Published : 22 Aug 2018 02:51 PM
Last Updated : 22 Aug 2018 02:51 PM

பும்ராவின் பந்துகளைக் கணிக்க முடியாத இங்கிலாந்து திணறல்: அனைத்து விதங்களிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒரு விக்கெட் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என்று தங்கள் வெற்றிக்கணக்கைத் தொடங்கவுள்ளது.

இங்கிலாந்து தோற்பதைத் தவிர வேறு வழியில்லை, நேற்று 62/4 என்று சரிந்து உணவு இடைவேளையின் போது 84/4 என்று தடுமாறிய போதே இங்கிலாந்து காலாவதியாகிவிட்டது. இந்த டெஸ்ட் போட்டியில் கோலியையும் ஒன்றும் செய்யமுடியவில்லை, பும்ராவையும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆனால் பட்லர் (106), பென் ஸ்டோக்ஸ் (62) இணைந்து 169 ரன்கள் கூட்டணி அமைத்து இந்தியாவின் வெற்றியை ஒத்திப் போடச் செய்ததோடு, இருவரும் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடி மற்ற இங்கிலாந்து வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தனர். ஆனால் அதன் பிறகு பும்ராவுக்குள் ஒரு பேய் புகுந்தது, ஒரே ஓவரில் சதப் போராளி பட்லர், அடுத்த பந்தே பேர்ஸ்டோ ஆகியோரை அபாரமான உள்ளே வரும் பந்துகளில் காலி செய்தார், அதிலும் பட்லர் அந்தப் பந்தை ஆடாமல் விட முடிவெடுத்தது விசித்திரம்தான்.

பேர்ஸ்டோவுக்கு பந்து ஒரு கோணத்தில் உள்ளே வந்தது, இதனால் அவர் மிடில் அண்ட் லெக்கில் தடுத்தாட முயன்றார், ஆனால் பந்து பிட்ச் ஆகி சற்றே கோணத்தை மாற்ற பவுல்டு ஆவதைத் தவிர வேறு வழியில்லை, மிக மிக அபாரமான பந்து 80களில் இம்ரான் கான் ஸ்பெஷல் பந்து ஆகும் இது. எவ்வளவோ டாப் பேட்ஸ்மென்கள் இம்ரானின் இந்தப் பந்துக்கு காலியாகியுள்ளனர், பிறகு ஜவகல் ஸ்ரீநாத் இத்தகைய பந்துகளை வீசினார், 2004 பாகிஸ்தான் தொடரில் லஷ்மிபதி பாலாஜிக்கும் விக்கெட்டுகளைப் பெற்றுத்தந்த பந்து இதுவே.

பிறகு அபாயவீரர் கிறிஸ் வோக்ஸ் தலையை நோக்கி ஒரு பவுன்சர் வீச அவர் தடுத்தாட முயன்றார், முடியவே முடியாத பந்து அது பந்த்திடம் கேட்ச் ஆனது. வோக்ஸ் அவுட் ஆனவுடன் பென் ஸ்டோக்ஸ் புதிய பந்தில் பாண்டியாவின் அபாரமான அவுட் ஸ்விங்கருக்கு ராகுலிடம் கேட்ச் ஆனார். பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி பெரிய ஸ்விங் ஆகி உடலின் குறுக்காகச் செல்ல மட்டையை முன்னரே லெக் திசையில் மடக்கிய பென்ஸ்டோக்ஸ் ஸ்கொயர் ஆக பந்து எட்ஜ் ஆகி ராகுல் கையில் தஞ்சமடைந்தது.

இதே போன்ற ஒரு பந்துக்கு பும்ராவிடம் பிராட் (20) காலியாக 291/9 என்ற நிலையிலிருந்து ரஷித் (30), ஆண்டர்சன் (8) ஆகியோரினால் 311/9 ஆக ஆன போது ஆட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. இன்னும் ஒரு விக்கெட் இந்தியா வெற்றி பெறுவதை தடுக்க முடியாது.

