

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பாலிகல் ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்கள்.
18-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடந்து வருகிறது. ஸ்குவாஷ் விளையாட்டில் மகளிருக்கான ஒற்றையர் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடந்தன.
நடப்பு சாம்பியனும், மலேசியா வீராங்கனையுமான நிகோல் டேவிட்டை எதிர்கொண்டார் இந்திய வீராங்கனையும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான தீபிகா பாலிகல். இந்தப் போட்டியில் நிகோல் டேவிட்டிடம் (7-11, 9-11, 6-11) 3-0 என்ற செட்களில் தீபிகா தோல்வி அடைந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தீபிகா பாலிகல், அரையிறுதியில் எந்தவிதமான போராட்டத்தையும் வெளிப்படுத்தாமல், முதல் 3 செட்களையும் பரிதாபமாக இழந்து தோல்வி அடைந்தார்.
மற்றொரு போட்டியில் மலேசிய வீராங்கனை சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் 1-3 என்ற கணக்கில்(10-12, 6-11, 11-9, 7-11) இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா தோல்வி அடைந்தார்.
இந்தப் போட்டியில் முதல் இரு செட்களை இழந்த ஜோஷ்னா சின்னப்பா, அடுத்த செட்டைக் கைப்பற்றி சிவசங்கரிக்கு அதிர்ச்சி அளித்தார். ஆனால், தொடர்ந்து சிவசங்கிரிக்கு ஈடுகொடுத்து ஜோஷ்னாவால் விளையாட முடியவில்லை. இதனால், 4-வது செட்டில் தோல்வி அடைந்து வெற்றியை இழந்தார்