Published : 23 Aug 2014 00:00 am

Updated : 23 Aug 2014 12:58 pm

 

Published : 23 Aug 2014 12:00 AM
Last Updated : 23 Aug 2014 12:58 PM

நம்பிக்கையோடு காத்திருப்போம்

முன்பெல்லாம் இந்திய அணி படுதோல்வியைச் சந்திக்கும்போது கிரிக்கெட் ரசிகர்கள் அதைத் துக்க நாள்போல உணர்வார்கள். திரும்பத் திரும்பப் பேசித் தமது ஆற்றாமையைத் தீர்த்துக்கொள்வார்கள். இந்த முறை இங்கிலாந்தில் இந்திய டெஸ்ட் அணி மிக மோசமாகத் தோற்றபோது அப்படிப்பட்ட எதிர்வினைகள் எழவில்லை.

காரணம், ஜாம்பவான்கள் யாரும் இல்லாத அணி என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இல்லை. எனவே ஏமாற்றமும் அந்த அளவுக்கு இல்லை. கிரிக்கெட் வெற்றி தோல்விகளை வைத்து தேசிய விழா அல்லது தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கும் காலம் இனி வருமா என்று தெரியவில்லை.

குறிப்பாக டெஸ்ட் போட்டியில் அப்படிப்பட்ட நிலை இனி உருவாவது கடினம் என்றே தோன்றுகிறது. காரணம், நம்பிக்கை உருவாவதற்கு முன்பே, எந்தச் சாதனையையும் நிகழ்த்துவதற்கு முன்பே, இந்த இளம் அணி தலை குனிவைச் சந்தித்திருக்கிறது. நேற்றைய நாயகர்களின் வெற்றிகளையும் சாதனைகளையும் தங்களுடைய வெற்றிகளாகவும் சாதனைகளாகவும் ரசிகர்கள் உணர்ந்தார்கள்.

அவர்களுடைய தோல்விகளையும் தங்களுடைய தோல்விகளாக உணர்ந்தார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனங்களை அவர்கள் தங்களது சீரான ஆட்டத்தின் மூலம் கொள்ளை கொண்டிருந்தார்கள். இன்றைய அணி தொடக்கத்திலேயே இப்படிச் சறுக்குகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்துக்கு இது நல்லதல்ல.

பொய்த்த நம்பிக்கை

இரண்டு மாதத்துக்கு முன்புகூட இந்த அணியின் மீது ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நம்பிக்கை இருந்தது.சென்ற ஆண்டில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றவர்கள், 20 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியை எட்டியவர்கள், தென்னாப்பிரிக்காவிலும் நியூஸிலாந்திலும் தோற்றாலும் உறுதியாகப் போராடி கௌரவத்தை நிலைநிறுத்தியவர்கள் என்னும் மரியாதை இவர்கள் மீது இருந்தது. இந்த இளைஞர்கள் போராடுவார்கள் என்னும் நம்பிக்கை இருந்தது.

முதல் இரு போட்டிகளில் அந்த நம்பிக்கையை நிரூபித்தும் காட்டினார்கள். லார்ட்ஸில் பெற்ற வெற்றி இந்திய டெஸ்ட் அணியின் வலிமைக்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்தது. ஆனால் வானம் கறுத்துக் கடுமையான இடியும் இடித்த பிறகு மழை பெய்யாமல் வானம் வெளுத்து வெயில் அடிப்பதைப் போன்ற திருப்பம் ஏற்பட்டது. முதல் இரு டெஸ்ட்களில் தெரிந்த சாதகங்கள் எல்லாம் காற்றில் சிதறுண்ட மேகங்களைப் போலக் காணாமல்போயின.

அடுத்து வந்த மூன்று போட்டிகளிலும் படிப்படியாகப் பாதாளத்தைத் தொட்டது இந்திய அணி. நேற்று ஆடியதைவிட இன்று மோசமாக ஆடுகிறேனா இல்லையா பார் என்று சவால் விட்டு ஆடுவதுபோல ஒவ்வொரு நாளும் புதிய வீழ்ச்சியை இந்திய அணி ஆரத் தழுவிக்கொண்டது.

ஆதங்கம்

கடைசி இரண்டு ஆட்டங்களில் அது ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டை விரும்பும் யாருக்குமே வருத்தம் தரக்கூடியதாக இருந்தது. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன்களான ஜெஃப்ரி பாய்காட், மைக்கேல் வான் போன்றோரும் இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்தார்கள். இதில் கோபத்தை விடவும் இவ்வளவு மோசமாக ஆடுகிறார்களே என்னும் ஆதங்கமே அதிகம் தெரிந்தது. குறிப்பாக மொயீன் அலியின் வீச்சில் அதிக விக்கெட்டுகளைப் பறிகொடுத்ததை வானால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

