

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி சிறைத் தண்டனை பெற்றுத் திரும்பிய முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் லூயிஸ், சிறையில் தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட போது, நம் மனத்தைத்தான் அங்கு ஒழுங்கமைக்க வேண்டும் என்றார்.
2008-ம் ஆண்டு மே.இ.தீவுகளின் செயிண்ட் லூசியாவிலிருந்து இங்கிலாந்தின் காட்விக் விமான நிலையம் வந்திறங்கிய கிறிஸ் லூயிஸ் 140000 பவுண்டுகள் மதிப்புள்ள கொகெய்னை கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால் இங்கிலாந்தின் விதிமுறைகளின் படி அதில் பாதி ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தன் சிறைநாட்களை அவர் பகிரும் போது, “சிறையில் ஒரு விஷயத்தை நாம் ஒழுங்கமைக்க வேண்டுமெனில் அது நம் மனத்தைத்தான், அதற்காக உடல் ரீதியான கடினப்பாடுகள் கடந்து செல்லக்கூடியவை என்று நினைத்து விடாதீர்கள்.
பெரிய கடினப்பாடு நம் மனதைக் கட்டுப்படுத்துவதுதான், அந்த எதார்த்தத்துடன் நாம் எப்படி ஒத்துப் போகப்போகிறோம், நம்பிக்கையை எப்படி மனத்தளவில் காப்பாற்றி தக்கவைப்பது என்பது மிகப்பெரிய சவால்களாகும். உங்கள் தலையில் ஏறி அமர்ந்திருக்கும் இந்த அனுபவத்தை எப்படி நீங்கள் ஒழுங்கமைக்கப் போகிறீர்கள் என்பதே முக்கியம். சிறை அனுபவத்தை எதிர்மறையாகப் பார்த்தாலும் அல்லது அதனை எதிர்கொண்டு நாம் எப்படி முன்னேறிச் செல்வது என்பதாக யோசித்தாலும் எதையும் நாம் மனதில் அதனை செயற்பாங்குப் படுத்துவது கடினம். ஆகவே அங்கு நம்பிக்கை இழக்காமல் இருப்பவர்கள் உண்மையில் பாசிட்டிவானவர்களே.
ஆகவே நான் சிறையில் உளவியல், சமையல், பிளம்பிங், அரிகல் அடுக்கல், பிளாஸ்டரிங் ஆகியவை பற்றி நிறைய படித்தேன். நம்மை நாம் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டு ஏதேனும் செய்து கொண்டேயிருந்தால், நாம் இந்த நிலைமைக்கு ஆளாகிவிட்டோமே என்று மனதில் தோன்றாதிருக்கும்.
வாழ்க்கை சில வேளைகளில் போராட்டம் என்று நீங்கள் கூறலாம். ஆனால் தவறு செய்தால் முன் எப்படி இருந்ததோ அதே போன்று நேரடியாக வாழ்க்கை ஆகி விடாது. போராட்டக்காலங்கள் உண்டு, அதன் பிறகு அதனைச் சரிசெய்யும் காலங்கள் உண்டு. சிக்கல்களை விடுவிக்கும் காலங்கள் உண்டு. ஆனால் இவற்றை போராட்டமாகப் பார்க்க விரும்பவில்லை.
நான் தவறு செய்து விட்டேன், அதனால் எனக்கு சில காலம் வாழ்க்கை போராட்டமாக இருக்கப் போகிறது என்பது எனக்குத் தெரிந்தது. நமக்கும் உலகிற்கும், நட்பு, உறவு ஆகியவற்றை சரி செய்ய காலம் எடுக்கும்.
நான் புலம்பெயர்ந்தவன். 10 வயதிருக்கும் போது கயானாவிலிருந்து இங்கிலாந்து வந்தேன். சர்வதேச கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற என் கனவு நிறைவேறியது. அவர் என்னை ஒழுங்காக நடத்தியிருக்கலாம்... இவர் என்னை ஒழுங்காக நடத்தியிருக்கலாம் என்று இப்போது கூறலாம் ஆனால் என்னை 80 முறை இங்கிலாந்து அணிக்காகத் தேர்வு செய்தனர்.
நான் செய்த தவறு, அதனால் நான் யார்மீது அக்கறையாக இருந்தேனோ அவர்களையே கடினமான நேரங்களுக்குள் தள்ளியது, ஆகவே எனக்கு என் மீதே கோபம் வருகிறது, மிகவும் வெட்கப்படுகிறேன்” என்று கூறினார் கிறிஸ் லூயிஸ்.
கிறிஸ் லூயிஸ் ஒரு நல்ல ஆல்ரவுண்டர். அவர் 32 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக ஆடியிருக்க வேண்டிய திறமைசாலி என்றே பலரும் இவரை உயர்வாக நினைத்தனர். 53 ஒருநாள் போட்டிகளில் ஆடினார். போதைப்பொருள் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு, பணத்தாசைக்கு இவர் மயங்கியதாகவே அப்போது நீதிமன்றத்தில் இவர் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. சிறை என்பது லூயிஸின் வாழ்க்கையில் ஒரு வீழ்ச்சி. ஆனால் வாழ்க்கை தனக்கு என்னென்ன கொடுத்ததோ அது எல்லாவற்றையும் லூயிஸ் ஒரு இன்ப துன்ப நடுநிலைக் கொள்கையாளர்கள் போல் சமபாவனையுடன் ஏற்றுக் கொண்டு எதிர்கொண்டு மீண்டுள்ளார்.