Published : 02 Aug 2018 11:24 PM
Last Updated : 02 Aug 2018 11:24 PM

விராட் கோலியின் உலகத்தரம் வாய்ந்த மிகப்பெரிய சதம்; விமர்சனங்களுக்குப் பதிலடி: இந்தியா 274 ரன்கள்

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் முழுதும் விராட் கோலிக்குச் சொந்தமாகியுள்ளது. 225 பந்துகளில் 22 பவுண்டரிகள் 1 சிக்சருடன் விராட் கோலி 149 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆதில் ரஷீத்திடம் ஆட்டமிழக்க இந்திய அணி 169/7 என்ற நிலையிலிருந்து கோலியின் உலகத்தரம் வாய்ந்த சத இன்னிங்ஸினால் கடைசியில் இங்கிலாந்து ஸ்கோருக்கு நெருக்கமாக வந்து 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆட்ட முடிவில் அலிஸ்டர் குக் 14 பந்துகள் ஆடி ரன் எதுவும் எடுக்காமல் கடந்த இன்னிங்ஸில் அஸ்வினிடம் எப்படி பவுல்டு ஆனாரோ அதன் ஜெராக்ஸ் காப்பி போல் இந்த இன்னிங்ஸிலும் பவுல்டு ஆக இங்கிலாந்து ஆட்ட முடிவில் 9/1 என்று உள்ளது. அதாவது முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து 22/1.

விராட் கோலி, இஷாந்த் சர்மா இணைந்து 9வது விக்கெட்டுக்காக 35 ரன்களைச் சேர்க்க உமேஷ் யாதவ் (1 நாட் அவுட்) விராட் கோலிக்கு ஸ்டாண்ட் கொடுக்க கோலி 57 ரன்களைச் சேர்த்தார். இந்தப் பார்ட்னர்ஷிப்பை மிகவும் அழகாக பில்ட் அப் செய்த விராட் கோலி இங்கிலாந்தை கடுமையாக வெறுப்பேற்றியதோடு இங்கிலாந்து ஸ்கோரை கடந்து விடும் நிலைக்குக் கொண்டு வந்தார், கடைசியில் கட் ஷாட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார், போராளி இன்னிங்ஸ்! ஆனால் 2 எளிதான கேட்ச்களை மலானும், ஜெனிங்ஸும் கோலிக்கு விட்டதன் பலனை இங்கிலாந்து அனுபவித்தனர்.

தொடக்க வீரர்களான முரளி விஜய், ஷிகர் தவண் முதல் விக்கெட்டுக்காக 50 ரன்களைச் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்த நிலையில் இடது கை ஸ்விங் பவுலர் சாம் கரன், முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகியோரை ஒரே ஓவரில் வீழ்த்தி பிறகு ஷிகர் தவணையும் எட்ஜ் செய்ய வைத்து வெளியேற்ற இந்தியா 59/3 என்று ஆனது, உணவு இடைவேளையின் போது இந்திய அணி 76/3 என்று இருந்தது. அப்போது கோலி 9 ரன்களுடனும், ரஹானே 8 ரன்களுடனும் இருந்தனர். ஒரு முறை ஏறக்குறைய பவுல்டு ஆகியிருப்பார், ஒரு முறை

பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் அபாரம்: இங்கிலாந்து விட்ட கேட்ச்கள்!

இங்கிலாந்தின் பலவீனம் கேட்ச்களை விடுவது என்று முன்னோட்டத்தில் குறிப்பிட்டிருந்தோம், இன்றும் ஏகப்பட்ட கேட்ச்களைக் கோட்டைவிட்டனர், கோலிக்கு இரண்டு சிட்டர்களை விட்டனர். அதன் பலனை அனுபவித்தனர், அலிஸ்டர் குக் பாண்டியாவுக்கு கையில் வந்த கேட்சை விட்டார். வழுக்கும் விரல்கள் கொண்ட இங்கிலாந்து பீல்டர்கள் என்ற கூற்றை நிரூபித்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ரஹானேயை பென் ஸ்டோக்ஸ் ஒரு அபாரமான ஸ்பெல்லில் ஒர்க் அவுட் செய்தார், முதலில் ஒரு பிளம்ப் எல்.பி.யை ரிவியூ செய்யாமல் ரஹானேவுக்கு விட்டனர், அது அவுட். ஆனால் அதன் பிறகு தொடர்ந்து ரஹானேயை இன்ஸ்விங்கர், அவுட்ஸ்விங்கர் என்று மாறி மாறி வீசி கடுமையாகத் திணறடிக்க கடைசியில் ஒரு பந்தை அவர் எட்ஜ் செய்ய நிர்பந்திக்கப்பட்டு ஜெனிங்ஸிடம் கேட்ச் ஆகி 15 ரன்களில் வெளியேறினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்குக்கு பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாத ஒரு இன்ஸ்விங்கரை வீசி பவுல்டு செய்தார். லேட் இன்ஸ்விங் பந்தில் கார்த்திக் ஒன்றும் செய்ய முடியாது போக் ஸ்டம்புகளை பதம் பார்த்தது.

ஹர்திக் பாண்டியாவுக்கு அலிஸ்டர் குக் ஒரு சிட்டரைக் கோட்டை விட்டார், அவர் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்து சாம் கரனின் யார்க்கருக்கு எல்.பி.ஆனார். பந்து ஷூவின் முனையைத் தாக்கியது, ஒரு வாசிம் அக்ரம் யார்க்கர் அது.

