Published : 07 Oct 2018 05:14 PM
Last Updated : 07 Oct 2018 05:14 PM

வெளிநாட்டுத் தொடரில் மனைவியுடன் தங்க அனுமதிக்க வேண்டும்; விராட்கோலி கோரிக்கை: பிசிசிஐ நிராகரிப்பு?

வெளிநாடுகளில் கிரிக்கெட் சீரிஸின்போது தங்களது குடும்பத்தாரை உடன் வைத்துக் கொள்ள பிசிசிஐயிடம் விராட் கோலி அனுமதி கேட்டுள்ளதாகவும், அதை புதிய கமிட்டித்தான் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

இந்திய மண்ணில் சாதனைகள் படைக்கும் இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் மண்ணை கவ்வும் நிலை உள்ளது கடுமையாக ரசிகர்களால் விமர்சிக்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்தில் கிடைத்த தோல்வியால் இந்திய அணி மீது கடும் விமர்சனம் வந்தது. வீரர்கள் தங்கள் மனைவி, காதலியுடன் எடுக்கும் புகைப்படங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகின்றனர்.

அதை எடுத்து “இப்படி பயிற்சி பெறாமல் குடும்பத்தோடு சுற்றினால் எப்படி வெற்றி பெற முடியும், சில மாதங்கள் குடும்பத்தாரை பிரிய முடியாதா?” என ரசிகர்கள், நெட்டிசன்கள் வலைதளங்களில் விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது. சமீபத்தில் பிசிசிஐ இதற்கு ஒரு புதிய விதியை அமல்படுத்தியது. அதாவது வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாட செல்லும் வீரர்கள் 2 வாரம் வரை தங்கள் மனைவி, காதலியை தங்களுடன் தங்க வைக்கலாம், அதன் பின்னர் அனுப்பிவிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்திய வீரர்கள் சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கு துபாய் சென்றனர். அப்போது அவர்கள் தங்களுக்கான வசதியை ஏற்படுத்திக்கொண்டதை வெளிநாட்டுப் பத்திரிகைகள் விமர்சித்தன. கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தனது வர்ணனையில் இந்திய அணியில் வீரர்களைவிட சேவகர்கள் அதிகம் இருக்கிறார் என விமர்சித்தார். அத்தனை வசதிகள் இருந்தும் சாதாரண அறிமுக அணியான ஆப்கானிஸ்தானிடமும், வங்கதேச அணியிடமும் இந்தியா திணறியதை காண முடிந்தது.

உணர்வுபூர்வமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணியிடம் தப்பித்தோம் பிழைத்தோம் என கடைசி பந்தில் மேடை டை செய்து கவுரவத்தை இந்திய அணி காப்பாற்றிக் கொண்டது. வெற்றியை தூக்கி வைத்துக்கொண்டாடும் ரசிகர்கள் இதுபோன்ற தோல்விகளை சகித்துக்கொள்வதே இல்லை. விமர்சித்து தள்ளிவிடுகிறார்கள்.

அவர்கள் விமர்சனத்தின் முக்கிய அம்சம் வெளிநாடுகளுக்கு செல்லும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடாமல் மனைவியுடன் ஊர்சுற்றுகிறார்கள் என்பதாகும். வெற்றி பெற்றால் அது பெரிதாகாது. தோல்வியுற்றால் வறுத்தெடுத்துவிடுவார்கள். இதையெல்லாம் உத்தேசித்துதான் பிசிசிஐ இவ்வாறு முடிவெடுத்தது.

ஆனால் தற்போது கோலி புதிய கோரிக்கை ஒன்றை பிசிசிஐ அதிகாரிகளிடம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளில் விளையாடப்போக்கும் முழு நாட்களும் தங்கள் மனைவி, குடும்பத்தாரை உடன் தங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த கோரிக்கை கோலியின் கோரிக்கை மட்டுமல்ல அணியினரின் கோரிக்கை, கேப்டன் என்கிற முறையில் அவர் பொதுவாக வைத்துள்ளார் என்கின்றனர். இதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டதா என்கிற கேள்விக்கு பிசிசிஐ-ன் உறுப்பினர் புதிதாக நியமிக்கப்பட்டப் பிறகு தான் இது தெரியும் என்கிறார்கள். பிசிசிஐ அதிகாரிகள் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் புதிய கமிட்டி பரிசீலிக்குமா? என்பது தெரியாது.

ஆகவே புதிய பிசிசிஐ கமிட்டி என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். காரணம் வேறென்ன வறுத்தெடுக்கத்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x