Published : 01 Aug 2018 02:52 PM
Last Updated : 01 Aug 2018 02:52 PM

அடுத்த சாதனைக்கு தயாராகும் விராட் கோலி: இங்கிலாந்து டெஸ்ட்டில் நடக்குமா?

 இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க இருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அந்த மைல்கல்லைக் கோலி எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆனால், 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித்தொடர் இன்று தொடங்குகிறது.

முதல் ஆட்டம் பர்மிங்ஹாமில் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, 23 ரன்கள் சேர்த்தால், இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 1000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் கோலி இணைவார்.

இங்கிலாந்துக்கு எதிராக தற்போது விராட் கோலி 977 ரன்களுடன், சராசரியாக 44.40 ரன்களுடன் உள்ளார். ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 23 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அந்தச் சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை இந்திய வீரர்கள் 12 பேர் இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சச்சின் டெண்டுல்கர் 7 சதம், 13 அரை சதம் உள்பட 2,535 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து, சுனில் கவாஸ்கர் (2,483 ரன்கள்), ராகுல் டிராவிட்(1,950), குண்டப்பா விஸ்வநாத் (1,880), திலிப் வெங்சர்க்கர் (1,589), கபில் தேவ் (1,355), முகம்மது அசாருதீன் (1,278), விஜய் மஞ்ச்ரேக்கர் (1,181), மகேந்திர சிங் தோனி (1,157), பரூக் எஞ்சினியர் (1,113) ஆகியோர் ஆயிரம் ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிராக 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 9 ஆட்டங்கள் உள்நாட்டிலும், 5 போட்டிகள் இங்கிலாந்திலும் விளையாடியுள்ளார்.

உள்நாட்டைப் பொறுத்தவரை கோலி இங்கிலாந்துக்கு எதிராகச் சிறப்பாக பேட் செய்துள்ளார். 9 போட்டிகளில் 3 சதங்கள், 2 அரைசதங்கள் என 843 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்தில் கடந்த 2014-ம் ஆண்டு சென்ற கோலி, 5 போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த விராட் கோலி மோசமாக பேட் செய்தார். இந்த முறையை கோலி தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து வந்துள்ளதால், கோலியும், இந்திய அணியும் சாதிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

இங்கிலாந்தைத் தவிர்த்துப் பார்க்கையில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விராட் கோலி சிறப்பாக பேட் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 992 ரன்கள் குவித்துள்ளார், இதில் 5 சதங்கள் அடங்கும்.

தென் ஆப்பிரிக்க மண்ணில் 5 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் உள்ளிட்ட 558 ரன்கள் விராட் கோலி சேர்த்துள்ளார். நியூசிலாந்தில் 2 போட்டிகளில் விளையாடிய கோலி, ஒரு சதம் உள்ளிட்ட 214 ரன்கள் சேர்த்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x