Published : 02 Oct 2018 04:47 PM
Last Updated : 02 Oct 2018 04:47 PM

என்னைப் பற்றிய பேச்சுகளை குப்பையில் போடுங்கள்: ரவி சாஸ்திரி ஆவேசம்

என்னைப் பற்றி பேசுபவர்கள் பேச்சையெல்லாம் குப்பையில் தூக்கிப் போடுங்கள், அதைப் பற்றி நான் நினைப்பதே இல்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது. இந்தத் தோல்விக்குப் பின் முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, சேவாக் ஆகியோர் இந்தத் தோல்விக்கு அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பதில் அளிக்கக் கடமைப்பட்டவர் என்று விமர்சித்திருந்தனர். மேலும் மூத்த வீரர் சுனில் கவாஸ்கரும் அணியின் தோல்வி குறித்துப் பேசி இருந்தார். இது குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கல்ப் நியூஸ் தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

''நான் இப்போது நன்றாகத் தூங்குகிறேன். எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. நீங்கள் ஏதாவது சில செய்தித்தாள்களைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து அவர் இப்படிப் பேசினார், இவர் இப்படி விமர்சித்தார், நீங்கள் படித்தீர்களா என்று கேட்கிறீர்கள். எனக்குத் தூங்குவதற்கு மட்டுமே நேரம் இருக்கிறது. இதுபோன்று என்னைப் பற்றி பேசி வரும் செய்திகளைப் படிக்க நேரம் இல்லை.

ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் மட்டும் நான் எனது கருத்துகளைத் தெரிவிப்பேன். என்னைப் பற்றி பேசுபவர்களின் பேச்சையெல்லாம் குப்பையில் போடுங்கள். நீங்கள் உங்கள் மீது நம்பிக்கையாக இருந்தால், யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்கள் வேலையை 100 சதவீதம் சரியாகச் செய்தாலே போதுமானது.

என்னைப் பற்றி சிலர் பேசுவதையெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. அப்படி நான் கவலைப்படத் தொடங்கினால், நான் உருக்குலைந்து உட்கார்ந்துவிடுவேன். அதனால், அதுபோன்று பேசுபவர்களின் பேச்சையெல்லாம் பொருட்டாக மதிப்பதில்லை.

ஆசியக் கோப்பையில் விராட் கோலி இல்லாதது குறித்தும் விவாதம் ஓடுகிறது. விராட் கோலி என்ன சுமை இழுக்கும் மாடு என நினைத்தீர்களா? அவருக்கும் ஓய்வு தேவை. ஓய்வில்லாமல் தொடர்ந்து அவர் விளையாடி வருகிறார். அவர் களத்தில் விளையாடினால், குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியென்றால், அதற்கு ஏற்றார்போல் மனதீரியான ஓய்வும் அவசியம்தானே. அதனால்தான் நான் அவருக்கு ஓய்வு கொடுத்தேன். இந்த ஓய்வுக்குப் பின் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் வருவார்.

இதேபோலத்தான் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆஸ்திரேலியத் தொடருக்கு உற்சாகமாக வருவார்கள்''.

இவ்வாறு ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x