

தோனியின் டெஸ்ட் போட்டி கேப்டன்சி ‘தர்க்கமற்றதாக’ இருக்கிறது என்று கூறிய நியூசி.முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ், ஒருநாள், டி-20 கிரிக்கெட்டிற்கே அவர் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார்.
ஈஎஸ்பின் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:
"டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் துறந்து விட்டால் அவரது விந்தையான, கிரிக்கெட்டிற்குப் புறம்பான கேப்டன்சியிலிருந்து இந்திய அணி விடுபடும்.
4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா போராடாமல் சரணடைந்த போது கூட டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் தோல்வி பற்றி பெரிதாகக் கவலைப் பட்டது போல் தெரியவில்லை.
அவரது அணித் தேர்வு தர்க்கத்திற்குப் புறம்பானதாக உள்ளது. களத்தில் அவர் வீரர்களைக் கையாள்வது, பீல்டிங் அமைப்பு போன்றவற்றில் சூழ்நிலைக்குத் தக்கவாறாக அவர் எதுவும் செய்வதில்லை. லார்ட்ஸ் டெஸ்டில் இஷாந்த் சர்மாவை பவுன்சர் வீசச் சொன்னதாக அவர் கூறிய ஒன்று மட்டும் விதிவிலக்கு.
டெஸ்ட் கிரிக்கெட் குறித்து அவரது ஆர்வமின்மையை அவரே பலமுறை சூசகமாகத் தெரிவித்துள்ளார். ஆகவே பணமோ அல்லது ஆட்டத்தின் வேகமோ அல்லது இரண்டுமோ, வண்ணச் சீருடை, வெள்ளைப் பந்து, குறைந்த ஓவர் கொண்ட கிரிக்கெட் வடிவம்தான் தோனிக்குப் பொருத்தமாக இருக்கிறது. அதில் அவர் திறம்பட செயல்படுகிறார்.
2011 உலகக் கோப்பை போட்டிகளில் அவரது அணித்தலைமைப் பொறுப்பு தன்னம்பிக்கையுடனும் சீராகவும் இருந்தது. எனவே டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் விலகி 2015 உலகக் கோப்பைப் போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க இப்போது முதலே திட்டமிடலாம்.
இவ்வளவு காலம் டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுகிறார். சுருக்கமாக 87 டெஸ்ட் போட்டிகள் ஆகிவிட்டது. ஒரு டெஸ்ட் வீரராக அவர் எத்தனை நாட்கள் இப்படிப்பட்ட ஃபார்மில் தொடர முடியும்.
இவ்வாறு எழுதியுள்ளார் மார்ட்டின் குரோவ்.