Published : 25 Oct 2018 09:44 AM
Last Updated : 25 Oct 2018 09:44 AM

விராட் கோலியின் விசித்திர இன்னிங்ஸ்: ஹஷிம் ஆம்லா சாதனை உடைப்பு

விராட் கோலி, விசாகப்பட்டிணத்தில் 157 ரன்களை எடுக்க இந்திய அணி 321 ரன்களை எட்டியதால் மே.இ.தீவுகள் அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய போட்டி கடைசியில் ‘டை’ ஆனது.

விராட் கோலி 56 பந்துகளில் 50 ரன்கள், 106 பந்துகளில் 100, ஆனால் அதன் பிறகு 127 பந்துகளில் 150, கடைசியில் 157 நாட் அவுட்.

இந்த இன்னிங்ஸ் முதல் ஒருநாள் போட்டியை ஒப்பிடும் போது விசித்திரமானது, முதல் போட்டியில் ரோஹித் சர்மாவை நிதானிக்கக் கோரி இவர் புகுந்தார், இறங்கியது முதலே டப் டிப்பென்று சாத்தி சதமெடுத்தார்.

ஆனால் இந்த இன்னிங்ஸ் வித்தியாசமானது, நல்ல வெயில், ஈரப்பதம் அதிகம் இதனால் அவரது ஆற்றல் உறிஞ்சப்பட அடிக்கடி ட்ரிங்க்ஸ் பிரேக் எடுத்துக் கொண்டார். 10,000 ரன்களை லாங் ஆனில் தட்டி விட்டு எடுத்துக் கொண்டாட்டம் போட்டார். 44 ரன்களில் இருந்த போது இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஓபெட் மெக்காய் பந்தில் மிகவும் தளர்வாக ஒரு ஷாட்டை ஆடி மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். ஆனால் அங்கு ஜேசன் ஹோல்டர் கேட்சை விட்டார்.

அதன் பிறகு களைப்புடன் ஆடியது போலவே தெரிந்தது, அடுத்த 10 ஓவர்களில் 1 பவுண்டரிதான் அடித்தார். ராயுடுவுக்கும் ஒரு கேட்சை அறிமுக வீரர் மெக்காய் விட்டார். ராயுடு ஆட்டமிழக்கும் போது கோலி 78 பந்துகளில் 71 ரன்கள் என்று இருந்தார். அதன் பிறகு சாமுவேல்ஸை கட் ஷாட் ஆடி 10,000 ரன்களுக்கு அருகில் வந்தார். பிறகு கவரில் தட்டி விட்டு 9999 ரன்களுக்கு வந்தார். பிறகு ஆஷ்லி நர்ஸ் பந்தை லாங் ஆனில் தட்டி விட்டு 10,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார், டெண்டுல்கரை விட 50க்கும் மேற்பட்ட இன்னிங்ஸ்கள் குறைவு.

ஆனால் டெண்டுல்கர் அவர் காலத்தில் மிகவும் களிப்பூட்டக்கூடிய ஆட்டக்காரராக இருந்தார், வாசிம் அக்ரமை ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ் அடிப்பார், கிளென் மெக்ராவை 2 அடி மேலேறி வந்து அப்படியே லாங் ஆஃப், மிட்விக்கெட் என்று சிக்சர் தூக்குவார், ஷோயப் அக்தரை பாயிண்டுக்கு மேல் தூக்குவார், டேல் ஸ்டெய்னை புல் ஷாட்டில் மைதானத்துக்கு வெளியே அனுப்புவார், ஆண்ட்ரூ கேடிக், தில்ஹாரா பர்னாண்டோக்களை மைதானத்துக்கு வெளியே தூக்குவார், இயன் பிஷப்பை லார்ட்ஸில் இறங்கி வந்து சிக்ஸ் அடிப்பார், அவரது ஆட்டமே வேறு, கோலியின் ஆட்டமே வேறு, டெண்டுல்கர் ஈவு இரக்கமின்றி அடித்து நொறுக்குவார், கோலி மாறாக அனாயசமாக ஆடக்கூடியவர். ஒரு விதத்தில் ஆக்ரோஷமானவர் கோலி என்றாலும் சச்சின் அளவுக்கு இவருக்கு ஆட்டத்தில் ஈகோ இல்லை. சச்சினை பீட் செய்தால் அவர் அந்தப் பவுலரை அடித்து நொறுக்க ஆசை கொள்வார், கோலிக்கு அதெல்லாம் கிடையாது, வெற்றி பெற வேண்டும் என்ற பெரிய லட்சியத்தைக் கொண்டவர்.

ஆனாலும் 9000 ரன்களிலிருந்து 10,000 ரன்களை 11 இன்னிங்ஸ்களில் எடுத்தார் விராட் கோலி. ரிஷப் பந்த் அவுட் ஆன பிறகு கோலி சாமுவேல்ஸை பவுண்டரி அடித்து சதம் 37வது ஒருநாள் சதம் கண்டார். அதுவும் அடுத்தடுத்த போட்டிக்ளில் சதம் காண்பதை கோலி 7 முறை செய்துள்ளார். அதன் பிறகு அடிக்கத் தொடங்கினார், மெக்காயை ஒரே ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். இதில் முதல் சிக்சர்தான் ஒரே ஆண்டில் 1000 ரன்களை 11 இன்னிங்ஸ் எடுத்த சாதனைக்கான ஷாட் ஆகும். ஹஷிம் ஆம்லா 15 இன்னிங்ஸ்களில் செய்ததை 11 இன்னிங்ஸ் என்று உடைத்தார் கோலி. பிறகு கிமார் ரோச் ஓவரில் ஒரு அபார சிக்ஸ் 2 பவுண்டரிகள். கடைசி ரோச் ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரி, பிறகு லாங் ஆனில் ஒரு சிக்ஸ் என்று 157 ரன்களில் முடித்தார் கோலி.

பந்துகள் மட்டைக்கு எளிதில் வராத பிட்சில் கடைசி 17 பந்துகளில் 48 ரன்களை விளாசி கோலி ’பினிஷர்’ என்று அழைக்கப்படுபவர்களைக் காட்டிலும் நான் தான் பினிஷர் என்று நிரூபித்தார், இந்திய அணியை தர்ம சங்கடத் தோல்வியிலிருந்து காப்பாற்றிய இன்னிங்ஸ் என்ற வகையில் வழக்கத்துக்கு மாறான கோலியின் இந்த இன்னிங்ஸ் உண்மையில் அற்புதமானதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x