Published : 27 Aug 2018 08:42 AM
Last Updated : 27 Aug 2018 08:42 AM

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 வெள்ளிப் பதக்கம்

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு நேற்று 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. இதேபோல மகளிர் 100 மீட்டர், 400 மீட்டர் ஆடவர், மகளிர் பிரிவில் 3 வெள்ளிப் பதக்கங்கள் என ஒரே நாளில் இந்தியா 5 வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியது.

ஆசிய விளையாட்டுப் போட்டி கள் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா, பாலேம்பங் நகரங்களில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் முகமது அனாஸ் 45.69 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

கத்தார் நாட்டைச் சேர்ந்த வீரர் ஹசன் அப்தலேலா 44.89 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடத்து தங்கம் வென்றார்.

மகளிர் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 2-வது இடம்பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அவர் 50.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். பஹ்ரைன் வீராங்கனை சல்வா நாசர் 50.09 விநாடிகளில் ஓடிவந்து தங்கம் வென்றார்.

ஹிமா தாஸ் 50.59 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தது, இந்திய அளவில் புதிய தேசியச் சாதனையாகும். இதே போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 11.32 விநாடிகளில் ஓடி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ஆசிய விளையாட்டின் 100 மீட்டர் பிரிவில் இந்தியா 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கம் வென்றுள்ளது. 1998-ல் இந்திய வீராங்கனை ரச்சிதா மிஸ்ட்ரி வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குதிரையேற்றம்

குதிரையேற்ற போட்டியின் தனிநபர் பிரிவில் இந்திய வீரர் பவாத் மிர்ஸா 26.40 புள்ளிகளைப் பெற்று 2-வது இடம் பிடித்தார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

ஜப்பான் வீரர் ஓய்வா யோஷியாகி 22.70 புள்ளிகளுடன் தங்கமும், சீன வீரர் ஹுவா டியான் அலெக்ஸ் 27.10 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

அணிப் பிரிவு

குதிரையேற்றப் போட்டியின் அணிப் பிரிவில் இந்தியாவின் ராக்கேஷ் குமார், ஆசிஷ் மாலிக், ஜிதேந்தர் சிங் ஆகியோர் அடங்கிய அணி 121.30 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதே பிரிவில் ஜப்பான் முதலிடமும், தாய்லாந்து அணி 3-வது இடமும் பிடித்தன.

சிந்து, சாய்னா

பாட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

மகளிர் ஒற்றையர் கால் இறுதியில் சாய்னா நெவால் 21-18, 21-16 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனாக் இந்தனானை வீழ்த்தினார். அரை இறுதியில் அவர், தாய் டிஸு யிங்கைச் சந்திக்கிறார்.

மற்றொரு கால் இறுதியில் பி.வி.சிந்து 21-11 16-21 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து வீராங்கனை நிட்சனோன் ஜிந்தபோலை தோற்கடித்தார். சிந்து, சாய்னா ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளதால் அவர்களுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

ஹாக்கி

ஹாக்கி போட்டியில் இந்திய ஆட வர் அணி தனது லீக் ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

400 மீட்டர் தடைஓட்டம்

மகளிர் 400 மீட்டர் தடை ஓட் டத்தின் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனைகள் அனு ராகவன், ஜவுனா முர்மு ஆகியோர் முன் னேறியுள்ளனர்.

இறுதிச் சுற்றுக்கான தகுதி ஓட்டத்தில் அனு ராகவன் 56.77 விநாடிகளில் பந்தய இலக்கை எட்டினார்.

ஜவுனா முர்மு 59.20 விநாடிகளில் பந்தய தூரத்தை எட்டி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

வில்வித்தை

ஆடவர் வில்வித்தை காம் பவுண்ட் அணி பிரிவில் இந்திய மகளிர், ஆடவர் அணி இறுதிச் சுற்றை எட்டி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளன.

ஆடவர் அரை இறுதிச் சுற்றில் சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் சவு கான் ஆகியோர் அடங்கிய அணி 230-227 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வென்றது. மகளிர் அரை இறுதிச் சுற்றில் இந்தியாவின் சுரேகா ஜோதி வென்னம், முஸ்கான் கிரார், மது மிதா குமார் ஆகியோர் அடங்கிய அணி 225-222 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தியது.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை சர்ஜுபாலா தேவி கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அவர் பிளைவெயிட் 51 கிலோ பிரிவில் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் மடினா கபோரோ வாவை தோற்கடித்து கால் இறு திக்குத் தகுதி பெற்றார்.

ஆடவர் வெல்டர்வெயிட் 69 கிலோ பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் மனோஜ் குமார் கிர்கிஸ்தான் வீரர் அப்துர்ரக்மான் அப்துரக்மனோவிடம், தோல்வி யடைந்தார்.

லைட்வெயிட் 60 கிலோ பிரிவில் இந்திய வீரர் சிவா தாபா, சீன வீரர் ஜுன் ஷானிடம் தோல்வி கண்டார்.

ஹேண்ட்பால்

ஹேண்ட்பால் பிரிவில் இந்திய ஆடவர் அணி, சீன தைபேயிடம் தோல்வி கண்டது. சீன தைபே 35-31 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

கனோயிங் படகுப் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணியினர் தோல்வி கண்டு வெளியேறினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-ம் நாளான நேற்று இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இருந்தது. சீனா 78 தங்கம், 59 வெள்ளி, 37 வெண்கலங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x