

மும்பையில் நேற்று மே.இ.தீவுகளுக்கு எதிராக 80 பந்துகளில் சதம் எடுத்த ராயுடு, ரோஹித் சர்மாவுடன் இரட்டைச் சத கூட்டணி அமைத்தார்.
சமீபமாக இந்திய அணி 4ம் நிலையில் இறங்க பலரை முயற்சி செய்து வருகிறது, இதில் ராயுடு நிலைப்பார் என்ற நம்பிக்கையில் அவரை சில போட்டிகளாக 4ம் நிலையில் ஆட அழைத்துள்ளது, அவரும் இதுவரை சரியாகவே ஆடி வருகிறார்.
மேலும் 4ம் நிலையில் முக்கியமான விஷயம் என்னவெனில் மிடில் ஓவர்களில் களவியூகம் பவுண்டரி அடிக்க ஏற்றதாக இல்லாத போது ரன்களை விரைவில் எடுக்க வேண்டும் ஸ்கோர் போர்டு நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும் 4ம் நிலையில் சொதப்பினால், அது பின்னால் வரும் வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த ராயுடு நேற்று கிரீசை பிரமாதமாகப் பயன்படுத்தி மே.இ.தீவுகள் பவுலர்களுக்கு கடும் கஷ்டங்களைக் கொடுத்தார்.
களவியூகத்தில் இடைவெளிகளை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு ஷாட்களை ஆடினார். இவர்தான் 2019 உலகக்கோப்பையில் இந்த முக்கியமான 4ம் நிலையைக் காக்கவுள்ளார் என்பதை கோலி தெரிவித்துள்ளார்:
நிச்சயமாக பாதைக்குத் திரும்பியுள்ளோம், அனைத்து புலங்களிலும் சிறப்பாக ஆடினோம். 3வது ஒருநாள் போட்டியில் அவர்கள் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள், வென்றார்கள்.
ஆனால் நாங்கள் இந்த வெற்றி மூலம் மீண்டெழுந்து விட்டோம். ராயுடு அவருக்குக் கொடுத்த வாய்ப்பை இருகைகளிலும் எடுத்துக் கொண்டு விட்டார்.
2019 உலகக்கோப்பை வரை நாம் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அவர் போட்டியை நன்றாகக் கணிக்கிறார். அறிவுடன் பேட் செய்கிறார்.
கலீல் அகமெட் ஒரு உற்சாகம் தரக்கூடிய திறமைசாலி. பிட்ச் கொஞ்சம் சாதகமாக இருந்தால் அதிலிருந்து அவர் நிறைய எடுக்கிறார். நல்ல பகுதிகளில் வீசுகிறார், அதி ஃபுல் லெந்தும் கிடையாது, அதி ஷார்ட் பிட்சும் இல்லை. அவரைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது, பந்தை பேச வைத்தார்.
இவ்வாறு கூறினார் கோலி.