Published : 18 Aug 2018 09:47 AM
Last Updated : 18 Aug 2018 09:47 AM

நாட்டிங்ஹாமில் இன்று 3-வது டெஸ்ட்: தாக்குப்பிடிக்குமா இந்திய அணி?

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் இன்று தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதில் முதல் டெஸ்ட்டில் வெற்றி வாய்ப்பை இந்திய அணி கோட்டை விட்டிருந்தது. ஆனால் 2-வது டெஸ்டில் எந்தவித போராட்டமும் இன்றி எளிதாக சரணடைந்திருந்தது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் இன்று நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

அடுத்தடுத்து இரு தோல்விகளால் தொடரில் 0-2 என பின்தங்கியிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழப்பதில் இருந்து தற்போதைக்கு தப்பிக்க வேண்டுமானால் இன்று தொடங்கும் 3-வது டெஸ்டில் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த டெஸ்டில் இந்திய அணியில் அதிக மாற்றங்கள் இருக்கக்கூடும். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதியை பெற்றுள்ளதால் அவர் களமிறங்கக்கூடும்.

மேலும் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு அறிமுக வீராக ரிஷப் பந்த் சேர்க்கப்படக்கூடும். இதற்கு முன்னோட்டமாக நேற்றைய பயிற்சியின் போது ரிஷப் பந்துக்கு சில சிறப்பு பயிற்சிகளை தினேஷ் கார்த்திக் வழங்கினார். மேலும் பேட்டிங் பயிற்சியிலும் நீண்ட நேரம் ரிஷப் பந்த் நேரத்தை செலவிட்டார்.

பேட்டிங்கில் மோசமான பார்மில் உள்ள முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவண் இடம்பெற வாய்ப்புள்ளது. முரளி விஜய் கடைசியாக அயல்நாட்டு மண்ணில் விளையாடிய 10 இன்னிங்ஸ்களில் வெறும் 128 ரன்களே சேர்த்துள்ளார். இதனால் ஷிகர் தவணுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் முழு குணமடைந்துள்ளனர். ஆனால் அதேவேளையில் முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த விராட் கோலி இன்னும் 100 சதவீத உடற் தகுதியை எட்டவில்லை. எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப் பட்டு வருவதால் டாஸ் போடுவதற்கு முன்னதாக அவர், உடற்தகுதியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணியில் விளையாடும் லெவனில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேம் கர்ரனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் ஆகியோருடன் பென் ஸ்டோக்ஸூம் இணைந்து இந்திய பேட்டிங் வரிசையை மீண்டும் ஒருமுறை சிதைவுக்கு உள்ளாக்க ஆயத்தமாகி உள்ளார். முதல் இரு டெஸ்ட் போட்டியிலும் ஒட்டுமொத்தமாக ஐந்தரை நாட்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணிக்கு மீண்டும் ஒரு கடுமையான சோதனை காத்திருக்கிறது.

நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 3

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x