

இங்கிலாந்திடம் தொடர்ச்சியாக 3 டெஸ்ட் தொடர்களை இழந்ததையடுத்து தோனி மற்றும் பயிற்சியாளர்கள் மீது முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
"லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடினமான பிட்சில் வெற்றி பெற்ற பிறகு அந்த வெற்றியைத் தக்கவைப்பதில் பிளெட்சர் பங்களிப்பு எதுவும் செய்யவில்லை. ஆம் பிளெட்சர் போக வேண்டியதுதான்” என்று அஜித் வடேகர் சாடியுள்ளார்.
தோனி பற்றி அவர் கூறுகையில், “உத்தியை மாற்றி பேட்டிங்கில் நன்றாக ஆடினார். ஆனால் கேப்டன்சியைப் பொறுத்தவரை அவரது அணுகுமுறை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தேர்ட்மேன் வைக்கவில்லை இங்குதான் எதிரணியினர் அதிக ரன்களைக் குவிக்கின்றனர். அதேபோல் அணித் தேர்வும் சரியில்லை. அஸ்வின் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஆடியிருக்க வேண்டும். ஆனால் இல்லை.” என்றார்.
குண்டப்பா விஸ்வநாத்: தோனியின் கீப்பிங் மற்றும் கேப்டன்சி மீது எனக்கு திருப்தியில்லை. அவர் என்ன நினைக்கிறாரோ அதையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கிறார். ஏதாவது அதிசயம் நடந்து விடவேண்டும் என்று நினைக்கிறார் தோனி. அதிசயங்கள் எப்போதுமா நடக்கும்?
முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னா: “பிளெட்சரின் பங்களிப்பு பூஜ்ஜியம் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்றார்.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: பிளெட்சர் அணிக்காக எந்த பங்களிப்பையும் செய்யவில்லை. இந்தத் தொடர் தோல்விகள் ஏமாற்றமளிக்கிறது. பலரும் கூறுவது போல்இது ஒன்றும் அனுபவமற்ற வீரர்களைக் கொண்ட அணி அல்ல. இந்த அணியில் 7 அல்லது 8 வீரர்கள் அனுபவம் பெற்றவர்கள்தான். போராடும் குணம் இல்லை. தேவையான விருப்புறுதி வீரர்களிடையே இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.
அஞ்சுமன் கெய்க்வாட்: "பயிற்சியாளர் என்பவர் வீரர்கள் தடுமாறும்போது உதவி புரிபவர்களகா இருக்க வேண்டும். ஆனால் தவறு எங்கு நிகழ்ந்தது என்பது புரியவில்லை. பயிற்சியாளர் கூறுவதை வீரர்கள் ஏற்கவில்லையெனில் பயிற்சியாளர் என்ற ஒருவர் எதற்காக?”
அசோக் மல்ஹோத்ரா: ஒருநாள், இருபது ஓவர் கிரிக்கெட்டிற்குத் தோனி சிறப்பானவர், டெஸ்ட் போட்டிகளுக்கு அவரிடம் ஒரு திட்டமும் இல்லை. கங்குலிதான் டெஸ்டின் சிறந்த கேப்டன், அவர் தனது ஆட்டம், மற்றும் கேப்டன் பொறுப்பின் மீது அதீத கர்வம் உள்ளவர். 8 டெஸ்ட் போட்டிகளை அடுத்தடுத்து தோற்றவுடனேயே மாற்று பயிற்சியாளரை முடிவு செய்திருக்க வேண்டும். ஆனால் தோனியும் மூத்த வீரர்களும் பிளெட்சரைப் பாதுகாத்தனர்.
வீராட் கோலி, புஜாரா, தவன், மற்றும் கம்பீர் ஆகியோரது பிரச்சினைகளை அவர் களைந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ ஒன்றுமே செய்யவில்லை.
இவ்வாறு முன்னாள் வீரர்கள் சாடினாலும் மீண்டும் தோனிக்கு மாற்று இப்போதைக்கு இல்லை என்ற பழைய பல்லவியைப் பாடியுள்ளனர்.