ராயுடுதான் சொல்லிக் கொண்டேயிருந்தார்.. நான் யோசிக்கவேயில்லை: ரோஹித் சர்மா

ராயுடுதான் சொல்லிக் கொண்டேயிருந்தார்.. நான் யோசிக்கவேயில்லை: ரோஹித் சர்மா
Updated on
1 min read

மும்பை ஒருநாள் போட்டியில் ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா நேற்று 137 பந்துகளில் 20 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 162 ரன்கள் எடுத்து 44வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஒருவேளை நின்றிருந்தால் இன்னும் 6 ஓவர்கள் மீதமிருக்கையில் 4வது இரட்டைச் சதம் என்ற முறியடிக்க முடியா ஒரு சாதனையை நிகழ்த்தியிருப்பார். ஆனால் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டி சிக்சர்கள் சாதனையை நேற்று ரோஹித் சர்மா முறியடித்தார்.

ரோஹித் சர்மாவின் 7வது 150+ ஸ்கோராகும் இது, சச்சின் 5, வார்னர் 5, கெயில் 4, கோலி 4, சனத் ஜெயசூரியா 4, ஆம்லா 4 என்று 150+ ஸ்கோர்களை எடுத்துள்ளனர்

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு இரட்டைச் சத எண்ணம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது:

சிசிஐ-யில் நிறைய ஆடியுள்ளேன். இங்கு பேட்டிங் செய்வதென்றால் எனக்கு பிடிக்கும். இங்கு வேகமான அவுட் பீல்ட் என்பதால் ஷாட்டை வலுவாக அடிக்க வேண்டியதில்லை. இடைவெளியில் அடிக்க வேண்டும் அவ்வளவே அதைத்தான் நான் செய்தேன்.

பேட்டிங் செய்யும் போது 100 அடிக்க வேண்டும் 200 அடிக்க வேண்டும் என்றெல்லாம் என் மனதில் தோன்றவே தோன்றாது, கூடியமட்டும் நிறைய ஓவர்கள் ஆட வேண்டும் என்பதே குறிக்கோளாக இருக்கும், ஸ்கோர் தானாக வரும்.

இதற்கு முன்னர் 3 இரட்டைச்சதங்கள் எடுத்தபோதும் இரட்டைச்சதம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து ஆடவில்லை. இந்த இன்னிங்சில் கூட ராயுடுதான் இரட்டைச் சதம் எடுக்கலாம், நான் இரட்டை எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று என்னிடம் கூறிக்கொண்டே இருந்தார். எனக்கு அப்படியெதுவும் தோன்றவில்லை.

பேட்டிங்கில்தான் முழுகவனம், இரட்டைச் சதமல்ல. நிறைய ரன்களை எடுக்க வேண்டும், ஏனெனில் சிசிஐ பிட்ச் ஒரு மாதிரியானது, திடீரென பெரிய இலக்குகளைக் கூட தடுக்க முடியாமல் போய் விடும், ஆனால் நேற்று சிறப்பாக பந்து வீசினோம்.

இவ்வாறு கூறினார் ரோஹித் சர்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in