Published : 21 Oct 2018 08:49 AM
Last Updated : 21 Oct 2018 08:49 AM

குவஹாட்டி பார்சபரா மைதானத்தில் இன்று இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில் மோதல்: அறிமுக வீரராக களமிறங்குகிறார் ரிஷப் பந்த்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி குவஹாட்டியில் உள்ள பார்சபரா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளது. இந்த காலக்கட்டத்தில் இந்திய அணி 18 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கிறது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்று தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகக் கோப்பைக்கு தயாராகுவதற்கும், நடுகள பேட்டிங் வரிசை அதிலும் முக்கியமாக 4-வது வீரர் தேர்வை முடிவு செய்வதற்கும் இந்திய அணிக்கு இந்தத் தொடர் சிறந்த வகையில் உதவக்கூடும் என கருதப்படுகிறது.

பேட்டிங் வரிசையில் கடந்த சில ஆண்டுகளாக 4-வது இடத்தில் பல்வேறு வீரர்களை சுழற்சி முறையில் இந்திய அணி நிர்வாகம் களமிறக்கி சோதித்து பார்த்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இதில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் இறுதி கட்ட சோதனை முயற்சிகளில் களமிறங்க வேண்டிய நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி, ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் புத்துணர்ச்சியுடன் குறுகிய வடிவிலான தொடரை சந்திக்கிறார்.

இந்தத் தொடரில் விராட் கோலி நடுகள வரிசையில் புதிய கூட்டணியை முயற்சித்து பார்க்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பந்த் அறிமுக வீரராக இடம் பெறக்கூடும். நேற்று அறிவிக்கப்பட்ட 12 பேர் கொண்ட இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெற்றிருந்தது. 21 வயதான ரிஷப் பந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஓவல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியிருந்தார். மேலும் சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட்டில் 92 ரன்கள் சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

அணியில் விக்கெட் கீப்பராக அனுபவ வீரரான தோனி இருப்பதால் ரிஷப் பந்த் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக மட்டுமே களமிறங்குவார். தினேஷ் கார்த்திக் இடம்தான் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நெருக்கடியும் ரிஷப் பந்துக்கு உருவாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க மீண்டும் தோனியின் மீது அனைவரது பார்வையும் திரும்பி உள்ளது.

சமீபகாலமாக அவரது பேட்டிங் திறன் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. களத்தில் அதிக நேரம் செலவிடாமல் விரைவாகவே விக்கெட்டை பறிகொடுப்பதால் தன் மீதான அழுத்தத்தை அவரே அதிகரிக்கச் செய்து கொண்டுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் தோனி 4 ஆட்டங்களில் 19.25 சராசரியுடன் 77 ரன்களே சேர்த்தார். இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக தோனி 15 ஆட்டங்களில் பங்கேற்ற நிலையில் 10 ஆட்டங்களில் பேட் செய்து 28.12 சராசரியே கொண்டுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள இங்கிலாந்தில் தோனி 20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 38.06 சராசரி வைத்துள்ளார். இதுவரை அங்கு, அவர் ஒரு சதம் கூட அடித்தது இல்லை. உலகக் கோப்பை வரை தோனியின் இடம் அணியில் உறுதி என்பதால், அவர் பழைய பார்முக்கு திரும்பும் வழிகளில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் முதல் 3 இடங்களில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகியோர் வழக்கம் போன்று களமிறங்குவார்கள்.

4-வது வீரராக அம்பதி ராயுடு களமிறங்கக்கூடும். ஆசிய கோப்பை தொடரில் அவர், 43.75 சராசரியுடன் 6 ஆட்டங்களில் 175 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். ரிஷப் பந்த் 5-வது இடத்திலும் அவரை தொடர்ந்து தோனி 6-வது இடத்திலும் களமிறங்கக்கூடும். ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாததால் அவரது இடத்தில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் எனத் தெரிகிறது.

யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நெருக்கடி தரக்கூடும். புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா இல்லாததால் வேகப்பந்து வீச்சு துறைக்கு மொகமது ஷமி, உமேஷ் யாதவ் பொறுப்பேற்றுள்ளனர். இதில் உமேஷ் யாதவ், டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இதனால் அவர் மீது சற்று எதிர் பார்ப்பு உள்ளது. 3-வது வேகப்பந்து வீச்சாளராக கலீல் அகமது அணியில் இடம் பிடித்திருந்தாலும் அவருக்கு வாய்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

டெஸ்ட் தொடரை 2-0 என இழந்ததால் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி உள்ளது. அதிரடி வீரரான எவின் லீவிஸ் சொந்த காரணங்களுக்காக கடைசி நேரத் தில் தொடரில் இருந்து விலகியுள் ளார். ஏற்கெனவே கிறிஸ் கெயில், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்காத நிலையில் எவின் லீவிஸூம் விலகி உள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணியை மேலும் பலவீனம் அடையச் செய்துள்ளது.

டெஸ்ட் போட்டியின் போது நடுவர்களுடன் வாக்குவாதம் செய்ததால் 2 ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவும் வீரர்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் மூத்த வீரர்களான மார்லன் சாமுவேல்ஸ், கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஜேசன் ஹோல்டர், வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச் ஆகியோர் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

தொடக்க வீரரான சந்தர்பால் ஹேம்ராஜ், ஆல்ரவுண்டர் பேபியன் ஆலன், வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் ஆகியோர் அறிமுக வீரர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கக்கூடும். ஐசிசி தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசியாக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என இழந்திருந்தது. மேலும் அந்த அணி 2014-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை வென்றதே இல்லை. இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சோகம் இந்தத் தொடரிலும் தொடரக்கூடும்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரிஸ், தேவேந் திர பிஷூ, சந்தர்பால் ஹேம்ராஜ், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், கெய்ரன் பொவல், ஆஷ்லே நர்ஷ், கீமோ பால், ரோவ்மான் பொவல், கேமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஓஷேன் தாமஸ், ஓபேட் மெக்காய்.

நேரம்: பிற்பகல் 1.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

 ‘நடுவரிசை கவலை நீங்கும்’

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “இப்போது எங்கள் முன் இருக்கும் சவால், அணியில் 4-ம் இடத்துக்குச் சரியான பேட்ஸ்மேனைக் கண்டுபிடிப்பதுதான். கடந்த சில போட்டிகளாக அம்பதி ராயுடு நடுவரிசையில் விளையாடி வருகிறார். இதற்கு முன் பல வீரர்களை தேர்வு செய்து நடுவரிசையில் விளையாட வைத்தோம், ஆனால், யாரும் நிலைத்தன்மையுடன் பேட் செய்யவில்லை. அம்பதி ராயுடு நிலைத்து நின்று பேட்செய்து விட்டால், உலகக் கோப்பைக்குள் நடுவரிசையை பற்றிய கவலை நீங்கிவிடும்” என்றார்.

தோனி பேட்டிங் பார்ம் குறித்து விராட் கோலி பதிலளிக்கையில், “இப்போதெல்லாம் பிரச்சினைகளை உருவாக்குவதைத் தவிர சிலருக்கு வேறு ஏதும் தெரிவதில்லை. இங்கிலாந்தில் யாரேனும் 3-வது இடத்தில் விளையாடத் தயாராக இருந்தார்களா?. பேட்டிங் வரிசை எப்போதும் தயாராக இருக்கிறது. ஆனால், 4-வது இடத்துக்குப் பின் யார் விளையாடத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் இப்போது முக்கியம். சூழ்நிலைக்கு ஏற்றார்போல், விளையாடும் வீரர்தான் முக்கியம். ஆதலால், விமர்சனம் செய்வது எளிதானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x