Last Updated : 29 Oct, 2018 07:36 PM

 

Published : 29 Oct 2018 07:36 PM
Last Updated : 29 Oct 2018 07:36 PM

தோனி 9,999 ரன்கள்; மும்பையில் துரதிருஷ்டமாக வாய்ப்பைத் தவறவிட்டார்

ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் அடிக்கும் வாய்ப்பை மும்பையில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக நடந்து வரும் 4-வது ஒருநாள் போட்டியில் எம்.எஸ். தோனி ஒரு ரன்னில் தவறவிட்டார்.

முன்னாள் இந்தியக்கேப்டன் தோனியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஒட்டுமொத்த ரன்கள் அடிப்படையில் பார்த்தால் அவர் 10 ஆயிரத்து 173 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால், இதில் 174 ரன்கள் என்பது ஆப்பிரிக்கா லெவன் அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது ஆசிய லெவன் அணியில் தோனி அடித்த ஸ்கோர். ஆதலால் இதை தோனியின் தனிப்பட்ட சர்வதேச ஸ்கோராக கருத முடியாது.

இந்நிலையில், ஆசியக்கோப்பைப் போட்டியில் இருந்து தோனி எப்படியாவது 174 ரன்களை எட்டி ஒருநாள்போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆசியக்கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங் மிகமோசமாக அமைந்திருந்தது. அதிலும் போதுமான அளவு ரன்கள் சேர்க்க முடியவில்லை.

இந்நிலையில், மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தோனி அந்த சாதனையைச் செய்வார் என எதிர்க்கப்பட்டது. முதல் இரு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை, 3-வது போட்டியில் 7 ரன்னில் ஆட்டமிழந்து தோனி ஏமாற்றம் அளித்தார். இன்றைய போட்டியில் அதிரடியான ஷாட்களை அடித்து தோனி மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு வந்துவிட்டார் என நம்பிய நிலையில், 23 ரன்களில் தோனி ஆட்டமிழந்தார்.

ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை அடைவதற்கு ஒரு ரன் குறைவாக இருக்கும்போது தோனி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது 9 ஆயிரத்து 999 ரன்களில் இருக்கும் தோனி, திருவனந்தபுரத்தில் நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் அந்தச்சாதனையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை எட்டினால், சர்வதேச அளவில் 13-வது வீரர் எனும் பெருமையை பெறுவார். 2018-ம் ஆண்டு சீசனில் தொடர்ந்து மோசமாக ஆடி வரும் தோனி, கடந்த 12 இன்னிங்ஸில் 252 ரன்கள் மட்டுமே சேர்த்து, வெறும் 25ரன்கள் சராசரி மட்டுமே வைத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் எப்போதும் இல்லாத வகையில் 68 ஆகச் சரிந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x