Published : 09 Oct 2018 08:57 PM
Last Updated : 09 Oct 2018 08:57 PM

கடைசி 10 ஓவர்களில் 112 ரன்கள் வாரி வழங்கிய தமிழ்நாடு: ஹரியாணாவிடம் தோற்று காலிறுதி வாய்ப்பை காற்றில் பறக்க விட்டது

சென்னையில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபிக்கான ஒருநாள் தொடரில் தமிழக அணி ஹரியாணா அணியிடம் தோல்வி அடைந்து காலிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பைக் காற்றில் பறக்க விட்டது.

செவ்வாயன்று ஐஐடி கெம்ப்ளாஸ்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 311 ரன்கள் இலக்கைத் துரத்திய தமிழக அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து காலிறுதி வாய்ப்பை இழந்தது. 233/9 என்று முடிந்தது தமிழ்நாடு.

தொடக்க வீரர் ஜெகதீசன் 2வது ஓவரில் வெளியேற முரளி விஜய் (24 ரன், 27 பந்து 2 நான்குகள்), அபிநவ் முகுந்த் (47 ரன், 54 பந்து, 1 சிக்ஸ், 2 பவுண்டரி) ஆகியோர் இணைந்து ஸ்கோரை நகர்த்தினர். ஆனால் விஜய் வேகம் குறைந்த பந்தில் ஜெயந்த் யாதவ் கேட்ச் பிடிக்க வெளியேறினார்.

விஜய் சங்கர் (44, 67 பந்து, 4 பவுண்டரி), முகுந்த் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 59 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அபினவ் முகுந்த் டீப் மிட்விக்கெட்டிலிருந்து ஹிமான்ஷு ரானா அடித்த நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

அதன் பிறகு விஜய் சங்கர், அமித் மிஸ்ராவை இரண்டு அற்புத பவுண்டரிகள் அடித்தார். ஆனால் அமித் மிஸ்ரா விஜய் சங்கரை வீழ்த்தி பழிதீர்க்க தமிழ்நாடு அணி 155/7 என்று தோல்வி முகம் கண்டது. கடைசியில் எம்.மொகமது, சி.வி.வருண் பெரிய சிக்சர்களை அடித்தாலும் பயனற்று போனது, 77 ரன்கள் வித்தியாசத்தில் ஹரியாணாவிடம் தோல்வி. ஜெயந்த் யாதவ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற யஜுவேந்திர சாஹல் விக்கெட் இல்லாமல் முடிந்தார்.

ராணா, திவேத்தியா அதிரடி:

முன்னதாக ஹரியாணா முதல் இன்னிங்ஸை ஆடிய போது தொடக்க வீரர்கள் சிதின் சைனி (40), சைதன்ய பிஷ்னாய் (25) உறுதியான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து 12.4 ஓவர்களில் 50 ரன்களைச் சேர்த்தனர். அப்போது முகுந்த் ரன் அவுட் செய்ய பிஷ்னாய் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தரை ஸ்வீப் ஆடமுறபட்டு சைனியின் இன்னிங்சும் முடிவுக்கு வந்தது. பிறகு ஜெயந்த் யாதவுக்கு தன் பந்திலேயே கேட்ச் எடுக்க வாஷிங்டன் சுந்தர் 2வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.

ஆனால் பிரமோத் சந்திலா 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என அதிரடி காட்டினார். இதில் சுந்தரை டீப் மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சரும் அடங்கும். ஆனால் இவரும் ஆட்டமிழக்க ஹரியாணா 146/4 என்று சற்றே தடுமாறியது.

இங்கிருந்து ஹிமான்ஷு ராணா (89 நாட் அவுட், 76 பந்து, 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகள்), ராகுல் திவேத்தியா (91நாட் அவுட் 59 பந்துகள் 5 சிக்சர்கள் 8 பவுண்டரிகள்) இணைந்து 6வது விக்கெட்டுக்காக 151 ரன்கள் காட்டடி கூட்டணி அமைத்தனர்.

ராணா தன் அரைசதத்தை வருண் பந்தில் அடித்த அரக்க சிக்ஸ் மூலம் எட்டினார். இடது கை வீரர் திவேத்தியா ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரியில் தன் அரைசதத்தை எட்டினார்.

இவர்கள் இருவரும் ரன்களைக் கொளுத்தி எடுத்தனர், கடைசி 10 ஓவர்களில் 112 ரன்கள் விளாசப்பட்டது.

159/5 என்ற நிலையிலிருந்து தமிழ்நாடு அணி ஹரியாணாவை கட்டுப்படுத்தத் தவறி விட்டது. 49வது ஓவரில் சீம் பவுலர் ஷாருன் குமார் 19 ரன்களை அதிகபட்சமாக விட்டுக் கொடுத்தார்.

இந்தத் தோல்வியினால் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x