

கால்லேயில் இன்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது.
யூனிஸ் கான் 133 ரன்களுடனும், ஆசாத் ஷபீக் 55 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். யூனிஸ் கான் எடுக்கும் 24வது டெஸ்ட் சதமாகும் இது. இன்சமாம் உல் ஹக் 25 சதங்களை எடுத்ததே பாகிஸ்தான் டெஸ்ட் சாதனையாக இருந்து வருகிறது.
டாஸ் வென்ற 40 வயது கேப்டன் மிஸ்பா உல் ஹக் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அது வினையாக முடிய 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் என்று பாகிஸ்தான் தடுமாறிய போது யூனிஸ் கானின் திறமையை நம்பியிருந்தது அந்த அணி.
90வது டெஸ்ட் போட்டியில் ஆடும் யூனிஸ் கான் பாகிஸ்தான் அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போது களமிறங்கினார். மிஸ்பா வழக்கம்போல் நிதானமாக ஆடி 31 ரன்களை எடுக்க இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 100 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் மிஸ்பா, ஹெராத் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு ஆசாத் ஷபிக் நன்றாக விளையாட யூனிஸ் கான் சதமெடுக்க, இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் இதுவரை 105 ரன்களைச் சேர்த்தனர்.
யூனிஸ் கான் 228 பந்துகளை இதுவரை சந்தித்துள்ளார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை அவர் அடித்துள்ளார். ஆனால் அவர் 59 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்பின்னர் பெரேராவிடம் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். இந்த எல்.பி. தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ய அதில் பந்து ஸ்டம்ப்களுக்கு மேல் சென்றது தெரியவந்தது. இதனால் நாட் அவுட் என்று தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டது.
முன்னதாக இந்த 2 டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு அறிவிக்கவிருக்கும் ஜெயவர்தனே மைதானத்தில் களமிறங்கியபோது பள்ளிக் குழந்தைகள் புடைசூழ இறங்கினார். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
147 டெஸ்ட் போட்டிகளில் 11,671 ரன்களை எடுத்து அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளார் ஜெயவர்தனே.