Published : 09 Oct 2018 05:14 PM
Last Updated : 09 Oct 2018 05:14 PM

மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசுகிறேன்: வருண் ஆரோன் நம்பிக்கை... ஆனால்

2018-19 விஜய் ஹசாரே டிராபியில் ஜார்கண்ட் அணியின் முன்னணி வீச்சாளராகத் திகழும் வருண் ஆரோன் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைவேன் என்று திடகாத்திரமாக நம்புகிறார்.

தற்போதைய அணித்தேர்வுக்குழு, ரவிசாஸ்திரி, கோலி இவர்கள் பற்றியெல்லாம் சமீபமாக எழுந்து வரும் செய்திகளை இவர் படிப்பதில்லை போலும்.

ஆனால் வறண்ட பிட்சில் கூட வருண் ஆரோன் பேட்ஸ்மெனை அவசரப்படுத்த முடியும். இத்தகைய பந்து வீச்சுக்கு நேர்மை அவசியம், இவரை அணுகுவதிலும் நேர்மை அவசியம், இந்திய அணியில் இத்தகைய வேகப்பந்து வீச்சைக் கையாளும் திறமையுடைய கேப்டன்கள் இல்லை என்பதே எதார்த்தம், தோனியிடம் விட்டால் 3 ஓவர்களுக்குப் பிறகு ஜடேஜா, ஜாதவ், ரெய்னா என்று லாலிபாப் பவுலர்களைக் கொண்டு வந்து விடுவார், கோலிக்கு இவருக்கு களவியூகம்க் எப்படி அமைப்பது என்றே தெரியாது, காரணம் அனுபவமின்மை, ஸ்லிப் எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும் என்பது கூட கோலிக்கு இன்னும் அனுபவப் போதாமையே உள்ளது.

 

இவரது பவுன்சரில் அடி வாங்கிய ஸ்டூவர்ட் பிராட் அதன் பிறகு பேட்ட்டிங் செய்த போதெல்லாம் கொஞ்சம் பின் வாங்க நேரிட்டதை அவரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீள்வரவுக் கனவு காணும் வருண் ஆரோன் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்குக் கூறியதாவது:

ஆம்! மீண்டும் பழைய சகாவான ராஹுல் ஷுக்லாவுடன் வீசுவது நல்ல அனுபவமாக உள்ளது. விஜய் ஹசாரே ட்ராபியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது மட்டும் நோக்கமல்ல, கோப்பையை வெல்வதும்தான்.

ஜார்கண்ட அணி எம்.ஆர்.எஃப். வேகப்பந்து அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறது, மேட்ச் இல்லாத நாளில் நானும் சென்று பயிற்சி பெற்று வருகிறேன். எம்.ஆர்.எஃப் எனக்கு 2வது தாயகமாகும், இப்போதும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசுகிறேன். இப்போது பல தினுசு பந்துகளையும் வீசுகிறேன், என்றார்.

2015-ல் பிரிஸ்பன் டெஸ்ட் உடன் இவர் 9 டெஸ்ட்களை இந்திய அணிக்காக ஆடியுள்ளார். பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் 2014-15 தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிகப்புப் பந்து தோலின் ருசியைக் காட்டினார், ஆனால் தோனியின் மோசமான களவியூகம், கற்பனைவளமற்ற கேப்டன்சியினாலும், கேட்ச்கள் விடப்பட்டதாலும் இவரது கரியர் கேலிக்கூத்தானது.

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் வருண் ஆரோன் நீக்கப்பட்ட போது ஷேன் வார்னும் மார்க் டெய்லரும் உண்மையில் வருத்தம் கலந்த ஆச்சரியமடைந்தனர்.

லீஷயர் அணிக்கு ஆடிய அனுபவம் பற்றி வருண் ஆரோன் தற்போது கூறும்போது, “நான் இப்போது லெக் கட்டர் வீசுகிறேன். வேகம் குறைந்த பந்துகளை கொஞ்சம் நன்றாக வீசக் கற்றுக் கொண்டுள்ளேன், முன்பு அவுட் ஸ்விங் அதிகம் வீசுவேன் இப்போது இன்ஸ்விங்கரிலும் கவனம் செலுத்துகிறேன்.

இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து இல்லாவிட்டால் நான் கிரிக்கெட்டே ஆடிக்கொண்டிருக்க மாட்டேன்” என்றார் வருண் ஆரோன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x