Last Updated : 29 Aug, 2018 09:28 PM

 

Published : 29 Aug 2018 09:28 PM
Last Updated : 29 Aug 2018 09:28 PM

110 ஆண்டுகால சர்வதேச ஹாக்கி வரலாற்றில் இல்லாத சாதனையை நிகழ்த்திய இந்திய அணி: மலேசியாவுடனும் தொடருமா கோல் மழை?

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஹாக்கி அணி சர்வதேச ஹாக்கி வரலாற்றில் இல்லாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ள நிலையில் நாளை (வியாழன்) அரையிறுதியில் மலேசியா அணியைச் சந்திக்கிறது.

கடந்த ஆசிய சாம்பியன்களான இந்திய அணி குரூப் மட்ட ஆட்டங்களில் 5 போட்டிகளில் 76 கோல்களை அடித்து புதிய வரலாறு படைத்துள்ளது.

110 ஆண்டுகால சர்வதேச ஹாக்கி வரலாற்றில் ஒரே தொடரில் எந்த அணியும் 76 கோல்களை அடித்ததில்லை. அர்ஜெண்டினா அணி 68 கோல்கள் அடித்திருந்த சாதனையை இந்திய அணி முறியடித்தது. 2004-ல் பான் ஆம் கோப்பைக்கான தொடரில் அர்ஜெண்டினா அணி இந்த 68 கோல்கள் சாதனையை நிகழ்த்தியது.

இந்தோனேசியாவை 17-0 என்ற கோல் கணக்கிலும் ஹாங்காங்கை 26-0 என்ற கோல் கணக்கிலும், ஜப்பான் அணியை 8-0 என்ற கோல் கணக்கிலும் கொரியாவுக்கு எதிராக 5-3 என்ற கோல் கணக்கிலும் இலங்கைக்கு எதிராக 20-0 என்ற கோல் கணக்கிலும் பிரிவு ஏ-யில் முதலிடம் பிடிக்க வரலாறு காணாத ஆக்ரோஷத்தைக் காட்டி ஆடியுள்ளது.

இந்நிலையில் நாளை மலேசியாவை அரையிறுதியில் சந்திக்கிறது இந்திய அணி. இந்தத் தொடரில் இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்க்கும் போது மலேசியாவை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் என்றாலும் மலேசிய அணி சாதாரணப்பட்ட அணியல்ல. பாகிஸ்தானுக்கு எதிராக 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தாலும் மலேசியா அணி மற்ற போட்டிகளில் அசத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மலேசியாவுடன் சரியாக ஆடவில்லை...ஆனால் மீண்டெழுந்தது

கடந்த ஆண்டு இந்திய அணி மலேசியாவுக்கு எதிராக சரியாக ஆடவில்லை. 2 முறை தோற்றது, ஹாக்கி உலக லீக் அரையிறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவிடம் தோற்றோம், பிறகு அஸ்லான் ஷா கோப்பை தொடரில் 1-0 என்று இந்திய அணியை வீழ்த்தியது மலேசியா.

ஆனால் அதன் பிறகு மீண்டெழுந்து 2017 டாக்கா ஆசியக் கோப்பையில் மலேசியாவை 6-2 என்றும், பிறகு இறுதிப் போட்டியில் 2-1 என்றும் வீழ்த்தி கோப்பையை வென்றது. பிறகு அஸ்லன் ஷா கோப்பையில் 5-1 என்றும் காமன்வெல்த் போட்டிகளில் 2-1 என்றும் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது.

மலேசிய அணியில் ரேஸி ரஹிம் என்ற அபாயகரமான பெனால்டி ஷாட் வீரர் உள்ளார். ஷார்ட் கார்னர்கள் மலேசியா அணியின் வலுவான பகுதி என்பதை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அறிந்திருக்கிறார். ஆகவே பெனால்டி கார்னர்களை அதிகம் வழங்கக் கூடாது என்கிறார் ஸ்ரீஜேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x