Last Updated : 11 Oct, 2018 03:40 PM

 

Published : 11 Oct 2018 03:40 PM
Last Updated : 11 Oct 2018 03:40 PM

‘பிரித்வி ஷாவை வளரவிடுங்கள்; யாருடனும் ஒப்பிட்டு நெருக்கடி தராதீர்கள்’: விராட் கோலி காட்டம்

இளம் வீரர் பிரித்வி ஷா நல்ல கிரிக்கெட் வீரராக வளர வேண்டும், அவரை யாருடனும் ஒப்பிட்டு நெருக்கடிக்கு ஆளாக்க வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய 18 வயது வீரர் பிரித்வி ஷா முதல் போட்டியிலேயே சதம் அடித்து 134 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரின் பேட்டிங் ஸ்டைலைப் பார்த்த பலரும் சேவாக் போல் பேட் செய்கிறார் என்று ஒப்பிட்டனர்.

இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த கம்பீர், சேவாக்குடன் பிரித்வி ஷாவை ஒப்பிடாதீர்கள். இன்னும் பிரித்வி ஷா வளர வேண்டியது இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இதே கருத்தை கேப்டன் விராட் கோலியும் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நாளை நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

அது குறித்து கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு இன்றுபேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''பிரித்வி ஷாவின் பேட்டிங் ஸ்டைல் சச்சின் போன்று இருக்கிறது, சேவாக் போன்று இருக்கிறது என்று தயவு செய்து ஒப்பிடாதீர்கள். பிரித்வி ஷா இளம் வீரர், இன்னும் அவர் வளர்ந்து அதிகமான சாதனைகள் செய்ய வேண்டி இருக்கிறது. அவர் வளர இடைவெளி கொடுக்க வேண்டும். அதிகமான திறமையுடன் இருக்கும் பிரித்வி ஷா, அவரின் போக்கிலேயே விளையாட அனுமதிக்க வேண்டும். அவருக்கு நெருக்கடி ஏதும் கொடுக்கக்கூடாது.

மிகச் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர் பிரித்வி ஷா என்பது எனக்குத் தெரியும். முதல் டெஸ்டில் விளையாடியதைப் போன்று 2-வது டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாட வேண்டும். கற்றுக்கொள்வதில் அதிகமான ஆர்வம் உள்ளவராக இருக்கிறார், சூழ்நிலையை அறிந்துகொண்டு விளையாடுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமாக விளையாடியதால், பிரித்வி ஷாவுக்கு நெருக்கடியான சூழல்களை எளிதாகக் கையாண்டு விளையாடும் திறமை இருக்கிறது. ஆனால், நாட்டுக்காக விளையாடும்போது எப்போதும் ஒருவிதமான நெருக்கடி இருக்கும்.

காலையில் நாட்டுக்காக விளையாடத் தொப்பி அணிந்து களமிறங்கும்போது வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் இருக்கும், ஆனால், அதன்பின் ஒவ்வொரு வீரரும் நெருக்கடியை உணர்வார்கள். ஆனால், ஐபிஎல் போட்டி வந்தபின், வீரர்களின் திறமை மேம்பட்டுள்ளது''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x