Last Updated : 11 Aug, 2014 10:00 AM

 

Published : 11 Aug 2014 10:00 AM
Last Updated : 11 Aug 2014 10:00 AM

மூக்கில் அடிபட்ட வீரரும் மூக்குடைபட்ட அணியும்… - இந்திய அணியின் அவமானகரமான சரணாகதி

ஆட்ட நாயகன் விருதை அறிவிக்கிறார்கள். விருதுக்கு உரியவரான ஸ்டூவர்ட் பிராட் அதை வாங்கிக்கொள்ள வரவில்லை. அவர் மருத்துவமனைக்குப் போயிருந்தார். அவர் சார்பில் அவரது அணியின் தலைவர் அலாஸ்டர் குக் பெற்றுக்கொள்கிறார். வருண் ஆரோன் வீசிய ஆக்ரோஷமான எகிறு பந்து பிராடின் மூக்கை உடைத்துவிட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரால் அன்று முழுவதும் மீண்டும் மைதானத்துக்கு வர முடியவில்லை.

ஆனால் மூக்குடைபட்ட மேலும் 11 பேர் அங்கே இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் தலைகள் கவிழ்ந்திருந்தன. மான்செஸ்டர் மாகாணத்தின் ஓல்ட் டிரஃப்ஃபோர்டின் வானத்தை விடவும் அந்தப் பதினோரு பேரின் முகங்கள் இருண்டிருந்தன.

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் என்னும் கௌரவத்தை மிக இளம் வயதில் பெற்ற இந்த அணியினர் அடுத்த வாரம் தெற்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்திற்கு இந்த மழை மேகங்கள் வராதா என்று ஏங்கியவர்கள்போலக் காட்சியளித்தனர். ஐந்து நாட்கள் நடக்க வேண்டிய போட்டியில் மூன்றே நாட்களில் தோற்றுப்போன இவர்கள் போராட்டம், சவாலை எதிர்கொள்ளல், உறுதி, சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளுதல்ஆகிய சொற்களை மறந்துவிட்டவர்கள்போலக் காட்சியளித்தார்கள்.

என்னவென்று சொல்வது?

லார்ட்ஸில் பெற்ற வெற்றி பெருமைக்குரியதுதான். அத்தகைய வெற்றியைப் பெற்ற எந்த ஒரு அணியும் அந்த வெற்றியிலிருந்து உத்வேகம் பெற்று மேலும் சிறப்பாக ஆடும் முனைப்பைப் பெற்றிருக்கும். ஆனால் இந்திய அணி பெற்றது மோசமான தோல்வியை.

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் திறன் கொண்ட அணி சுதாரித்துக்கொண்டு தன் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியிருக்கும். ஆனால் இந்திய அணியோ மற்றொரு மோசமான தோல்வியை பெற்றிருக்கிறது.

வெற்றி, தோல்வி இரண்டி லுமிருந்து உத்வேகமோ, பாடமோ பெறத் தெரியாத இந்த அணியை என்னவென்று சொல்ல?

வேகப் பந்து வீச்சை ஆடத் தெரியாதவர்கள் அல்ல இந்த இளைஞர்கள். தென்னாப்பிரிக்காவிலும் நியூஸிலாந்திலும் இதை நிரூபித்தார்கள். சுழல் பந்தை ஆடத் தெரியும் என்பதையும் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் இங்கிலாந்து ஆடுகளங்களில் ஸ்விங் ஆகும் பந்துகளை ஆடுவதில் தங்களுக்கு விவரம் போதாது என்பதை இப்போது நிரூபித்திருக்கிறார்கள். எதிர் மறையான சூழல் அமையும்போது சுமாரான சுழல் பந்தைக்கூடச் சமாளிக்க முடியாது என்பதையும் நிரூபித்திருக்கிறார்கள்.

மோசமான தோல்வி

பந்தை நன்கு எகிறவைக்கும் தன்மையோ ஸ்விங்குக்கு உதவும் தன்மையோ அற்ற ட்ரெண்ட் ப்ரிட்ஜ் ஆடுகளத்தில் மட்டுமே இந்திய மட்டையாளர்கள் தொந்தரவில்லாமல் ஆடினார்கள்.

