

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து பிராவோ கூறும்போது, ” நான் இன்று கிரிக்கெட் உலகத்திற்கு அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலிருந்தும ஓய்வு பெறுவதாக தெரிவித்துக் கொள்கிறேன். 15 வருடங்களுக்குப் பின்னரும் எனது முதல் அறிமுகப் போட்டியை என்னால் நினைவுகொள்ள முடிகிறது. 2004 -ல் இங்கிலாந்துஅணிக்கு எதிராக அறிமுகமான எனக்கு லாட்ஸ் மைதானத்துக்குள் இறங்குவதற்கு முன்னதாகவே அந்த மெருன் தொப்பி வழங்கப்பட்டது.
கிரிக்கெட் மீதான எனது உணர்வும் உற்சாகமும் எப்போதும் என்னுடன் இருக்கும். ஒரு தொழிற்முறை கிரிக்கெட் வீரராக நானும் மற்றவர்கள் என்ன செய்தார்களோ அதனைச் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறை வீரர்களுக்காக எனது இடத்திலிருந்து விலகி ஓய்வு பெறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிராவோ மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 260 ஒரு நாள் போட்டிகளிலும், 40 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.
35 வயதான பிராவோ இறுதியாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக கடந்த 2016-ம் ஆண்டு விளையாடினார்.
இந்திய ப்ரீமியர் லீக் போட்டிகளில் பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.