Published : 05 Oct 2018 12:30 PM
Last Updated : 05 Oct 2018 12:30 PM

சேவாக் சாதனையைக் கடந்த விராட் கோலி; ரிஷப் பந்த் ஒருநாள் பாணி அதிரடி 92: இந்தியா 506/5

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை இந்திய அணி தன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி மேலும் ஒரு சதத்தை தன் கணக்கில் சேர்த்து 120 ரன்களுடன் ஆடி வருகிறார், இவருடன் ஜடேஜா 19 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

விராட் கோலியின் 24வது டெஸ்ட் சதமாகும் இது, டெஸ்ட் சதங்களில் அதிரடி மன்னன் சேவாகைக் கடந்தார் விராட் கோலி. ரிஷப் பந்த், பிஷூ வீசிய நன்றாகத் தூக்கி வீசப்பட்ட பந்தை மிட்விக்கெட்டில் ஒரே தூக்கு தூக்க நினைத்தார் ஆனால் கூக்ளி பந்து ஷார்ட் தேர்ட்மேனில் கேட்ச் ஆனது. துரதிர்ஷ்டவசமாக அடுத்தடுத்த டெஸ்ட்களில் சதம் என்ற வாய்ப்பைக் கோட்டைவிட்டார்.

ஆனால் பாவம் மே.இ.தீவுகளின் இந்தப் பந்து வீச்சை எவ்வளவுதான் பொறுமையாக ஆடிக்கொண்டிருப்பது, அது மிகவும் கடினமான ஒன்று. இவரது இன்னிங்ஸை ஒப்பிடும்போது விராட் கோலி சாதாரணமாக ஆடினார் ஆனாலும் 184 பந்துகளில் சதம் எடுத்தார். பந்த் அதிரடியினால் 364/4 என்ற ஸ்கோரிலிருந்து மேலும் 142 ரன்கள் ஒரே செஷனில் சேர்க்கப்பட்டது.

முதலில் ஷெர்மன் லூயிஸ் ஷார்ட் பிட்ச் பந்தில் பந்த்தை கொஞ்சம் படுத்தினார், கீமோ பால் பந்துகளும் சிலது பந்த் மட்டையைக் கடந்து சென்றன. ஷார்ட் பிட்ச் முயற்சியை அடிக்க பந்த் நினைத்த போது ஒரு முறை கேட்சாகச் சென்று டீப் ஸ்கொயர்லெக்கில் பீல்டருக்கு முன்னால் தரைதட்டியது. இன்னொரு எட்ஜ் முதல் ஸ்லிப்புக்கு முன்னால் விழுந்தது. ஆனாலும் பந்த் அடித்து ஆடும் முயற்சியைக் கைவிடவில்லை. வேகப்பந்து வீச்சு விக்கெட் விழாத போது மாற்றப்பட்டு ஸ்பின் கொடுக்கப்பட்டது, அப்போது பந்த் புகுந்து விளையாடினார்.

ஒருசமயத்தில் கோலியைக் காட்டிலும் முன்னதாகவே சதம் எடுப்பார் என்ற அளவுக்கு அதிரடி அமைந்தது. ஆனால் 92 ரன்களில் பிஷூவின் கூக்ளியில் வீழ்ந்தார். விராட் கோலி அனாயசமாக ஆடினார், ராஜகவர் ட்ரைவ்கள் வந்தன, பாட்டம் ஹேண்ட் லெக் சைட் ஷாட்டும் வந்தது, சிங்கிள்கள், இரண்டுகள் அதிகம் எடுத்தார் பவுண்டரிகள் 7 தான். 24வது சதம் கண்ட விராட் கோலி, சச்சின், கவாஸ்கர், திராவிட் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இந்தியா 506/5.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x