Published : 22 Oct 2018 07:31 PM
Last Updated : 22 Oct 2018 07:31 PM

‘அந்த 7 சாதனைகள்’: கோலி, ரோஹித் அமர்க்களம் செய்த போட்டி

கவுகாத்தியில் நேற்று நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சேர்ந்து 7 முக்கியச் சாதனைகளைப் படைத்துள்ளனர்.

கவுகாத்தியில் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. இதையடுத்து 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இந்திய அணி 42.1 ஓவர்களில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஹோரித் சர்மா 152 ரன்களுடன்(117பந்துகள்) (8 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகள்), ராயுடு22 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 140 ரன்கள்(107பந்துகள்) சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 2 சிக்ஸர்கள் 21 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் சேர்ந்து 7 முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.

1. விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் 2-வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்தனர். இது சேஸிங்கின்போது, ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 2-வது விக்கெட்டுக்கு சேர்ந்த மிக அதிகபட்சமாகும். இதில் முதலாவதுஇடத்தில் 2009-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் ரிக்கி பாண்டிங், ஷேன் வாட்ஸன்252 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாகும்.

 

2. 2-வது விக்கெட்டுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சேர்ந்து சதம் அடித்த 5-வது வீரர்கள் ஆவர். இதற்கு முன், சச்சின், கங்குலி ஜோடி, கம்பீர், கோலி ஜோடி, மகிளா ஜெயவர்த்தனா, தாரங்கா ஜோடி, ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.

3. இந்தப்போட்டியில் விராட் கோலி அடித்த சதம் சர்வதேசப் போட்டிகளில் அவர் அடிக்கும் 60-வது சதமாகும். ஒருநாள் போட்டியில் 36, டெஸ்ட் போட்டியில் 24 சதம் அடித்துள்ளார். மேலும், 60 சதங்களை மிகவும் விரைவாக எட்டிய வீரர் எனும் பெருமையை கோலி படைத்தார். ஏறக்குறைய 386 இன்னிங்ஸில் கோலி இந்தசாதனையை செய்திருக்கிறார். சச்சின் 424 இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ஒரு காலண்டர் ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை விராட் கோலி 5-வது முறையாக எட்டினார். மேலும், கேப்டனாக தொடர்ந்து 2-வது முறையாகும், தொடர்ந்து 3-வது முறையாக 2 ஆயிரம் ரன்களை எட்டிய 4-வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார்.

5. ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் அடித்த சதம் அவருக்கு 20-வது சதமாகும். 20 சதங்களை அடித்த 4-வது இந்திய வீரர் ரோஹித் ஆவார். சச்சின், கங்குலி, கோலிக்கு பின் ரோஹித் உள்ளார்.

6. ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் 152 ரன்கள் சேர்த்ததன் மூலம், ஒருநாள் போட்டியில் 150 ரன்களுக்கு மேல் 6 முறை சேர்த்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். சச்சின், டேவிட் வார்னர் ஆகியோர் 5 முறையும்,கெயில், ஜெயசூர்யா, ஹசிம் அம்லா ஆகியோர் 4 முறையும் 150 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

7. ஒருநாள் போட்டிகளில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த 3-வது வீரர் ரோஹித் சர்மா. நேற்றைய ஆட்டத்தில்8 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் கங்குலியின் 189 சிக்ஸர் சாதனையை முறியடித்துள்ளார் ரோஹித். தற்போது 194 சிஸ்கர்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் தோனி 201 சிக்ஸர்களும், 2-வதுஇடத்தில் சச்சின் 195 சிஸ்கர்களுடன் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x