அடுத்த போட்டியில் பந்து வீச்சுக்கு உதவி புரியும் ஆடுகளத்தில் முரளி விஜய், அஜிங்க்ய ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார் ஆகியோரின் நேர்த்தியான மட்டையாட்டங்கள் இந்தியாவைக் கரைசேர்த்தன. அதிக ஸ்விங் ஆன மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட்களில் இந்தியா மோசமாக அல்ல, மிக மோசமாக அடியது. நன்றாக ஆடிக்கொண்டிருந்த விஜய், ரஹானே முதலானோரும் சறுக்கினார்கள்.

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 313 ரன் எடுக்கும் ஒரு அணியைக் காப்பாற்ற வேண்டுமென்றால் உலகிலேயே சிறந்த பந்து வீச்சாளர்கள் வேண்டும். அல்லது தொடர்ந்து நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வேண்டும். இரண்டும் இந்தியாவுக்கு அமையவில்லை.

நான்காவது டெஸ்டில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அவை எதுவுமே பலனளிக்கவில்லை. மட்டையாளர்களால் இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக 100 ஓவர்கள்கூட ஆட முடியாத நிலையில் பந்து வீச்சில் மேற்கொள்ளும் மாற்றங்கள் எந்தப் பலனையும் விளைவித்துவிடப் போவதில்லை.

சுதாரிக்குமா இந்தியா?

ஸ்விங் ஆகும் பந்துகளுக்குப் பேர்போன இங்கிலாந்தில் இந்திய மட்டையாளர்கள் பலரும் சிறப்பாக ஆடியிருக்கிறார்கள்.

முன்னணி மட்டையாளர்களைப் போலத் தொழில்நுட்ப நேர்த்தி அற்ற கபில்தேவ், வீரேந்திர சேவாக் போன்றவர்கள் தங்களுக்கே உரிய அலாதியான உத்திகளின் மூலம் இங்கே ரன் எடுத்திருக்கிறார்கள். கிரீஸுக்குள் ஆணி அடித்தது போல நின்றுகொண்டு பந்துகளைத் தயக்கத்துடன் முத்தமிட்டுக்கொண்டிருப்பது மட்டையாட்டம் அல்ல. தற்கொலை ஆட்டம். அதைத்தான் கோலி இங்கிலாந்தில் செய்துவருகிறார்.

தவனும், கம்பீரும் எந்தப் பந்தை விடுவது என்பது பற்றிய திட்டம் எதுவும் இல்லாமல் ஆடுகிறார்கள். புஜாராவின் ஆட்டத்தில் பெரும் தயக்கம் தெரிகிறது. ஸ்விங் பந்துகளை ஆடிப் பழக்கமில்லை என்று சர்வதேச அரங்கில் ஆடும் ஒரு முன்னணி மட்டையாளர் சொன்னால் அது அவமானம். சுழற்பந்துகளைக் கையாள்வதில் தேர்ச்சி பெற்ற ஓர் அணி மொயீன் அலி போன்ற சாதாரணமானதொரு சுழற்பந்து வீச்சாளரிடம் விக்கெட்களை இழக்கும் நிலைமையைத் தற்கொலை வேட்கை என்றுதான் சொல்ல முடியும்.

இந்தியாவின் புகழ்பெற்ற மட்டை வலுவின் வாரிசுகளாகப் புகழடைய விரும்பும் ஷிகர் தவன், சதீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரஹானே போன்றவர்கள் மெத்தனத்தையும் கற்றுக்கொள்ளத் தவறும் பழக்கத்தையும் விடுத்துச் சுதாரித்துக்கொள்ளாவிட்டால் இந்திய டெஸ்ட் அணி தேற வாய்ப்பில்லை.அடுத்த போட்டியில் லார்ட்ஸில் நடந்த அதிசயம் நடக்கலாம். போட்டியை வென்று தொடரைச் சமன் செய்யலாம்.

ஆனால் ஓல்ட் டிரஃப்ஃபோர்டில் எதிரணியிடம் பரிதாபகரமான சரணாகதி அடைந்ததன் அவமானத்தைப் போக்க இந்தியா மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டியிருக்கும். மூக்கில் அடிபட்ட ஸ்டூவர்ட் பிராட் அடுத்த வாரத்துக்குள் மருத்துவமனையிலிருந்து வந்து விடுவார். மூக்குடைபட்ட இந்திய அணி சுதாரித்துக் கொள்ளுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x