிறைவு செய்தது.

பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் கடந்த 6-ம் தேதிதொடங்கியது. 43 நாடுகளில் இருந்து 2,831 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த தொடர் நேற்று நிறைவடைந்தது. கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் இரு தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. ஆடவருக்கான பாட்மிண்டனில் எஸ்எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதி சுற்றில் 21-19, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் யுகுன் ருகேன்டியை வீழ்த்தி தங்கம் வென்றார். இதேபோல் எஸ்எல் 4 பிரிவில் நடைபெற்ற பாட்மிண்டனில் இந்தியாவின் தருண் 21-16, 21-6 என்ற நேர் செட்டில் சீனாவின் யுயங் காவோவை வீழ்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

ஒட்டுமொத்தமாக இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தது. கடந்த2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா 3 தங்கம், 14 வெள்ளி,16 வெண்கலத்துடன் மொத்தம் 33 பதக்கங்களே கைப்பற்றியிருந்தது. வழக்கம் போல் சீனாவே இம்முறையும் முதலிடத்தை தட்டிச் சென்றது. சீனா 172 தங்கம், 88 வெள்ளி, 59 வெண்கலம் என 319 பதக்கங்களை வேட்டையாடியது. தென் கொரியா 53 தங்கம், 25 வெள்ளி, 47 வெண்கலம் என 145 பதக்கங்கள் வென்று 2-வது இடத்தையும், ஈரான் 51 தங்கம், 42 வெள்ளி, 43 வெண்கலம் என 136 பதக்கங்கள் வென்று 3-வது இடத்தையும் பிடித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x