

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சுரேஷ் ரெய்னா எடுத்த சதம் துணைக் கண்டத்திற்கு வெளியே எடுக்கும் முதல் சதம் ஆகும். ஒரு நாள் போட்டிகளில் அவரது 4வது சதம்.இங்கிலாந்துக்கு எதிராகவும் அவரது முதல் சதம் இதுவே.
ஒருநாள் போட்டிகளில் 10வது ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ரெய்னா, இங்கிலாந்துக்கு எதிராக 5வது ஆட்ட நாயகன் விருதாகும்.
இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தார் ரெய்னா. 29 போட்டிகளில் அவர் இங்கிலாந்துக்கு எதிராக மட்டும் 1098 ரன்களை 47.73 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
கார்டிஃப் மைதானத்தில் விராட் கோலி, ஷிகர் தவன் ஆகியோருக்குப் பிறகு சதம் எடுக்கும் 3வது இந்திய வீரர் ஆவார் ரெய்னா.
28 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை நிகழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் 4 அல்லது அதற்கும் கூடுதலான விக்கெட்டுகளை 6வது முறையாகக் கைப்பற்றியுள்ளார் ஜடேஜா.
பேட்டிங்கில் ஜடேஜா இங்கிலாந்து மைதானங்களில் வைத்திருக்கும் சராசரி 83.50.
இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்தில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற வெற்றியாகும். மேலும் கார்டிஃப் மைதானத்தில் இந்தியா 4-இல் 3 வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் இங்கிலாந்து அணி எதிரணியினரின் 300 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக இதுவரை துரத்தியதில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறை கராச்சியிலும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பிரிட்ஜ் டவுனிலும் துரத்தியதே இங்கிலாந்தின் பெரிய துரத்தல்கள்.
சவுரவ் கங்குலி, மொகமது அசாருதீனுக்குப் பிறகு அயல்நாட்டு மண்ணில் 100 ஒருநாள் போட்டிகள் விளையாடிய இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் தோனி.
ரெய்னாவும் தோனியும் ஜோடி சேர்ந்து எடுத்த 144 ரன்கள் 5வது விக்கெட்டுக்காக சேர்த்த 3வது பெரிய ஸ்கோராகும். செப்டம்பர் 11, 2011-ல் ரெய்னாவும் தோனியும் இணைந்து லார்ட்ஸில் 169 ரன்களைப் புரட்டி எடுத்ததே அதிகபட்ச ஜோடி ரன்களாகும்.
தோனியின் நேற்றைய அரைசதம் அவரது 55வது அரைசதமாகும். இங்கிலாந்துக்கு எதிராக 10வது அரைசதமாகும்.
மேலும் 5வது விக்கெட்டுக்காக ரெய்னா-தோனி செய்த சாதனை என்னவெனில் இருவரும் இணைந்து இந்த விக்கெட்டுக்காக 2091 (சராசரி 53.61) ரன்களைச் சேர்த்த்துள்ளனர்.