அஸ்வின் 10 ரன்களை எடுத்திருந்த போது ஆண்டர்சனின் அற்புதமான இன்ஸ்விங்கரில் அஸ்வினின் குச்சியைப் பெயர்த்தார். இந்திய அணி 169/7 என்று ஆனது. மொகமது ஷமி ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை தொட்டார் கெட்டார், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 182/8.

எட்ஜ்கள், லைஃப்கள், ஏகப்பட்ட பீட்டன்களாயினும் போராளியான கோலியின் உலகத்தர சதம்:

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிய 182/8 என்று ஷமி விக்கெட்டு போனபோது விராட் கோலி 67 ரன்களில் ஒரு முனையில் போராளியாக நின்றார்.

அனைத்து பவுலர்களையும் ஓரளவுக்கு கண்டுணர்ந்து ஆடிய விராட் கோலி, ஆண்டர்சனை மட்டும் ஒன்றுமே செய்ய முடியவில்லை, கடுமையாக பீட்டன் ஆனார். பந்துகள் ஸ்லிப் திசையில் பீல்டர் கைகளுக்குச் செல்லாமல் பல முறை முன்னதாகவே விழுந்தது, சில வேளைகளில் ஸ்லிப் பீல்டர்கள் டைவ் அடித்தாலும் பந்து தாண்டி பவுண்டரிக்குச் சென்றது.

ஒரு கட்டத்தில் ஆண்டர்சனை 43 பந்துகள் சந்தித்த விராட் கோலி வெறும் 6 ரன்களையே எடுத்தார், 41 டாட்பால்களை விட்டார். 2 ஸ்கோரிங் ஷாட்கள் ஆடியபோதும் அது எட்ஜ் ஷாட்களே. மட்டையின் வெளிவிளிம்பில் 4 முறை பட்டு சென்றது. ஒரு முறை ஸ்ட்ரைக்கிலிருந்து விடுபட்டு எதிர்முனை போனால் போதும் என்று உயிரைவெறுத்து ஓடிய போது ரன் அவுட்டிலிருந்து தப்பினார். ஆண்டர்சன் பந்தில் இவரால் ஒரு ரன் கூட எடுக்க முடியாது என்பது போல்தான் இருந்தது.

கோலி இறங்கிய போது எட்ஜ்பாஸ்டன் ரசிகர்கள் இவரை நோக்கி கேலியுடன் குரல் எழுப்பினர், கடைசியில் எழுந்து நின்று கைதட்ட வேண்டி வந்தது, இதுதான் சாம்பியன் பேட்ஸ்மென்களின் ஒரு தன்மை.

கடைசி 3 விக்கெட்டுகளுடன் சேர்த்த 105 ரன்களில் கோலி மட்டும் 92 ரன்களை எடுத்தார். அதாவது போராடுவேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற ஒரு வீரரின் சதமாகும் இது. மனவலிமையும், கிரிக்கெட் திறனும் ஆதிக்கக் குணத்தை அடக்கியும் எழுப்பியும் காட்டக்கூடிய ஒரு விசித்திர ஆகிருதியாக விளங்கினார் விராட் கோலி.

அஸ்வின் ஆட்டமிழந்த பிறகு கோலி கொஞ்சம் எதிர்த்தாக்குதல் இன்னிங்சை ஆடினார், ஆனாலும் 80களிலும் 90களிலும் கூட ஆண்டர்சனிடம் பீட்டன் ஆனார்.

டெய்ல் எண்டர்கள் வந்தவுடன் ஜோ ரூட் இங்கிலாந்து பீல்டிங்கைப் பரவலாக்கினார். ஒரு கட்டத்தில் கோலியை வீழ்த்தும் எண்ணத்தை இங்கிலாந்து கைவிட்டது போல்தான் தெரிந்தது.

மிக அற்புதமான ஒரு சதத்தை எடுத்த விராட் கோலியின் சதமாக மாற்றும் விகிதம் 71%, இதில் கேன் வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகியோரைக் காட்டிலும் வேறு ஒரு உச்சத்தில் இருக்கிறார் விராட் கோலி.

சதம் அடித்த பிறகு பவுண்டரிகளை தன் இஷ்டத்துக்கு அடித்தார், உமேஷ் யாதவ்வுடன் ஆடியது உண்மையில் ஒரு சாம்பியன் ஆட்டமே. அவருக்கு ஸ்ட்ரைக் வராமல் தானும் பெரிய ரிஸ்க் எடுக்காமல் பவுண்டரிகளை அடித்தார், கடைசியில் ரஷீத்தை ஒரு பேய் சிக்ஸ் அடித்தார்.

இன்னிங்ஸ் முழுதும் மணிக்கட்டை தளர்த்தியும் இறுக்கிப் பிடித்தும், முன்னால் வந்தும் பின்னால் சென்றும் அவர் ஆடிய ஷாட்கள், தடுப்பாட்டங்கள் நீண்ட காலத்துக்கு மறக்க முடியாத ஒரு 149 ரன்களை கோலி எடுத்து விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார், தனி மனிதராக அவர் இங்கிலாந்தை எதிர்கொண்டுள்ளார்.

22வது டெஸ்ட் சதத்தை தனது 113வது இன்னிங்ஸில் எடுத்து, டான் பிராட்மேன் (58), சுனில் கவாஸ்கர் (101), ஸ்டீவ் ஸ்மித் (108), சச்சின் டெண்டுல்கர் (114), மொகமது யூசுப் (121) ஆகியோருக்கு இடையில் புகுந்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் சாம் கரன் 4 விக்கெட்டுகளையும் ரஷீத், ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x