Published : 31 Aug 2018 04:53 PM
Last Updated : 31 Aug 2018 04:53 PM

அப்பீல் செய்வதற்கு முன்பே கொண்டாட்டம்: ராகுலின் கால்காப்பையும், தவணின் மட்டை விளிம்பையும் பிடித்த பிராட் பந்து வீச்சு: இந்தியா திணறல்

சவுத்தாம்டன், ஏஜியஸ் பவுலில் நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று கேஎல்.ராகுல், ஷிகர் தவண் விக்கெட்டுகளை ஸ்டூவர்ட் பிராட் கைப்பற்றினார்.

இன்று வந்தவுடன் ஆண்டர்சன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லெந்த் பந்தை ஷிகர் தவண் மிக அருமையாக 4வது ஸ்லிப்புக்குத் தள்ளி தட்டிவிட்டார் பந்து பவுண்டரிக்குச் சென்றது.

ராகுலும் மிக அருமையாகப் பின்னால் சென்று ஆண்டர்சன் பந்தை ஒரு பஞ்ச்-டிரைவ் ஆடி கவர் பாயிண்ட் திசையில் பவுண்டரி விளாசினார்.

ஆனால் ஆட்டத்தின் 8வது ஓவரின் 2வது பந்தில் பிராட், ராகுலின் பலவீனமான இன்ஸ்விங்கரை வீசினார், இந்தப் பந்து அது வந்த கோணத்திலேயே சென்றிருந்தால் ஒருவேளை ஸ்டம்பில் படாமல் கூட சென்றிருக்கும், ஆனால் பிட்ச் ஆகி கடைசி விநாடியில் சற்றே பந்து நேராகி பின்காலைத் தாக்கியது, கொஞ்சம் உயரம் கூடுதலாக தெரிந்தது. பந்து கால்காப்பில் பட்டவுடனேயே கொண்டாடிவிட்டார், ஆனால் தர்மசேனா வாளாவிருக்கவும் திரும்பி கொஞ்சம் கோபாவேசமாக அப்பீல் செய்தார், தர்மசேனா கையை சந்தேகமாக உயர்த்தினர். இதனையடுத்து ராகுல் ரிவியூ கேட்டார்.

ஆனால் பந்து மிடில் ஸ்டம்பைப் பதம் பார்க்கும் என்று ரீப்ளேயில் தெரிந்தது. ஒரு ரிவியூவை விரயம் செய்தார், மீண்டும் இன்ஸ்விங்கரை ஆடும்போது அரையும்குறையுமாக கால்நீட்டி பந்தைக் கோட்டை விட்டார் ராகுல். ஒரு விதத்தில் ராகுலை ஒர்க் அவுட் செய்தார் பிராட். இன்ஸ்விங்கரில் எல்.பியாவது ராகுலுக்கு இந்தத் தொடரில் இது முதல் முறையல்ல.

அடுத்ததாக ஷிகர் தவண் 23 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார், ஆனால் அவரும் கடைசியில் பிராடின் ரவுண்ட் த விக்கெட், சபலம் ஏற்படுத்திய பந்துக்கு மட்டையை தேவையில்லாமல் கொண்டு செல்லப் பணிக்கப்பட்டார். எட்ஜ் ஆனது பட்லர் கேட்ச் எடுத்தார்.

இன்று 14 ஓவர்களை ஆடி இந்திய அணி 13 ரன்களை மட்டுமே எடுத்து ராகுல், தவண் விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 35 பந்துகளில் 5 ரன்களுடன் ஆடி வருகிறார், விராட் கோலி இப்போதுதான் இறங்கியுள்ளார். இந்திய அணி 50/2.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x