Published : 30 Oct 2018 10:57 AM
Last Updated : 30 Oct 2018 10:57 AM

0.08 விநாடி ‘ரியாக்‌ஷன் டைம்’ : தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்

மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா டி20 தொடர்களுக்கு சொதப்பலான பேட்டிங் காரணமாக நீக்கப்பட்ட தோனி, தனது கீப்பிங் திறமையில் இன்று வரை சோடைபோகாமல் அபாரமாகத் திகழ்ந்ததற்கு இன்னொரு உதாரணம் நேற்றைய 4வது போட்டியில் நிகழ்ந்தது.

புனேயில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஹேம்ராஜ் அடித்த ஹூக் ஷாட் சரியாகச் சிக்காமல் பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் பந்து எழும்ப பந்திலிருந்து கண்ணை எடுக்காத தோனி பந்துடனே சென்று கடைசியில் அது தரை தட்டவிருந்த போது ஒரு டைவ் அடித்து கேட்ச் பிடித்ததைப் பார்த்தோம்.

நேற்றைய போட்டி அவரது மறையா ரிஃப்ளெக்ஸுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்ந்தது.

378 ரன்கள் இமாலய இலக்கை எதிர்கொண்டு ஆடிய மே.இ.தீவுகள் அணி ஏற்கெனவே தோல்வியை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் ஆட்டத்தின் 28வது ஓவரில் கீமோ பால் பேட் செய்தார், பவுலிங் வீசியது ரவீந்திர ஜடேஜா. ஒரு பந்தை ஜடேஜா குத்தித் திருப்ப அது பாலின் பேட்டைக் கடந்து சென்றது, கிரீசுக்கு கொஞ்சம்தான் அவரது பின் கால் வெளியில் இருந்தது, ஆனால் பந்து பீட் ஆனவுடன் திரும்பிப் பார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் தோனி ஸ்டம்ப்டு செய்து முடித்திருந்தார்.

நடுவர் 3வது நடுவரை ரெஃபர் செய்தாலும் கீமோ பால் தான் அவுட் என்பதை உணர்ந்து தீர்ப்புக்குக் காத்திருக்காமல் நடையைக் கட்டினார்.

அதாவது தோனிக்கு பைல்களை அகற்ற ரியாக்‌ஷன் டைம் 0.08 விநாடிகள்தான் தேவைப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் தோனி 0.09 ரியாக்‌ஷன் டைமில் ஒரு ஸ்டம்பிங்கை நிகழ்த்தியிருந்தார், தற்போது இன்னும் கொஞ்சம் குறைவான நேரத்தில் ஆங்கிலத்தில் in no time என்பார்களே அது போல் பிளாஷ் ஸ்டம்பிங்கைச் செய்துள்ளார். விக்கெட் கீப்பிங்கின் உசைன் போல்ட் என்று தோனியை யாராவது அழைத்தால் அது மிகையாகாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x