Published : 14 Aug 2018 05:44 PM
Last Updated : 14 Aug 2018 05:44 PM

‘டிராவிட்டை பயிற்சியாளராக்குங்கள்: ரவி சாஸ்திரியை தூக்கி எறியுங்கள்’: இந்திய அணி தோல்வியால் நெட்டிசன்கள் கடும் கோபம்

இங்கிலாந்துடன் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை இரக்கமின்றி மாற்றிவிட்டு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடியது இதில் டி20 தொடரை வென்ற இந்திய அணி, ஒருநாள் தொடரில் 2-1 என்று தோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்கி நடந்துவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சிறப்பான சதம், அரைசதத்தால், வெற்றி அருகே வந்து, 31 ரன்களில் தோல்வி அடைந்தது இந்திய அணி. இந்தப் போட்டியில் விராட் கோலியைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் மோசமாகவே விளையாடினார்கள்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஒரு இன்னிங்ஸ் 159 ரன்கள்வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. கேப்டன் விராட் கோலியும் இந்த முறை ஏமாற்றினார். முன்னணி வீரர்கள் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், ரஹானே, புஜாரா உள்ளிட்ட அனைவரும் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். அஸ்வின் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து பேட் செய்தார்.

இந்த தொடருக்கு புறப்படும் முன், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும், கேப்டன் விராட் கோலியும், எந்த களத்தையும், எந்த அணியையும் சந்திப்போம், தயக்கமில்லை என்று தெரிவித்தநிலையில் இப்போது இந்திய அணி படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

ரசிகர்களிடமும் கேப்டன் விராட் கோலி மன்னிப்பு கோரி, தங்கள் மீதான நம்பிக்கையை ரசிகர்கள் இழக்கவேண்டாம். நாங்களும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. இது குறித்து மூத்த வீரர் ஹர்பஜன்சிங் கூட ரவி சாஸ்திரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அணியின் ஒட்டுமொத்த தோல்விக்கு பயிற்சியாளரும் பொறுப்பு அவரும் தோல்விக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நெட்டிசன்கள், ரசிகர்களும் இந்திய அணி வீரர்கள் மீதும், பயிற்சியாளர் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் ஆதங்கத்தை ட்விட்டரில் பதிந்து, பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரியை மாற்றிவிட்டு, டிராவிட்டை நியமிக்க வலியுறுத்தியுள்ளனர்.

நெட்டிசன்களில் சிலர் கூறியுள்ள கருத்துக்களில் சிலவற்றை காணலாம்.

துருவ் சிறீவஸ்தவா என்பவர் கூறுகையில், ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, டிராவிட்டை கொண்டு வாருங்கள். உடற்தகுதியை வைத்து போட்டிகளில் வெற்றி பெற முடியாது. அதிகமான பயிற்சிப்போட்டிகளில் விளையாட வேண்டும் அல்லது கவுண்டி போட்டிகள் ஆட வேண்டும். தவண், ரஹானே, விஜய் ஆகியோரை நீக்கிவிட்டு, ரிஷாப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், கருண் நாயரை கொண்டு வாருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அமித் என்பவர் கூறுகையில், மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் பேட்டிங் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்க வேண்டும் பிசிசிஐ என வலியுறுத்தியுள்ளார்

அனுராக் என்பவர் பதிவிடுகையில், இந்திய அணியில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க ரவி சாஸ்திரிக்கு தெரியவில்லை, ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமியுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்

மற்றொருவர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருப்பது அணிக்குப் பேரழிவு. அவரை மாற்றிவிட்டு ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ருத்ரகேஷ் என்பவர் கூறுகையில், ரவிசாஸ்திரியையும், பந்துவீச்சுப்பயிற்சியாளர் பரத் அருணையும் நீக்கிவிட்டு ராகுல் டிராவிட்டையும், ஜாகீர்கானையும் நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோல் பலரும் ரவி சாஸ்திரிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x