Published : 28 Oct 2018 05:52 PM
Last Updated : 28 Oct 2018 05:52 PM

‘தோனியை நீக்கியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அவசியமான முடிவு’: அஜித் அகர்கர் பேச்சால் பரபரப்பு

இந்திய அணியில் இருந்து எம்.எஸ். தோனியை நீக்கியது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட அவசியமான முடிவு என்று அஜிக் அகர்கர் தேர்வாளர்களின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடருக்கான அணியில் இருந்து எம்.எஸ். தோனி நீக்கி தேர்வுக் குழு நேற்று அதிரடியாக அறிவித்தது. இந்த முடிவை எடுக்கும் முன் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருடன் விரிவாக ஆலோசித்த பின்புதான் எடுக்கப்பட்டதாகவும் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்தார்.

தோனியின் பேட்டிங் ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் மோசமாகி வந்ததும், அடுத்ததாக 2-வது விக்கெட்கீப்பர்களை அடையாளம் காண வேண்டும் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தோனியின் பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து மோசமாகி வருவது கடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்தது.

தன்மீதான விமர்சனங்களுக்கு தோனி பேட்டால் பதில் அளித்து முற்றுப்புள்ளி வைப்பார் என்று அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று வெறும் 7 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால், தோனியின் ரசிகர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகினார்கள்.

இந்த சூழலில் டி20 அணியில் இருந்து தோனியை நீக்கி தேர்வுக்குழுவினர் செய்த காரியம் சரியானது என்று முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அகர்கர் "கிரிக்இன்போ"வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியக் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில் வைத்து சில நல்ல முடிவுகளை எடுத்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக தோனியை நீக்கியுள்ளனர்.

தோனிக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு அதிகமான போட்டிகளில் வாய்ப்புகள் கொடுத்து அவரை மெருகேற்ற வேண்டும். ஒரு வீரரைத் தேர்வு செய்ய அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை வைத்துதான் தேர்வு செய்ய வேண்டும். மாறாக ஒரு வீரர் ரசிகர்ள் மத்தியில் புகழ்பெற்றவராக இருக்கிறார், கிரிக்கெட் பாரம்பரியம் கொண்டவர் என்றஅடிப்படையில் இருக்கக் கூடாது. இந்த விஷயத்தை நான் தோனியின் டி20 போட்டியில்அவர் செயல்படும் விதத்தை ஒப்பிட்டுப் பேசவில்லை.

டி20 போட்டியில் தோனியின் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடவில்லை என்று தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள், எனக்கு அவர்களின் வார்த்தை புரியவில்லை. இப்போது தோனியை அணியில் இருந்து நீக்க எடுத்திருக்கும் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு. 2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை நோக்கி அணியை நகர்த்துவதற்கு சரியான முடிவு.

தோனி அணியில் இருந்தால், அவரால் 2020-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாட முடியுமா என்பது யாருக்கும் தெரியாது. டி20 போட்டியில் தோனியின் பேட்டிங் திறமை போதுமான அளவுக்குச் சிறப்பாக இருக்கலாம், அல்லது தேவையில்லாமல் கூட இருக்கலாம், அவர் வேண்டுமென்றுகூட அனைவரும் நினைக்கலாம்.

ஆனால், அணியை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த நிர்வாகம் எடுத்த முடிவு ஏற்புடையது. தோனி கேப்டனாக இருக்கும் போது, பல வீரர்களை அறிமுகப்படுத்தினார், முன்னேற்றினார். அதுபோல் இப்போது செய்ய வேண்டும். ஒரு வீரர் அவர் வாழ்க்கையில் எந்த அளவுக்கு சிறப்பான வீரராக இருக்கிறார் என்பது விஷயமல்ல, மற்ற வீரர்களுக்கு எவ்வாறு துணை புரிகிறார் என்பதுதான் முக்கியம். என்னைப் பொருத்தவரை தோனியை நீக்கி விட்டு டி20 அணியைத் தேர்வு செய்தது சரியான முடிவு

இவ்வாறு அகர்கர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x