Published : 27 Oct 2018 03:56 PM
Last Updated : 27 Oct 2018 03:56 PM

புவனேஷ்வர் குமார், பும்ராவுக்கு அழைப்பு ஏன்? - மே.இ. பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பேச்சுக்கு கோலி பதில்

முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் மே.இ.தீவுகள் அணி 300 ரன்களுக்கும் மேல் அடித்ததாலும் 2வது போட்டி 300க்கும் மேற்பட்ட இலக்கை விரட்டி ஷேய் ஹோப் சதம், ஹெட்மையரின் அதிரடியினால் டை செய்ததும், இந்திய பந்து வீச்சை, குறிப்பாக வேகப்பந்து வீச்சை கேள்விக்குட்படுத்தியது.

இதனையடுத்து பும்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஓய்விலிருந்து வரவழைக்கப்பட்டு புனே போட்டியில் தற்போது ஆடி வருகின்றனர்.

இந்நிலையில் மே.இ.தீவுகள் பயிற்சியார் ஸ்டூவர்ட் லா நேற்று கூறும்போது, மே.இ.தீவுகள் பேட்டிங் கொடுத்த நெருக்கடியினால்தான் இந்திய அணி பும்ரா, புவனேஷ்வர் குமாரை மீண்டும் அழைத்தனர் என்று பேட்டி கொடுத்தார்.

அவர் கூறியதில் உண்மையிருந்தாலும் இன்று விராட் கோலி 3வது ஒருநாள் போட்டிக்காக புனேயில் டாஸ் வென்ற போது பும்ரா, புவனேஷ்வர் குமார் அழைப்புக்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மே.இ.தீவுகள் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு சூசகமாக பதிலடி கொடுப்பது போல் தெரிந்தது.

அதாவது 2019 உலகக்கோப்பை நெருங்கும் சமயத்தில் அணியில் அதிகம் பரிசோதனை முயற்சியாக வீரர்களை மாற்றிக் கொண்டேயிருந்தால் அணிக்குள் தேவைப்படும் வீரர்களுக்கு இடையிலான ஒரு ஒருமித்த உணர்வு இல்லாமல் போய்விடும் என்று நினைக்கிறார் விராட் கோலி.

உதாரணமாக பும்ரா, புவனேஷ்வர், ஷமி, உமேஷ், சாஹல், குல்தீப் ஆகியோர் உலகக்கோப்பையில் பவுலர்கள் என்றால் அவர்களுக்குள் ஒரு புரிதல் வேண்டும் என்று ஒரு கேப்டனாக கோலி நினைக்கிறார். அதனால்தான் புவனேஷ்வர், பும்ராவை அழைத்தார்.

இதனை விராட் கோலி கூறும்போது, “உலகக்கோப்பையில் ஆடவிருக்கும் வீரர்கள் ஒன்றாக சில போட்டிகளில் ஆடவேண்டும் என்பதே திட்டம். கூடியவரையில் இவர்கள் சேர்ந்து ஆட வேண்டும். அதனால்தான் முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கு மட்டும் அணியை அறிவித்தோம். புவனேஷ்வர் குமார், பும்ரா 3வது போட்டியில் ஆட வேண்டும் என்று ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு விட்டது” என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆகவே மே.இ.தீவுகள் கொடுத்த நெருக்கடியினால் பும்ரா, புவனேஷ் அழைக்கப்பட்டனர் என்ற மே.இ.தீவுகள் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா-வின் கூற்று ஆஸ்திரேலியருக்கே உரிய சீண்டல் கூற்று என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x