Last Updated : 25 Oct, 2018 08:43 PM

 

Published : 25 Oct 2018 08:43 PM
Last Updated : 25 Oct 2018 08:43 PM

நாட்டுக்காக ஆடுவதுதான் பெரிது; 10,000 ரன்கள் சாதனைக்கு நான் உரிமை கொண்டாட விரும்பவில்லை: விராட் கோலி பேட்டி

நாட்டுக்காக ஆடுவது நமக்கு செய்யப்படும் சாதக அம்சமாக நான் பார்ப்பதில்லை. அதனால்தான் 10 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடியும், எதற்கும் நான் உரிமை கொண்டாட விரும்பவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை அதிவேகமாக எடுத்து மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை 54 இன்னிங்ஸ்கள் முன்னதாகவே எட்டினார் விராட் கோலி.

இந்நிலையில் பிசிசிஐ.டிவிக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:

என் நாட்டுக்காக ஆடுவதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய மரியாதை, 10 ஆண்டுகள் நாட்டுக்காக ஆடிய பிறகும் கூட நான் எதற்கும் உரிமை கொண்டாட விரும்பவில்லை. ஒவ்வொரு ரன்னுக்கும் கடினமாக உழைக்க வேண்டும், சர்வதேச கிரிக்கெட்டில் அது முக்கியமானது.

நாட்டுக்காக ஆட வேண்டுமென்ற எண்ணம் பல வீரர்களுக்கும் அகத்தில் கொழுந்து விட்டு எரியும் அவாவாகும். இந்நிலை நமக்குக் கிடைத்திருக்கும் நிலையில் நாம் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எதையும் எந்த கட்டத்திலும் எளிதாக எடுத்துக் கொள்ளுதல் கூடாது.

அணிக்காக கடமை உணர்வுடன் ஆட வேண்டும். ஒரு ஓவரில் 6 முறை டைவ் அடிக்க வேண்டுமானாலும் அணிக்காக நான் செய்வேன். ஏனெனில் அது என் கடமை, அதற்காகவே நாட்டுக்காக ஆட நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். என் பணியின் ஓர் அங்கம் அது. இது யாரோ ஒருவருக்கு அளிக்கப்படும் முன்னுரிமை அல்ல. நான் டைவ் அடித்து ரீச் செய்கிறேன் என்றால் நான் கடமை உணர்வுடன் ஆடுகிறேன் என்பதை பிறருக்கு நடித்துக் காட்ட அல்ல. அணிக்காக கூடுதல் ரன் எடுக்கும் முயற்சியே அது. கவனம் அந்தத் தருணத்தில் அதில் மட்டுமே தான் இருக்க வேண்டும்.

நான் களைப்படைந்து விட்டேன், மன ரீதியாக களத்தில் இல்லை என்று நான் கருதக்கூடாது, அணிக்காக ஒரு ரன்னை கூடுதலாக எடுக்க முயல்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அணிக்கு தேவை என்னவோ அதனை நோக்கித்தான் நான் என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருகிறேன். இந்த நடைமுறையில் நான் ரன்கள் அதிகம் எடுக்கிறேன், நான் அந்த இடத்தில் என் பேட்டிங், என் ரன் என்று யோசிப்பதில்லை.

10,000 ரன்கள் மைல் கல் என்பதெல்லாம் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும், ஆனால் எனக்குள் அந்த செயல்பாங்கு மீதுதான் கவனம். 10-12 ஒவர்கள் கூடுதலாக ஆடினால் அணிக்கு ரன்கள் கூடுதலாக வரும்.

நான் உண்மையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். ஆதலால் சாதனை பெரிதல்ல, நான் விரும்பும் ஒரு விளையாட்டில் நான் 10 ஆண்டுகள் ஆடுவது எனக்கு சிறப்பு வாய்ந்தது. நான் இன்னும் இன்னும் விளையாடவே விரும்புகிறேன். இதுதான் எனக்கு முக்கியம். எனவே நீண்ட காலம் ஆடவேண்டும், என்னால் நீண்ட காலம் ஆட முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கூறினார் விராட்.

ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பிற்காக வெயிட்டிங்! - 'சூப்பர் சிங்கர்' செந்தில் கணேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x