தோனியின் இரண்டு இன்னிங்ஸ்கள், ரஹானே, விஜயின் தலா இரண்டு இன்னிங்ஸ்கள், ரவிச்சந்திரன் அஸ்வினின் நேர்த்தியான மட்டை ஆட்டம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டால் இந்திய மட்டையாளர்கள் கண்களைக்

கட்டிக்கொண்டு ஆடியவர்களைப் போலவே ஆடினார்கள். மட்டையாட்டத்தின் அடிப்படைகள்கூடத் தெரியாதவர்கள்போல ஆட்டமிழந்தார்கள். அதுவும் அடுத்த திராவிட் என வர்ணிக்கப்பட்ட சதீஸ்வர் புஜாராவும் இரண்டாவது சச்சின் எனச் சொல்லப்படும் விராட் கோலியும் ஆட்டமிழந்த விதங்கள் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தின.

கண்ணை மறைக்கிறதா வருமானம்?

தொண்ணூறுகளுக்கு முந்தைய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் வாழ்நாள் முழுவதும் ஆடியும் சம்பாதிக்க முடியாத தொகையை இரண்டு ஐ.பி.எல். தொடர்களில் ஆடி இன்று ஒரு புதிய ஆட்டக்காரர் சம்பாதித்துவிட முடியும். எனவே கிரிக்கெட் என்பதும் டெஸ்ட் அணியில் இடம்பெறுவது என்பதும் ஒரு லட்சியக் கனவு என்ற நிலை மாறிவிட்டது.

நாட்டின் அடையாளத்துக்கோ பெருமைக்கோ, ஏன் தரமான கிரிக்கெட்டுக்கோ தொடர்பில்லாத கேளிக்கையான ஐ.பி.எல். ஆட்டத்தின் மூலம் புகழும் பணமும் பெறும் இளைஞர்களின் ஆட்டத்திலும் அணுகுமுறையிலும் அலட்சியம் தெரிவதும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தலைகுனிவைச் சந்திப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை அல்ல. இந்தப் பின்னணியில்தான் “டெஸ்ட் ஆட விருப்பம் இல்லாவிட்டால் வெளியேறுங்கள்” என்று சொல்லும் கவாஸ்கரின் கோபத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

என்ன செய்யலாம்?

கவாஸ்கரின் சொல்லை ஆட்டக்காரர்கள் மட்டுமின்றி அவர்களை வைத்துப் பணம் சம்பாதிக்கும் வாரியமும் யோசிக்க வேண்டும். சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உலக கிரிக்கெட் நிர்வாகத்தை மிரட்டும் பண பலம் இந்திய வாரியத்திடம் இருக்கிறது. ஆனால் உலகின் எந்த அணியையும் மிரட்டும் ஆட்டத் திறன் இந்தியாவிடம் இல்லை. பணத்தை வைத்துக்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்றுவிட முடியாது.

ஆனால் திறனை மேம்படுத்தும் பயிற்சிகளைத் தரலாம். பந்து வீச்சுக்கு உகந்த களங்களை உருவாக்கி அவற்றில் உள்ளூர் போட்டிகளை நடத்தலாம். வாரியம் தன் பண பலத்தை இப்படியும் பயன்படுத்தலாம். சுய பரிசோதனையும் தீர்வுக்கான உண்மையான ஆசையும் இருந்தால் இதையெல்லாம் செய்யலாம். எந்த அளவுக்கு இவற்றை நேர்மையாகச் செய்கிறார்களோ அந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட் உருப்படும்.

முன்பெல்லாம் இந்தியா மோசமாகத் தோற்றால் அணியில் பெருமளவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பேச்சு வரும். இன்று மாற்று ஆட்டக்காரர்கள் அதிகம் பேர் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாக மாற்றுக்கான தேர்வுகள் அதிகம் இருந்தன. இப்போது இல்லை. அதுவும் டெஸ்ட் போட்டிக்கு இல்லவே இல்லை.

கம்பீர் தனது ஆட்டம் மேம்படவே இல்லை என்பதை நிரூபித்துவிட்டார். வீரேந்திர சேவாக்கிற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். இடைநிலை வரிசைக்கு மாற்றுகள் அதிகம் இல்லை. ஆனால் ஜடேஜாவை ஆல்ரவுண்டர் என்று சொல்லி டெஸ்ட் அணியில் சேர்க்கும் அபத்தத்துக்கு முடிவு கட்டலாம். அதுவும் அந்நிய மண்ணிலாவது இந்த அபத்தத்தைத் தவிர்க்கலாம். முறையான பந்து வீச்சாளரைச் சேர்க்கலாம். மட்டையாளர்களுக்கான பயிற்சியைத் தீவிரப்படுத்தலாம். அவர்கள் தவறுகளிலிருந்தும் பயிற்சியிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கலாம். வேறு என்ன செய்ய முடியும்?

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    கிரிக்கெட்சர்ச்சைஇந்திய அணிஐபிஎல்தோல்விகிரிக்கெட் ரசிகர்கள்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author