

ராஜ்கோட்டில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே மிகப்பிரமாதமான 134 ரன்களை அதிரடி முறையில் அச்சமின்றி ஆடி எடுத்த பிரித்வி ஷா-வை இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்டைலிஷ் ப்ளேயர் என்று வர்ணிக்கப்படும் ஜி.ஆர்.விஸ்வநாத் பாராட்டியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் பிரித்வி ஷா பற்றி கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருக்கு ஆரம்ப நாட்களாக இருந்தாலும் அவர் ஷாட்களை எடுத்த எடுப்பிலேயே ஆடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. தன் இயல்பூக்கத்தை அடக்காமல் ஆடுவது நல்லது.
நான் சில காலங்களாக அவரது ஆட்டத்தைப் பார்த்து வருகிறேன், ரஞ்சி டிராபி போட்டிகளில் பார்த்துள்ளேன் அவர் தனது அணுகுமுறையை மாற்றுவதில்லை. இது அவரிடத்தில் வேறொரு திறமை இருப்பதை தெரிவிக்கிறது. ஸ்ட்ரோக்குகளை ஆடும்போது அவரின் ஆதிக்கத் தன்மை வெளிப்படுகிறது.
வெளிநாடுகளில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதைப் பார்த்த பிறகே கூற முடியும், ஆனால் அவரிடம் பொறுமையும் உள்ளது, பந்து வந்தபிறகே ஸ்ட்ரோக் ஆடுகிறார், ஆகவே வெளிநாட்டில் அவர் ஏன் பிரகாசிக்க முடியாது?
முரளி விஜய் உயர்மட்டத்தில் தன்னை ஒரு நல்ல தொடக்க வீரராக நிறுவியவர், அப்படிப்பட்ட அணுகுமுறை தேவை. ஆனாலும் அவர் இன்னொரு வாய்ப்புக்குத் தகுதி ஆனவரே.
விராட் கோலி கேப்டன்சியில் தேறி வருகிறார். ஆனால் அயல்நாடுகளில் தொடரை வெல்ல வேண்டும், இருமுறை நெருக்கமாக வந்து தோல்வி அடைந்துள்ளார்.
ஆனால் பேட்ஸ்மெனாக அவர் அனைத்து இடங்களிலும் தன்னை நிரூபித்து விட்டார். ஆனால் கேப்டனாக அவரிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமிருக்கின்றன. அவருக்கு இன்னும் வயது உள்ளது. சிறந்த கேப்டனாக அவர் ஒருநாள் வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு கூறினார் ஜி.ஆர்.விஸ்வநாத்.