Published : 25 Aug 2018 09:09 AM
Last Updated : 25 Aug 2018 09:09 AM

18-வது ஆசிய விளையாட்டு போட்டி: படகு, டென்னிஸில் தங்கம் வென்று இந்திய ஜோடிகள் அசத்தல்; மகளிர் கபடியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது; பாட்மிண்டனில் ஸ்ரீகாந்த் தோல்வி; ஸ்குவாஷில் 3 பதக்கம் உறுதி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவிலும், படகு போட்டியில் அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. 6-வது நாளான நேற்று டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக், டெனிஸ் எவேசேவ் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்த ஆட்டம் 52 நிமிடங்களில் முடிவடைந்தது.

ஆசிய விளையாட்டில் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது 4-வது முறையாகும். இதற்கு முன்னர் 2002 மற்றும் 2006-ல் மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஜோடியும், 2010-ல் சோம்தேவ் வர்மன், சனம் சிங் ஜோடியும் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். அரை இறுதியில் அவர், உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்தோமினிடம் 2-6, 2-6 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார்.

படகு போட்டி

படகு போட்டியில் 4 பேர் கொண்ட அணியாக கலந்து கொள்ளும் ஆடவருக்கான ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. சவரன் சிங், தத்து போகனால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 6:17.13 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தது. இந்தோனேஷியா (6:20.58) வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்து (6:22.41) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றின.

ஆடவருக்கான லைட்வெயிட் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் ரோஹித் குமார், பகவான் சிங் ஜோடி பந்தய தூரத்தை 7:04.61 நிமிடங்களில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஜப்பானின் மியுரா மஸாயுகி, மாசாஹிரோ ஜோடி (7:01.70) தங்கப் பதக்கமும், கொரியாவின் கிம் பைன்ஹூன் மற்றும் லீ மின்குக் ஜோடி (7:03.22) வெள்ளிப் பதக்கமும் வென்றது.

முன்னதாக நடைபெற்ற லைட்வெயிட் ஒற்றையர் ஸ்கல்ஸ் இறுதி சுற்றில் இந்தியாவின் துஷ்யந்த் இலக்கை 7.18.76 நிமிடங்களில் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். கொரியாவின் ஹைன்ஸு பார்க் தங்கப் பதக்கமும் (7:12.86), ஹாங்காங்கின் சுன் கன் ஷியு (7:14.16) வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஹேண்ட்பால்

ஆடவருக்கான ஹேண்ட்பாலில் இந்திய அணி 28-27 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கிரீனிட்ஜ் டி'குன்ஹா 9 கோல்களும், ஆதித்யா நட்ராஜ் 6 கோல்களும் நவீன் பூனியா, கரம்ஜித் சிங் ஆகியோர் தலா 4 கோல்களும் அடித்தனர்.

ஹீனா சித்துவுக்கு வெண்கலம்

துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இறுதி சுற்றில் அவர், 219.2 புள்ளிகள் சேர்த்தார்.

சீனாவின் வாங் கியான் 240.3 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், தென் கொரியாவின் கிம் மின்ஜங் 237.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான மனு பாகர் 176.2 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

கபடியில் வெள்ளி

மகளிர் கபடியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இரு முறை சாம்பியான இந்திய அணி இறுதிப் போட்டியில் ஈரான் அணியிடம் 24-27 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது. முதல் பாதியில் இந்திய அணி 13-11 என முன்னிலையில் இருந்த நிலையில் 2-வது பாதியின் கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்படத் தவறியது.

ஆசிய விளையாட்டில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் இந்தியா இல்லாமல் வேறு ஒரு அணி தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆடவர் பிரிவு அரை இறுதியில் இந்தியா, ஈரானிடம் தோல்வி கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010-ம் ஆண்டு சீனாவின் குவாங்ஸூ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது மகளிர் கபடி முதன்முறையாக இடம் பெற்றது. அறிமுக தொடரிலும் அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு தொடரிலும் இந்திய மகளிர் அணியே சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் தற்போது முதன்முறையாக பட்டத்தை இழந்துள்ளது.

அதேவேளையில் ஈரான் அணி வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை இரு பிரிவிலும் வீழ்த்தி சாதனை படைத்தது. இந்நிலையில் கபடியில் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் ஈரான் அணி, கொரியாவை எதிர்கொண்டது. இதில் ஈரான் அணி 26-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

வில்வித்தை

வில்வித்தையில் கலப்பு அணிகள் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி, அட்டானு தாஸ் ஜோடி 4-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் பிஷின்டி, ஓட்கோபோல்ட் பாட்டர்ஹூயா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

அதேவேளையில் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி 155-147 கணக்கில் ஈராக்கின் பாத்திமா சாத் மஹ்மூத் , இஷாக் இப்ராஹிம் முகமது ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

ஆனால் கால் இறுதியில் அபிஷேக் வர்மா, சுரேகா ஜோடி 153-155 என்ற கணக்கில் ஈரானின் ஹோர்பானி, நிமா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

ஸ்குவாஷ்

ஸ்குவாஷில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் அரை இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் அவர், 3-0 என்ற கணக்கில் ஜப்பானின் மிசாகி கோபயாஷியை வீழ்த்தினார். மற்றொரு முன்னணி வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பாவும் அரை இறுதியில் கால்பதித்தார்.