முன்னதாக உணவு இடைவேளைக்கு முன்பாக இஷாந்த் ஷர்மாவை ஆட முடியவில்லை. ரவுண்ட் த விக்கெட்டில் வந்து பந்தை ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் செய்து வெளியில் எடுக்கும் பந்துகளில் இங்கிலாந்து இடது கைவீரர்களான குக், ஜெனிங்ஸ் தடவினர். ஜெனிங்ஸ் அப்படித்தான் கால்கள் இருக்கும் நினைவே இல்லாமல் இஷாந்த் பந்து ஒன்றை தொட்டார், கெட்டார், பந்தில் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்தது. குக்கிற்கும் ஒரு பந்தை ஆடியே ஆக வேண்டும் என்று வீசி வெளியே இழுத்தார் பந்தை, எட்ஜ் ஆனது மார்புயர கேட்சை ராகுல் பிடித்தார்.

ஜோ ரூட் 13 ரன்களில் பும்ராவின் ஷார்ட் ஆஃப் லெந்த் பந்து ஒன்று வெளியே செல்ல ஆடாமல் விட வேண்டிய பந்தைப் போய் மட்டையால் இடித்தார், இவரும் ராகுல் கையில் சிக்கினார். வலது புறம் பந்து அவரைக் கடந்து சென்றிருக்கும் ஆனால் இருகைகளையும் கொண்டு சென்றதால் பிடித்து ரூட்டை வெளியேற்றினார். இதுதான் பும்ராவின் முதல் விக்கெட் பிறகு இரண்டாவது புதிய பந்தில் மேலும் 4 விக்கெட்டுகளைச் சாய்த்து 85 ரன்களுக்கு 5 விக்க்ட் என்று 2வது முறையாக அயல்நாட்டுப் பிட்சில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார் பும்ரா.

ஷமி வீசிய பந்தை போப் (16), அனாவசியமாக நோண்ட 3வது ஸ்லிப்பில் அபாரமான ரிஃப்ளெக்சுடன் கோலி இடது புறம் எம்பி கடினமான முறையில் கையை ரிவர்ஸ் ஆக வைத்துப் பிடித்தார். அபாரமான கேட்ச். இங்கிலாந்து 62/4 என்று ஆனது, அதன் பிறகுதான் பென் ஸ்டோக்ஸ், பட்லர் கூட்டணி அமைத்து இந்திய அணியை கொஞ்ச நேரம் அழ அடித்த்தனர், பிறகு பும்ரா வந்தார், பாண்டியா முக்கிய விக்கெட்டைச் சாய்க்க இங்கிலாந்து தவிர்க்க முடியாத தோல்வி நிலையில் உள்ளது.

பும்ராவை கோலி எப்போதும் நம்புகிறார், அவரும் அதற்குரிய பலன்களை அளித்தார், காலியில் ஜோ ரூட்டை ஆட்டிப் படைத்தார் பும்ரா. பல லெந்த்களில் வீசினார் பந்தை உள்ளே கொண்டு வந்தார், வெளியே கொண்டு சென்றார். சில வேளைகளில் தனது டி20, ஒருநாள் உத்தியான யார்க்கர்களையும் வீசி படுத்தினார். ஒருமுறை அஸ்வினிடம் கேட்ச் ஆகியிருப்பார். வெளியே செல்லும் பந்தை ஆடப்போயும் உள்ளே வரும் பந்தை ஆடுவதா வேண்டாமா என்ற சந்தேகத்தையும் பும்ரா ரூட்டுக்கு ஏற்படுத்தினார்.

ஜோஸ் பட்லருக்கும் வந்தவுடனேயே ரூட்டுக்குப் போட்ட அதே பந்தை வீசினார், எட்ஜ் ஆனது ஆனால் ஏற்கெனவே இடது பக்க கொஞ்சம் கூடுதலாக நகர்ந்த பந்த்தினால் பிடிக்க முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் எப்படியோ நின்று விட்டனர், ஆனால் பும்ராவை தொடர்ந்து ஆட முடியவில்லை, அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தன்னால் பும்ராவின் பந்துகளைக் கணிக்க முடியவில்லை என்று பட்லரே ஒப்புக் கொண்டார்.

இங்கிலாந்தில் முதல் முறையாக ஆடுகிறார், மொத்தமாகவே 4வது டெஸ்ட் போட்டி இது அதுவும் டியூக்ஸ் பந்தில் முன்னபின்ன பரிச்சயம் இல்லாமல் இப்படி வீசுவது என்பதெல்லாம் பும்ராவிடம் பெரிய பவுலருக்கான அனைத்துத் தரங்களையும் எடுத்துரைக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி லார்ட்ஸ் தோல்வி என்ற சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை போல் உயிர்த்தெழுந்து இங்கிலாந்தை சகல விதங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x