Published : 22 Oct 2018 09:41 AM
Last Updated : 22 Oct 2018 09:41 AM

விரட்டலில் இந்தியாவின் வெற்றிக் கூட்டணி; பாண்டிங் பாதையில் கோலி... எத்தனை வெற்றிக்கூட்டணியில் விராட் கோலி? - சில சுவாரஸ்யங்கள்

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக குவஹாத்தியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வெற்றியைத்தீர்மானித்தது விராட் கோலி, ரோஹித் சர்மாவின் 246 ரன் கூட்டணி.

இந்த 246 ரன் கூட்டணி விரட்டலில் இந்திய அணியின் மிகப்பெரிய கூட்டணியாகும். இதற்கு முன்னர் 224 ரன் கூட்டணியில் கவுதம் கம்பீர், விராட் கோலி 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஈடன் கார்டன்சில் இணைந்தது குறிப்பிடத்தக்கது, இந்தப் போட்டியில்தான் தன் ஆட்ட நாயகன் விருதை கோலிக்குக் கொடுக்கச் சொல்லி கம்பீர் பரிந்துரை செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் இது 5வது அதிக ரன் இரட்டைச் சத கூட்டணியாகும். விரட்டலில் சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச ரன் கூட்டணியாகும் இது.

அதிவேகமாக 20 ஒருநாள் சதங்கள் எடுத்ததில் ஹஷிம் ஆம்லா 108 இன்னிங்ஸ்களில் முதலிடம் வகிக்கிறார். அடுத்த இடத்தில் விராட் கோலி (133 இன்னிங்ஸ்), ஏ.பி.டிவில்லியர்ஸ் (175), ரோஹித் சர்மா (183), சச்சின்

டெண்டுல்கர்(197), ஹெர்ஷல் கிப்ஸ் (217) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையே 5வது இரட்டைச் சதக் கூட்டணியாகும் இது. இது ஏற்கெனவே சாதனைதான். உலகில் எந்த ஒரு ஜோடியும் 3 தடவைக்கு மேல் டபுள் செஞ்சுரி கூட்டணி அமைத்தது இல்லை. விரட்டலில் இருவருக்குமிடையே நேற்று எடுத்த 246தான் முதல் இரட்டைச் சதக் கூட்டணியாகும்.

14-சதங்கள், கேப்டனாக கோலி எடுத்தது. இது 2வது அதிகபட்ச கேப்டன் சதங்களாகும். ரிக்கி பாண்டிங் மட்டும்தான் கேப்டனாக 22 சதங்களை எடுத்துள்ளார். 50வது இன்னிங்சில் கோலி கேப்டனாக தன் 14வது சதத்தை எடுத்துள்ளார். நம்பர் 3 இடத்தில் கோலியின் 29வது சதம், ரிக்கி பாண்டிங்குடன் இதே டவுனில் சதக்கணக்கில் இணைந்தார் கோலி.

20- சதங்கள், வெற்றிகரமான விரட்டலில் விரட்டல் மன்னன் விராட் கோலியின் சாதனை. 75 இன்னிங்ஸ்களில் 20 சதங்களை விரட்டலில் எடுத்துள்ளார் கோலி. டெண்டுல்கர் வெற்றி விரட்டலில் 14 சதங்கள் எடுத்துள்ளார். வெற்றிகர விரட்டலில் கோலியின் சராசரி 98.25. மேலும் 300+ இலக்கை விரட்டும் போது கோலியின் 8வது சதமாகும் இது. இதுவும் ஒரு தனித்துவமான சாதனை மற்ற வீரர்கள் யாரும் அருகில் இல்லை.

150+ ஸ்கோர்களில் ரோஹித் சர்மா 6வது ஸ்கோராகும் நேற்று அடித்தது. டெண்டுல்கர், டேவிட் வார்னரைக் கடந்தார் ரோஹித். இவர்கள் இருவரும் 5 முறை 150+ ஸ்கோர் எடுத்துள்ளனர்.

ரோஹித் சர்மாவுக்கு 20வது ஒருநாள் சதமாகும் இது. 20 சதங்கள் எடுத்த 4வது இந்திய வீரரும், 13வது சர்வதேச வீரருமாக திகழ்கிறார் ரோஹித் சர்மா.

ரோஹித் சர்மா 8 சிக்சர்களை ஒரு இன்னிங்சில் அடிப்பது நேற்று 4வது முறையாகும், கிறிஸ் கெய்ல் அதிக முறை இதனைச் சாதித்துள்ளார். தோனியும், யூசுப் பத்தானும் தலா ஒரு முறை இதைச் சாதித்துள்ளனர். கப்தில், அப்ரீடி, டிவில்லியர்ஸ், கெய்ரன் பொலார்ட் ஆகியோர் 3 முறை சாதித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x