Published : 27 Aug 2018 04:42 PM
Last Updated : 27 Aug 2018 04:42 PM

உலகசாதனைக்கு இன்னும் 7 விக். தான்; தன்னைக் கடந்த பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சனை முறியடிக்கப் போவது யார்?: கிளென் மெக்ரா பதில்

டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா. இவரது விக்கெட்டுகள் எண்ணிக்கை 563. ஜேம்ஸ் ஆண்டர்சன் இதனைக் கடந்து உலகின் அதிசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இன்னும் 7 விக்கெட்டுகளே தேவை.

இந்தியா-இங்கிலாந்து தொடரின் 4வது டெஸ்ட் போட்டி சவுத்தாம்டனில் வரும் வியாழனன்று தொடங்க இருக்கிறது, இன்னமும் ஒரு டெஸ்ட் உள்ளது என்பதால் கிளென் மெக்ராவை 2வது இடத்துக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் தள்ளி விடுவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர்.

2007-ல் கிளென் மெக்ரா தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வை முடித்துக் கொள்வதாக அறிவித்த போது 563 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டி வரலாறு படைத்தார்.

இந்நிலையில் டெய்லி மெய்லில் கிளென் மெக்ரா கூறுபோது, “ஜிம்மி ஆண்டர்சன் மீது எனக்கு நிரம்ப.. நிரம்ப மரியாதை உள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள், ஒருமுறை என் 563 விக்கெட்டுகள் சாதனையை அவர் கடந்து விட்டால் அவரை முறியடிக்க யாராலும் முடியாது என்றே நான் கருதுகிறேன்.

சாதனைகள் எப்போதும் பெருமைக்குரியவையே, உலகில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறேன் என்பது எனக்கு பெருமையாகவே உள்ளது. ஆனால் எந்த ஒரு உச்சமும் கடக்கப் பட வேண்டியதே.

ஜிம்மி ஆண்டர்சன் என்னைக் கடந்து சென்றால் அதுவும் எனக்குப் பெருமையே. எந்த நாட்டிலிருந்து வந்தாலும் வேகப்பந்து வீச்சாளர் ஒன்றுபட வேண்டும்.

என்னைக் கடந்த பிறகு அவர் எங்கு போய் நிறுத்துகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்தக் காலத்து கிரிக்கெட்டின் தன்மையும், ஏகப்பட்ட டி20 கிரிக்கெட்டுகளும் ஆடப்பட்டு வரும் நாளில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை உடைக்கவே முடியாது என்றே தோன்றுகிறது.

வேகப்பந்து வீச்சாளராக இருப்பது மிகவும் கடினமான பணியாகும். களத்துக்கு வெளியே நாங்கள் மேற்கொள்ளும் கடினம் உழைப்பு மக்களுக்கு தெரியாது. மற்றவர்களைக் காட்டிலும் நாங்கள்தான் களத்துக்கு வெளியே உழைப்பதில் வலியை அதிகமாக உணர்கிறோம்.

15 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்னமும் டாப்பில் இருக்கிறார். ஏகப்பட்ட ஓவர்களை வீசியுள்ளார், இது அவரது உழைப்பையும் மன உறுதியையும் வெளிப்படுத்துகிறது.

ஆண்டர்சன் ஒரு உயர்தரப் பவுலர் என்று நான் எப்போதுமே கூறிவந்திருக்கிறேன். இரு தரப்பிலும் பந்துகளை ஸ்விங் செய்பவர். இது மரபான ஸ்விங் பவுலிங் என்றாலும் அது ஒரு கலை. நிறைய பவுலர்கள் இவரைப்போல் இல்லை. இவரை விட்டால் நான் வாசிம் அக்ரமை மட்டும்தான் கூறுவேன். அவரும் கிரிக்கெட்டின் கிரேட்.

இப்போதைக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இளைஞர் போல் குதூகலத்துடன் வீசுகிறார். வெயிட் போடவில்லை. எப்போதும் போல் தாகத்துடனும் வலுவுடனும் வீசுகிறார்.

நான் கூட 1000 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற தாகத்துடன் தான் கடைசி வரை இருந்தேன். ஆனால் மேட்ச் முடிந்த பிறகு வீட்டுக்குச் சென்று படுத்து எழுந்த போது எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. 124 போட்டிகளுக்குப் பிறகு அந்தத் தொடர் முடிந்தவுடன் ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்தேன்” என்றார் மெக்ரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x