Published : 27 Aug 2018 06:14 PM
Last Updated : 27 Aug 2018 06:14 PM

557 விக்கெட்டுகளில் 361 விக்கெட்டுகள் இங்கிலாந்திலேயே: ஆண்டர்சன் சிறந்த பவுலரா?- மெக்ரா கூறுவது என்ன?

இன்னும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி கிளென் மெக்ராவை முறியடித்து உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் வீட்டில் புலி வெளியில் எலி என்பது போன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஆண்டர்சன் இதுவரை எடுத்த 557 விக்கெட்டுகளில் 361 விக்கெட்டுகள் இங்கிலாந்தில் எடுக்கப்பட்டவையே.

இதனை முன்னிறுத்தி ஆஸி. வேகப்பந்து லெஜண்ட் கிளென் மெக்ராவிடம் கேள்வி எழுப்பிய போது, டெய்லி மெய்லுக்காக அவர் கூறியது: “பந்துகள் ஸ்விங் ஆகும் சூழ்நிலைகளில் அவர் மிகச்சிறந்த பவுலர். ஆனால் ஸ்விங் ஆகாத நிலைமைகளில் அவர் கூட்டத்தோடு கூட்டமாக வீசும் ஒரு வீச்சாளராக இருந்து வருகிறார்.

ஆனால் இத்தகைய நிலை அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது, பிறகு அவர் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டதன் மூலம் வெளிநாடுகளிலும் திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

இங்கிலாந்தில் ட்யூக்ஸ் பந்தில் அவர் கில்லாடி. ஆனால் வெளிநாடுகளில் கூகபரா பந்துகள் அவர் விருப்பத்துக்கு ஸ்விங் ஆகாது, அப்போது அவர் அதை ஸ்விங் செய்வது பற்றிக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. கூகபரா பந்தில் அவர் நன்றாக வீச முடியவில்லை. அதனை அவர் கற்றார், இப்போது அவருக்கு இதில் பிரச்சினையில்லை என்றே கருதுகிறேன்.

எனவே அதிக விக்கெட்டுகள் பட்டியலில் எனக்கு மேலே இருக்கும் முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளேவுக்கு நெருக்கமாக வர முடியும். எனது சாதனையைக் கடந்த பிறகு அடுத்த இலக்கு ஆண்டர்சனுக்கு 600 விக்கெட்டுகளாக இருக்கும். அது உண்மையில் ஒரு பிரமிக்கத்தக்க சாதனைதான்.

அதன் பிறகு அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளில் இருக்கிறார். அதையும் நெருங்க முடியும். ஆனால் ஷேன் வார்னின் 708, முரளிதரனின் 800 ஆகியவற்றை நெருங்குவது கடினம்” என்றார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இரு அணிகளுக்கு எதிராக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பவுலர்களில் இடம்பெற்றுள்ளார், அதில் குறிப்பாக அவர் ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராக முறையே 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஷேன் வார்ன், இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் முரளிதரன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x