ஈடு இணையற்ற விளையாட்டு வீரர் தயான் சந்த்

ஈடு இணையற்ற விளையாட்டு வீரர் தயான் சந்த்
Updated on
2 min read

நாயகர்கள் அல்லாத விளையாட்டு கடவுளற்ற மதம் போன்றது. இவர்கள் வலுவானவர்கள் அல்லது புனித உருவங்கள். இத்தகையோர் அழகியல் மற்றும் கைத்திறத்தில் வேறு தளங்களில் சஞ்சரிப்பவர்கள்.

கிரிக்கெட்டில் டான் பிராட்மேன், கால்பந்தில் பிலே, குத்துச் சண்டையில் முகமது அலி, பார்முலா ஒன்னில் அய்ர்டன் சென்னா, ஆகியோர் வரிசையில் இந்திய ஹாக்கி வீரர் தயான் சந்த் எப்போதும் இடம்பெறுவார்.

தயான் சந்தின் ஆட்டத்தை எந்த ஒரு வர்ணனையாளரும் இதுவரை வார்த்தை இழையில் நெய்து விட முடிந்ததில்லை. சுதந்திரத்திற்கு முன்பு நாட்டின் ஆசை நிராசைகளின் குறியீடாகத் திகழ்ந்தவர் தயான் சந்த்.

3 முறை தொடர்ச்சியாக ஒலிம்பிக் தங்கம் வென்ற அணியில் பங்களிப்பு செய்தார். 3வது முறை இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் தயான் சந்த் ஆவார். நமது விளையாட்டுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தின் பாதுகாவலர் தயான் சந்த். அவரிடம் ஆட்ட நுணுக்கத்துடன், தனிப்பாணியும் விளையாட்டு உணர்வும் ஒருசேரக் கலந்திருந்தது.

தயான் சந்த் பெயர் கடைசியாக பாரத ரத்னா விருதுக்கு விளையாட்டுத் துறையினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தயான் சந்த் சாதனைகள்:

அவரது வாழ்வும் காலமும் சாதனைகளால் நிரம்பியது. அவர் தனித்துவமானவர், மனித புரிதல்களுக்கு அப்பாற்பட்ட குணாம்சங்கள் கொண்டவர்.

1905ஆம் ஆண்டு பிறந்த தயான் சந்த், 16ஆம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். பயிற்சியாளர் பேல் திவாரிதான் இவரது ஹாக்கி திறமைகளைக் கண்டுணர்ந்தார்.

1926ஆம் ஆண்டு இந்திய ராணுவ ஹாக்கி அணியில் அவர் நியூசிலாந்து பயணம் மேற்கொண்டார். அப்போது நடைபெற்ற ஹாக்கி போட்டிகளில் அவரது பங்களிப்பினால் 21 போட்டிகளில் 18 போட்டிகளில் வெற்றி கிட்டியது.

தனது 23ஆம் வயதில் 1928ஆம் ஆண்டு ஒலிம்பிக் வீரரானார் தயான் சந்த். அவர் தனது சுயசரிதையில் கூறும்போது, “எங்கள் கனவுகளின் பகல் உதயமானது, உலகிற்கு ஹாக்கியல் எங்கள் அணிதான் தலைசிறந்தது என்று அறியவைக்க உறுதிபூண்டோம்” என்று உணர்வு பொங்க எழுதியுள்ளார்.

முதல் 5 போட்டிகளில் இந்தியா 29 கோல்களை அடித்தது, ஒரு கோலைக்கூட வாங்கவில்லை. இது தயான் சந்த்-ஐ ஏதோ மேஜிஷியன் என்பதாகவே உலகிற்கு அறிவித்தது.

தனது அபாரமான ஆட்டத்தினால் எதிரணியினரையே மயங்க வைத்தார் தயான் சந்த் என்று அப்போது எழுதப்பட்டது. 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா 8-1 என்று வெற்றி பெற்று தங்கம் வென்றது.

அந்த ஒலிம்பிக் போட்டிகளில் 13 கோல்கள் அடித்து தயான் சந்த் சாதனையாளரானார். ஒரு தற்செயல் என்னவெனில் 1936ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா ஹாக்கியில் தங்கம் வென்றது. இந்த ஆகஸ்ட் 15 என்பதன் முக்கியத்துவம் 15 ஆண்டுகளுக்குப் பிறகே தேசத்தால் அடையாளம் காண முடிந்தது.

தயான் ஏன் சிறந்த வீரர் என்றால், அவரது சிறந்த ஆட்டத்தைப் பார்த்தவர்கள், அவர் தனது ஹாக்கி மட்டையைக் கையாளும் விதம் கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று கூறியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் மூண்ட பிறகு டான் பிராட்மென், லென் ஹட்டன் கிரிக்கெட்டில் முடங்கியது போல் தயான் சந்த்தும் முடங்கினார். இல்லையெனில் மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களை இந்தியாவுக்கு அவர் பெற்றுத் தந்திருப்பார்.

நாடு பிரிவினை கண்டபோது தயான் சந்த் பெரோஸ்பூரில் ராணுவக் கடமையாற்றினார். மீண்டும் ஜான்சிக்கு திரும்புவதற்கு முன்னால் பாகிஸ்தானில் ரூ.15,000 வரை தனது சேவிங்ஸ் பணத்தை இழந்திருந்தார்.

ஆனால் இவரையும் தேசம் மறந்துபோன காலக்கட்டம் உண்டு. டெல்லி மருத்துவமனையில் கேட்பாரற்று கிடந்தார் தயான் சந்த். பிறகு ஊடகங்கள் இதனை பறைசாற்றிய பிறகு கவனித்துக் கொள்ளபப்ட்டார்.

தயான் சந்த் என்ற இந்த பெரும் வீரருக்கு வியன்னாவில் சிலை உள்ளது. 2012 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக லண்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேலும் ஒரு சிலை வைக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in