அவர், கால் இறுதியில் 3-1 என்ற கணக்கில் ஹாங் காங்கின் ஹோ லிங் ஷானை வீழ்த்தினார். இதேபோன்று ஆடவர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோஷல் கால் இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங்கை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இவர்கள் 3 பேரும் அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் வெளியேற்றம்

பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 8-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி காந்த் 21-23, 19-21 என்ற நேர் செட்டில் 28-ம் நிலை வீரரான ஹாங்காங்கின் வின்சென்ட் வாங் விங்கிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாயி 12-21, 21-15, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் வாங்ஷரோனிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 21-17, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் சுமார் ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் போராடி மலேசியாவின் மீ குவான் சோவ், மெங் யீன் லீ ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.

தீபா கர்மகார் ஏமாற்றம்

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸில் மகளிருக்கான பேலன்ஸ் பீம் இறுதி சுற்றில் இந்தியாவின் தீபா கர்மகார் 12.500 புள்ளிகள் பெற்று 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். சீனாவின் யிலி சென் 14.600 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், வடகொரியாவின் கிம் சு ஜாங் 13.400 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சீனாவின் ஜின் ஜாங் 13.325 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இம்முறை ஜிம்னாஸ்டிக்ஸில் இந்திய அணி ஒரு பதக்கமும் கைப்பற்றாமல் நாடு திரும்புகிறது.

தீபா கர்மகார் வால்ட் பிரிவில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேற்றப்பட்டிருந்தார். அதேவேளையில் மற்ற இந்திய வீராங்கனைகளான அருணா புத்தா ரெட்டி, பிரணதி ஆகியோர் வால்ட் பிரிவில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய போதும் 7-வது மற்றும் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. ஆடவர் பிரிவில் ஆஷிஸ் குமார் உள்ளிட்ட 4 இந்திய வீரர்களும் சோபிக்கத் தவறினர்.

பென்காக் சிலாட்

தற்காப்பு கலையான பென்காக் சிலாட்டில் ஆடவருக்கான கால் இறுதியில் இந்தியாவின் நோரெம் பாய்னோவா 0-5 என்ற கணக்கில் பிலிப்பைன்ஸின் டுமான் டைன்ஸிடம் தோல்வியடைந்தார்.

குத்துச்சண்டை

ஆடவருக்கான குத்துச்சண்டையில் பிளைவெயிட் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி 0-5 என்ற கணக்கில் ஜப்பானின் ரியோமி தனகாவிடம் தோல்வியடைந்தார். அதே வேளையில் 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மனோஜ் குமார் 5-0 என்ற கணக்கில் பூட்டானின் சங்காய் வாங்டை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

நீச்சல்

நீச்சலில் ஆடவருக்கான 50 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டிரோக் பிரிவில் இந்தியாவின் சந்தீப் சேஜ்வால் பந்தய தூரத்தை 27.98 விநாடிகளில் கடந்து 7-வது இடம் பிடித்தார்.

பளு தூக்குதல்

மகளிருக்கான பளு தூக்குதலில் 63 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ராக்கி ஹல்டர் ஏமாற்றம் அளித்தார். ஸ்நாட்ச் பிரிவில் மூன்று முயற்சிகளிலும் 93 கிலோ எடையை தூக்குவதில் ராக்கி ஹல்டர் தேர்ச்சி பெறத் தவறினார். வட கொரியாவின் யோ சிம் கிம் 250 கிலோ எடையை தூக்கி (113 + 137) தங்கப் பதக்கம் வென்றார்.மற்றொரு வட கொரிய வீராங்கனையான சிம் சோவ் 238 கிலோ எடையை தூக்கி (105+133) வெள்ளிப் பதக்கமும், தாய்லாந்தின் ரட்டனாவான் 225 கிலோ எடையை தூக்கி (102+123) வெண்கலப் பதக்கமும்  கைப்பற்றினர்.

ஹாக்கியில் ஹாட்ரிக் வெற்றி

ஆடவர் ஹாக்கியில் இந்தியா 8-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. இந்திய அணி தரப்பில் ரூபிந்தர் பால் சிங், மன்தீப் சிங் ஆகியோர் தலா இரு கோல்களும் தில்பீரித் சிங், விவேக் சாகர், எஸ்.வி.சுனில், ஆகாஷ் தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் ஆட்டத்தில் இந்தியா 17-0 என்ற கணக்கில் இந்தோனேஷியாவையும், 2-வது இடத்தில் 26-0 என்ற கணக்கில் ஹாங்காங்கையும் வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x