Published : 10 Aug 2018 09:10 AM
Last Updated : 10 Aug 2018 09:10 AM

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகே சென்ற நிலையில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் முதலில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் மதிய உணவு இடைவேளை சுமார் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின்னரும் சாரல் மழை நீடித்ததால் ஆட்டத்தை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் அவுட் பீல்டும் ஈரப்பதாக இருந்ததால் டாஸ் நிகழ்வு கூட நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தேநீர் இடைவேளையின் போது மழை ஓய்ந்திருந்த நிலையில் அவுட் பீல்டில் தேங்கியிருந்த நீரை வெளியேற்றும் பணியில் மைதான பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக சிறிது நேரத்தில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி 4 நாட்களுக்குள் நடத்தப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 2-வது நாள் ஆட்டமான இன்று வழக்கமான நேரத்தை விட கூடுதலாக அரை மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கப்படும் என தெரிகிறது.

மழை காரணமாக இரு அணி வீரர்களும் போட்டிக்கு முந்தைய பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் போனது.

எனினும் இந்திய அணி வீரர் களான விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த அலாஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ் உள்ளிட்டோரும் உள்ளரங்க வலை பயிற்சியில் நேரத்தை செலவிட்டனர். இதற் கிடையே லண்டன் பகுதியில் மேலும் சில நாட்களுக்கு மழைப் பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x