Last Updated : 28 Oct, 2018 05:00 PM

 

Published : 28 Oct 2018 05:00 PM
Last Updated : 28 Oct 2018 05:00 PM

வார்னரை நோகடித்து ‘ஸ்லெட்ஜிங்’ செய்த பில் ஹக்ஸ் சகோதரர்: பேட்டிங்கை நிறுத்தி பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு

சிட்னியில் நடந்த கிளப்லெவல் கிரிக்கெட் போட்டியின் போது, டேவிட் வார்னரின் மனது வேதனைப்படும் வகையில் பில் ஹக்ஸின் சகோதரர் ஸ்லெட்ஜிங் செய்ததால், வார்னர் பேட்டிங்கை பாதியிலேயே நிறுத்தி வெளியேறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடும் போது, தலையில் கிரிக்கெட் பந்துபட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்த இளம் வீரர் பில் ஹக்ஸ். இவரின் சகோதரர் ஜேஸன் ஹக்ஸின் ஸ்லெட்ஜிங்கால் வார்னர் வேதனை அடைந்து வெளியேறினார்.

ஆனால், சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் களத்துக்கு வந்த வார்னர், சிறப்பாக ஆடிய 157 ரன்கள் குவித்து தனது வேதனைக்கு ஆறுதல் தேடிக்கொண்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் சிக்கினார்கள். இருவருக்கும் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது. இருவரும் மக்களிடம் வந்து பொதுமன்னிப்பு கேட்டு கண்ணீர்விட்டனர். கடந்த சில மாதங்களாக இருவரும் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சிட்னி நகரில் நேற்று ரான்ட்விக், பீட்டர்ஷாம் கிளப்புகள் இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ரான்ட்விக் அணியில் டேவிட் வார்னர் இணைந்து விளையாடினார். டேவிட் வார்னர் 35 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

அப்போது பில் ஹக்ஸின் சகோதரர் ஜேஸன் ஹக்ஸ் பீல்டிங் செய்தபோது, பேட்டிங்கில் இருந்த வார்னரைப் பார்த்து ஏதோ கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால், மனவேதனை அடைந்த வார்னர், தொடர்ந்து பேட் செய்யமுடியாமல் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார்.

இதனால், மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. சகவீரர்கள் சென்று வார்னரை சமாதானப்படுத்தினார்கள். ஆனால், மிகுந்த வேதனையில் இருந்த இருந்த வார்னர் சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் விளையாட முடிவு செய்து களத்தில் இறங்கி 157 ரன்கள் விளாசினார்.

இதுகுறித்து டேவிட் வார்னரின் மனைவி கேன்டிஸ் வார்னர் கூறுகையில், ‘‘எனது கணவரைப் பற்றி ஜேஸன் ஹக்ஸ் திட்டியதை நான் விளக்கமாகச் சொல்ல முடியாது. அந்த வார்த்தை தாக்குதலில் இருந்து வார்னர் மீண்டுவிட்டாலும்கூட, அந்தத் தருணத்தில் அவர் கிரிக்கெட் தொடர்ந்து விளையாட வேண்டாம் என்று முடிவு செய்தே பெவிலியன் திரும்பினார். ஆனால், கிரிக்கெட்டின் மீதான மரியாதையால் மீண்டும் வார்னர் விளையாடினார்.

உண்மையில் ஒருவரை கோபப்படுத்தும் வார்த்தைக்கும் (ஸ்லெட்ஜிங்), திட்டுவதற்கும் வேறுபாடு இருக்கிறது. நடந்த சம்பவங்கள் குறித்துநான் ஏதும் பேசப்போவதில்லை. ஆனால் வார்னர் மனவேதனை அடையும் வகையில் ஜேஸன் கருத்துக்களை தெரிவித்திருக்கக் கூடாது. அதுவார்னரை மிகவும் பாதித்துவிட்டது’’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, டேவிட் வார்னரை என்ன வார்த்தைக் கூறி ஜேஸன் ஹக்ஸ் திட்டினார் என்று வார்னரின் மனைவி தெரிவிக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் வெளிவரும் நாளேடுகள், வார்னர் நாட்டுக்கு அவமானம், பலவீனமானவர் என்று ஜேஸன் பேசியதாகத் தெரிவித்துள்ளன.

 

போட்டியின் மேலாளர் பில் ஆன்டர்ஸன் கூறுகையில், ‘‘வார்னர் தன்னைப் பற்றி ஜேஸன் ஹக்ஸ் கூறிய கருத்துக்கள் மிகுந்த வேதனைப்படுத்தியதாகத் தெரிவித்தார். அதுபோன்ற வார்த்தைகளைக் கேட்டபின்பும் தொடர்ந்து விளையாட விரும்பவில்லை என்று நினைத்துத்தான் அவர் களத்தில் இருந்து வெளியேறி பெவிலியனுக்கு திரும்பினார். ஹக்ஸ் பேசிய வார்த்தை வார்னரை மிகவும் காயப்படுத்திவிட்டது. ஆனால், சிறிதுநேரத்துக்குபின் தன்னை நிலைப்படுத்திய நிலையில், வார்னர் மீண்டும் விளையாட முடிவு செய்தார்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x