Published : 11 Oct 2018 03:35 PM
Last Updated : 11 Oct 2018 03:35 PM

ரோஹித் பவர் பிளேவில் பந்துவீசக் கூறினார்; நான் தோனியைப் பார்த்தேன்: சாஹல்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யஜுவேந்திர சாஹல்,  தோனி தனக்கு எந்த வகையில் களத்தில் உதவினார் என்பது குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சாஹல் கூறும்போது, ''எப்போதும் அணியில் மூத்த வீரர் இருப்பது சிறப்பான அனுபவத்தை அளிக்கும். அதுவும் தோனியின் கீழ் இளைய தலைமுறையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இருப்பது  மிகச் சிறப்பானது. அவரது ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ள எங்களுக்கு உதவின.

நான் எப்போதெல்லாம் களத்தில் பதற்றத்துடன் இருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் தோனியைப் பார்ப்பேன். அவர் எனக்கு சிறந்த யோசனைகளை வழங்குவார். தோனியிடம் பிறரை உள்வாங்கும் திறன் அதிக அளவு உள்ளது. அவர் எனது  உடல் மொழிகளை வைத்தே எனக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு ஸ்டெப்பின் பின்னால் இருந்து அறிவுரை வழங்குவார்.

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் ரோஹித் தோனியிடம் ஆலோசனை பெற்று என்னை பவர் பிளேவில் பந்துவீசக் கூறினார். இருப்பினும், நான் தோனியை ஒருமுறை பார்த்தேன். அவர் என்னிடம் ஓடிவந்து ஸ்டெம்ப்பை நோக்கி வீசு என்றார். நானும் அவ்வாறே செய்தேன். எனக்கு இமாம் உல் ஹக்கின் விக்கெட் கிடைத்தது.

இது முதல் முறை அல்ல. பலமுறை அவர் எனக்கு உதவி இருக்கிறார். அவரால்தான் எனக்கு விக்கெட்டுகள் கிடைத்தன.

நான் மட்டும் அல்ல அனைத்து பந்துவீச்சாளர்களும் தோனியிடம் களத்தில் விளையாடும்போது அவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வர்.

சில சமயம் நாங்கள் செய்யும் தவறுகளுக்கு தோனி ஸ்டெம்பின் பின்னால் இருந்து எங்களைத் திட்டுவார். விராட் கோலி சிறந்த கேப்டன் என்றாலும் அவருக்கு சந்தேகம் எற்படும்போது அவர் தோனியிடம்தான் ஆலோசனை கேட்பார். தோனி அணியில் இருப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x